அந்தக் காலத்தில் மக்கள் தங்களுக்கு தெரிந்த தகவல்களைப் பதிவு செய்து, அதனை மற்றவர்களுக்கு கடத்துவதற்கான கருவியாக கல்வெட்டுகள் மற்றும் ஓலைச்சுவடிகளைப் பயன்படுத்தியுள்ளனர்.
முதலில் கல்வெட்டுகளைப் பயன்படுத்தியவர்கள் எளிதில் கைகளில் எடுத்துச் செல்வதற்காக ஓலைச்சுவடிகளில் எழுதும் முறையை உருவாக்கி பயன்படுத்தி இருக்கின்றனர். அதன் பிறகு அச்சில் எழுதும் முறை வந்து இன்றைக்கு டிஜிட்டல் வரை வளர்ச்சியடைந்திருக்கிறது. ஆனால் இன்றும் ஓலைச்சுவடிக்கானத் தேவையை அறிந்து பல ஆய்வாளர்கள் அதனை தேடிப் பாதுகாத்து ஆய்வு செய்து வருகின்றனர்.
நமக்கு முந்தையக் காலங்களில் வாழ்ந்த மக்கள் பலர் ஓலைச்சுவடியின் முக்கியத்துவத்தை அறியாமல் ஓடும் ஆறுகளில் போட்டது , தீயில் கொளுத்தியது போன்ற பல கதைகளை கேட்டிருப்போம். ஓலைச்சுவடிகளில் எழுதப்பட்ட தமிழ் இலக்கியங்களை மீனாட்சி சுந்தரம், உ.வே.சா போன்ற பல்வேறு அறிஞர்கள் தேடித் தேடி கண்டுபிடித்து தமிழுக்கு மீட்டுக் கொடுத்ததை பள்ளியில் படிக்கும் போது நிச்சயம் தமிழாசிரியர் சொல்லியிருப்பார்.
ஓலைச்சுவடியை எப்படி பாதுகாப்பது? அதோட தேவையையும் முக்கியத்துவத்தையும் பற்றி பேசத் தொடங்கினார் ஓலைச்சுவடி பாதுகாப்பாளர் அய்யப்பன், “எனக்கு சொந்த ஊரு மயிலாடு துறை. நான் ஓவியத்துல முதுகலை பட்டம் (MFA) வாங்கியிருக்கேன். லக்னோல கொஞ்ச மாசம் பழைய பொருட்களை எப்படி பாதுகாத்து பராமரிக்கனுங்கிறதைப் பத்தி படிச்சிருந்தேன். அதுக்கு அப்புறம் டாக்டர் அம்பேத்கர் பயன்படுத்திய பொருட்களைப் பராமரிச்சிருக்கேன். ஒரு ஐந்து வருசமா ஓலைச்சுவடிகளை பாதுகாத்து பராமரிக்கிற பணியை செஞ்சிட்டு வர்றேன்.
ஓலைச்சுவடிகள் 400 வருஷம் வரைக்கும் இருக்கும். அதுக்கப்புறம் அதோட காலம் முடிஞ்சது. ஓலைச்சுவடிகளை நம்ம கையில எடுத்துப் பயன்படுத்துறதனால கிழிசல் ,எழுத்துக்கள் மங்குறது, வியர்வை பட்டு மங்குறது , பங்கஸ்னு நிறைய பிரச்னைகள் இருக்கிறது. அதனால, அதை சரியா பராமரிக்க வேண்டிய அவசியம் இருக்கு. அந்தக் காலத்துல ஓலைச்சுவடிகளை வசதி இருக்கிறவங்க ஒரு மாதிரியும் வசதி இல்லாதவங்க ஒரு மாதிரியுமா இரண்டு விதமா பாதுகாத்து பராமரிச்சிருக்காங்க. வசதி இருந்தவங்க ஏற்கெனவே ஒரு மரப்பெட்டியில தான் ஓலைச்சுவடிகளை வச்சிருப்பாங்க. சந்தனத் தைலம், லெமன் கிராஸ், நல்லெண்ணெய்ல மஞ்சள் சேர்த்து ஓலைச்சுவடிகளில் தேய்ச்சு விடுவாங்க.
