கேரள மாநிலம், திருவனந்தபுரம் பாப்பனங்கோடு பகுதியை சேர்ந்தவர் தீபு (44). குவாரி நடத்திவரும் தீபு, கழுத்து அறுத்து கொலைச்செய்யப்பட்ட நிலையில் கடந்த திங்கள்கிழமை களியக்காவிளையில் காருக்குள் சடலமாக மீட்கப்பட்டார். இந்த கொலை குறித்து போலீஸார் நடத்திய விசாரணையில் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த அம்பிளி என்பவரை போலீஸார் கைது செய்துள்ளனர். கொலை வழக்கு உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் சம்பந்தப்பட்ட அம்பிளி சிறையில் இருந்து வெளியே வந்தபிறகு தீபு-வுடன் நட்பாக பழகிவந்ததாக கூறப்படுகிறது. அம்பிளி தனது வாக்குமூலத்தில் மாற்றி மாற்றி கூறுவதாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. இது குறித்து போலீஸ் தரப்பில் கூறுகையில், “திருவனந்தபுரம் பாப்பனங்கோடு பகுதியை பூர்வீகமாகக்கொண்ட தீபு, கல்குவாரி மற்றும் கிரஷர் நடத்திவந்துள்ளார். கடந்த ஒன்றரை ஆண்டுகளாக செயல்படாமல் கிடந்த கிரஷரை அடுத்த மாதம் முதல் இயக்குவதற்கான முயற்சியில் ஈடுபட்டிருந்தார். அதற்காக ஒரு ஜே.சி.பி மற்றும் சில பொருட்கள் வாங்குவதற்காக கோவைக்குச் செல்வதாக திட்டமிட்டார். ஞாயிற்றுக்கிழமை காலையில் அவர் புறப்பட்டுச் செல்வதாக இருந்தது. அவருடன் ஒர்க்ஷாப் சூப்பர்வைசர் அனில்குமாரும் செல்வதாக கூறியிருந்தார். திடீரென பயணத்தை இரவு நேரத்துக்கு மாற்றினார் தீபு. எனவே அனில்குமார் உடன் வர இயலாது என தெரிவித்துள்ளார். இதையடுத்து நெய்யாற்றின்கரை பகுதியைச் சேர்ந்த ஜே.சி.பி ஆப்பரேட்டர் ஒருவர் வழியில் தன்னுடன் வருவதாக கூறிவிட்டு ஞாயிற்றுக்கிழமை இரவு வீட்டில் இருந்து பத்து லட்சம் ரூபாயுடன் காரில் புறப்படுள்ளார் தீபு. இதற்கிடையே திங்கள்கிழமை காலையில் களியக்காவிளை அருகே காரில் கொலைச்செய்யப்பட்ட நிலையில் தீபுவின் உடல் கண்டுபிடிக்கப்பட்டது. அவரது காரில் இருந்த 10 லட்சம் ரூபாயும் காணாமல்போயுள்ளது. ஓட்டுனர் இருக்கையில் அமர்ந்திருந்த தீபுவை பின் சீட்டில் இருந்தபடி யாரோ கழுத்தை அறுத்திருக்கலாம் என்ற சந்தேகம் ஏற்பட்டது.
அம்பிளியிடம் நடத்தப்பட்ட விசாரணையில், தீபு-வுக்கு அதிகமாக கடன் ஏற்பட்டுவிட்டதாகவும், அதை சமாளிக்க முடியாத அவர் தற்கொலை செய்துகொள்ள முடிவு செய்ததாகவும், தற்கொலை செய்தால் இன்ஸூரன்ஸ் பணம் கிடைக்காது என யோசித்ததாகவும் கூறினார். மேலும், தன்னை யாராவது கொலை செய்தால் இன்ஸூரன்ஸ் பணம் குடும்பத்தினருக்கு கிடைக்கும் என்பதால் தன்னை கொலைச் செய்யும்படி தீபுவே கூறியதாகவும், அதனால் அவருக்கு வலிக்காமல் இருக்க மயக்க மருந்து கொடுத்து, ஆபரேஷனுக்கு பயன்படுத்தும் கத்தியை பயன்படுத்தி கழுத்தை அறுத்து கொலை செய்ததாகவும் அம்பிளி கூறியுள்ளார். மற்றொருமுறை விசாரணையில், என்ன ஆனாலும் கொலைச் செய்யச்சொன்னவர்கள் பற்றி வெளியே கூறமாட்டோம் எனத் தெரிவித்துள்ளார்.
GIPHY App Key not set. Please check settings