கேரள மாநிலம், பத்தனம்திட்டா மாவட்டம், திருவல்லா நகராட்சி அலுவலகத்தில் வருவாய்த் துறை அலுவலகத்தின் ஆண் ஊழியர்களும், பெண் ஊழியர்களும் சேர்ந்து ஃபைல்களை எடுத்துச் செல்வது, வேலையில் ஈடுபடுவது போன்ற வீடியோக்களை எடுத்து, அதை ரீல்ஸாக வெளியிட்டனர். மோகன் லால் கதாநாயகனாக நடித்த தேவதூதன் சினிமாவின் `பூவே பூவே பாலப்பூவே” எனத் தொடங்கும் பாடலின், ‘ஆரு நீ லைலயோ… பிரேம செளந்தர்யமோ… ஆரு நீ மஜ்னுவோ ஸ்நேக செளபாக்யமோ…’ என்ற வரிகள் இடம்பெற்றிருந்த அந்த ரீல்ஸ் வைரலானது. மக்களுக்கு பணி செய்ய வேண்டிய அரசு ஊழியர்கள், அரசு அலுவலகத்தில் வைத்து வீடியோ எடுத்து ரீல்ஸ் வெளியிட்டது தவறு என்ற ரீதியில் விவாதம் கிளம்பியது. இதையடுத்து பெண் ஊழியர்கள் உள்ளிட்ட 8 ஊழியர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி இருந்தார் திருவல்லா நகராட்சி செயலாளர். மேலும், அலுவலக சமயத்திலோ, அலுவலகத்துக்குச் சென்ற பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும் விதமாகவோ வீடியோ எடுக்கப்பட்டு ரீல்ஸ் வெளியிட்டிருந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், நோட்டீஸுக்கான விளக்கம் திருப்திகரமானதாக இல்லாமல் இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அந்த நோட்டீஸில் கூறப்பட்டிருந்தது.
இந்த விவகாரம் கேரளா மாநிலம் முழுவதும் எதிரொலித்ததை அடுத்து நகராட்சி ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டது. ஆனால், ரீல்ஸ் வெளியிட்ட ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கூடாது என கேரள மாநில உள்ளாட்சித்துறை அமைச்சர் எம்.பி.ராஜேஷ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அமைச்சர் எம்.பி.ராஜேஷ் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “திருவல்லா நகராட்சி ஊழியர்கள் ரீல்ஸ் வெளியிட்டது சம்பந்தமாக உள்ளாட்சித்துறை மாவட்ட அதிகாரி மற்றும் நகராட்சி செயலாளரிடமிருந்தும் விளக்கம் கேட்கப்பட்டது. அவர்களிடம் இருந்து பெறப்பட்ட விவரங்களின் அடிப்படையில் ஞாயிற்றுக்கிழமை ரீல்ஸ் வெளியிடப்பட்டது தெரியவந்துள்ளது. மழைக்கால நடவடிக்கைகள் சம்பந்தமாக அவசர பணியாக மாவட்ட கலெக்டரின் அறிவுறுத்தல்படி அன்று ஊழியர்கள் அலுவலகத்துக்குச் சென்று வேலை செய்துள்ளனர். அலுவலக நடவடிக்கைக்கு பாதிப்பு ஏற்படாதவகையில் ரீல்ஸ் வெளியிட்டதாக தெரியவந்துள்ளது.
GIPHY App Key not set. Please check settings