இதனால அதுல எந்த பிரச்சனையும் ஏற்படாது. அதைப்போல ஓலைச்சுவடிகளை வீடுகள்ல இருந்த பூசை அறைக்குள்ள வைப்பாங்க. பூசை அறைக்குள்ள இருக்கிற சாம்பிராணி, குங்குமம், திருநீரு எல்லாம் காற்றோட ஈரப்பதத்தை அளவா வச்சிருக்கும். அது இருக்கிறதனால ஓலைச்சுவடிகள் பாதிப்படையாம இருக்கும் அதனால பூஜை அறைகள்ல வச்சாங்க. சாதாரண மக்கள் ஓலைச்சுவடிகளை எப்படி பராமரிச்சங்கனா வீட்டு உத்திரத்துல ஓலைச்சுவடிகளை மொத்தமா கட்டி மேல் தொங்க விட்டிடுவாங்க. யாரும் எடுத்துட்டு போகமுடியாது தூசி வராது.
அதைப்போல அடுப்பங்கரைக்கு மேல நடுவுல கட்டி தொங்கவிடுவாங்க. அங்க காற்றோட அளவு சரியா இருக்கும்கிறதால அங்க தொங்க விட்டு ஓலைச்சுவடிகளைப் பராமரிச்சிட்டு வந்தாங்க. இப்போ உள்ள காலத்துல நம்ம லெமன் கிராஸ் ஆயில் பயன்படுத்திதான் ஓலைச்சுவடிகளைப் பராமரிக்கிறோம். இப்போ ஓலைச்சுவடிகளைப் பராமரிச்சு பாதுகாக்கிறதுங்கிறது ஓலைச்சுவடிகளில் எழுதப்பட்ட மருத்துவ நூல்கள் எல்லாமே அந்த அந்த சூழலுக்கு தகுந்தப்படி மக்கள் கிட்ட இருந்த அனுபவ அறிவை வச்சி எழுதப்பட்டதுதான். அந்த ஒவ்வொரு இடங்களிலும் அந்த இடத்துல உள்ள மருத்துவர்களால் எழுதப்பட்டிருக்கும். அதனால ஓலைச்சுவடிகள் ரொம்ப முக்கியமான மக்களோட ஆணவங்களாக இருக்குது.
இப்ப நம்ம ஓலைச்சுவடிகளுக்கு லெமன் கிராஸ் ஆயில் கொடுத்து தான் பராமரிக்கிறோம். ஓலைகள் உடனே உடைஞ்சி விழக்கூடாதுன்னு லெமன் கிராஸ் ஆயில் தடவுவோம். ஓலைச்சுவடிகள்ல தண்ணீர் பட்டதுன்னா எல்லாத்தையும் அரிச்சு எடுத்திடும். தண்ணினால தான் முதல் பாதிப்பு ஏற்படும். அதுல இருந்து பாதுகாக்குறது அவசியம். ஓலைச்சுவடிகளை 18°C ல இருந்து 21°C வரைக்கும் நம்ம வைக்கனும்.
யார் வீட்டுலயாவது ஓலைச்சுவடிகள் இருந்துதுனா உங்களால பராமரிக்க முடியாதுன்னா ஓலைச்சுவடிகள் காப்பகத்துக்குக் கொண்டு போய் கொடுங்க அவங்க அதைப் பராமரிச்சு பாதுகாத்து வச்சிருப்பாங்க. தேவைப்படுறவங்க அதை பயன்படுத்திக்குவாங்க” என்று ஓலைச் சுவடிகளைப் பாதுகாப்பது குறித்து பகிர்ந்து கொண்டார்.
GIPHY App Key not set. Please check settings