in , , ,

கள்ளழகர் கோயில் சித்திரைத் திருவிழா…….

‘கோவிந்தா, கோவிந்தா’ என்ற முழக்கங்களுடன் தரிசனம்………….

கள்ளழகர் கோயில் சித்திரைத் திருவிழாவின் 5ம் நாளான இன்று சித்திரை பவுர்ணமியன்று மதுரை ஆழ்வார்புரம் வைகை ஆற்றில் அதிகாலை 5.48 மணியளவில் கள்ளழகர் பச்சை பட்டு உடுத்தி தங்கக் குதிரை வாகனத்தில் எழுந்தருளினார். அப்போது ஆற்றில் திரண்டிருந்த லட்சக் கணக்கான பக்தர்கள் விண்ணதிர ‘கோவிந்தா, கோவிந்தா’ என்ற முழக்கங்களுடன் தரிசனம் செய்தனர்.

மதுரை அழகர்கோவில் கள்ளழகர் கோயில் சித்திரைத் திருவிழா ஏப்.27-ல் தொடங்கி மே.6ம் தேதி வரை நடைபெறுகிறது. முதல் இரண்டு நாட்களான ஏப்.27, ஏப்.28 தேதிகளில் மாலை நேரத்தில் சுந்தர ராஜ பெருமாள் திருக்கல்யாண மண்டபத்தில் எழுந்தருளினார். மூன்றாம் நாள் (ஏப்.29) சுந்தரராஜ பெருமாள், மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் அளிப்பதற்காக கள்ளர் திருக்கோலத்தில் கண்டாங்கி சேலை உடுத்தி, தலையில் கொண்டை, நெற்றியில் சூலாயுதம் போன்ற ஆயுதம், இடுப்பில் ஜமதாடு, கையில் வளைத்தடி, நேரிக்கம்பு ஆகியவற்றுடன் கள்ளழகராக தங்கப் பல்லக்கில் மதுரைக்கு புறப்பட்டார். வழிநெடுகிலும் பல்வேறு மண்டகப்படிகளில் எழுந்தருளினார்.

நான்காம் நாள் (ஏப்.30) மதுரை மாநகர எல்லையான மூன்று மாவடியில் அதிகாலை 5.30 மணியளவில் கள்ளழகருக்கு எதிர்சேவை நடைபெற்றது. இதில் பல்லாயிரக் கணக்கான பக்தர்கள் கள்ளழகரை எதிர்கொண்டு வரவேற்று தரிசனம் செய்தனர்.

பின்னர் புதூர் மாரியம்மன் கோயில், ரிசர்வ் லைன் மாரியம்மன் கோயில், அவுட்போஸ்ட் மாரியம்மன் கோயில், அம்பலகாரர் மண்டகப்படிகளில் எழுந்தருளி, இரவு 8.30 மணியளவில் தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாசலபதி கோயிலில் எழுந்தருளினார். அங்கு திருமஞ்சனமாகி தங்கக் குதிரை வாகனத்தில் எழுந்தருளி, ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் நாச்சியார் சூடிக்கொடுத்த மாலையை அணிந்துகொண்டார்.

இன்று (மே 1) அதிகாலை கோயிலில் இருந்து புறப்பாடாகி தல்லாகுளம் கருப்பணசாமி கோயில் முன்பு 2.30 மணியளவில் ஆயிரம் பொன் சப்பரத்தில் எழுந்தருளினார். அங்கிருந்து ஆழ்வார்புரம் வைகை ஆறு நோக்கி தங்கக் குதிரை வாகனத்தில் புறப்பட்டார். வழிநெடுகிலும் திரண்டிருக்கும் லட்சக்கணக்கான பக்தர்களின் வரவேற்றனர்.

அப்போது கள்ளழகரை வரவேற்கும் வகையில் எழுத்தாணிக்காரத் தெரு வீரராகவ பெருமாள் வெள்ளிக் குதிரை வாகனத்தில் வைகை ஆற்றில் 4 மணியளவில் எழுந்தருளினர். ஆழ்வார்புரம் மண்டகப்படிகளில் கள்ளழகர் அதிகாலை 4.42 மணிக்கு வருகை தந்தார். பல்வேறு மண்டகப் படிகளில் எழுந்தருளி வைகை ஆற்றில் அதிகாலை 5.40 மணிக்கு வந்தார். அவரை வீரராகவப் பெருமாள் எதிர்கொண்டு வரவேற்க அதிகாலை 5.48 மணிக்கு கள்ளழகர் பச்சை பட்டு உடுத்தி வைகை ஆற்றில் இறங்கினார்.

அப்போது வைகை ஆற்றில் திரண்டிருந்த லட்சக் கணக்கான பக்தர்கள் விண்ணதிர ‘கோவிந்தா, கோவிந்தா’ என்ற முழக்கங்களை எழுப்பி தரிசனம் செய்தனர். அப்போது நேர்த்திக் கடன் நிறைவேற்றும் வகையில் பக்தர்கள் சர்க்கரை தீபம் ஏற்றினர்.

கள்ளழகர், கருப்பணசாமி வேடமணிந்த பக்தர்கள் தண்ணீர் பீய்ச்சி அடித்தனர். சந்திப்பு மண்டபமான லாலா ஸ்ரீரெங்க சத்திரம் மண்டகப் படியில் வீரராகவ பெருமாளுக்கு மரியாதை அளிக்கும் வகையில் கள்ளழகர் மாலை சாற்றினார். பின்பு இந்து சமய அறநிலையத் துறை மண்டகப் படியில் எழுந்தருளினார்.

பின்னர் வைகை ஆற்றில் இருந்து கள்ளழகர் 7.35 மணியளவில் அங்கிருந்து ராமராயர் மண்டகப்படிக்கு புறப்பட்டார். அங்கு பக்தர்கள் தண்ணீர் பீய்ச்சி அடித்து கள்ளழகரை குளிர்வித்தனர். இன்றிரவு வண்டியூர் வீரராகவப் பெருமாள் கோயிலில் தங்குகிறார்.

நாளை (மே 2-ல்) தேனூர் மண்டகப்படியில் மண்டூக முனிவருக்கு சாபவிமோசனம் அளிக்கிறார். அன்றிரவு ராமராயர் மண்டபத்தில் விடிய விடிய தசாவதாரம் நடைபெறும். நாளை மறுநாள் (மே 3-ல்) ராமராயர் மண்டகப்படியில் இருந்து அனந்தராயர் பல்லக்கில் ராசாங்க திருக்கோலத்தில் ராமநாதபுரம் மன்னர் சேதுபதி மண்டபம் செல்கிறார்.

மறுநாள் (மே 4-ல்) ராமநாதபுரம் மன்னர் சேதுபதி மண்டபத்தில் இருந்து அதிகாலை 2.30 மணியளவில் பூப்பல்லக்கில் கள்ளழகர் திருக்கோலத்தில் எழுந்தருள்கிறார். கருப்பணசாமி கோயில், தல்லாகுளம் பெருமாள் கோயிலில் எழுந்தருளி மலைக்கு திரும்புகிறார். மே 5-ம் தேதி காலை 10.40 மணியளவில் கோயிலை அடைகிறார். மே 6-ல் உற்சவ சாந்தியுடன் திருவிழா நிறைவுபெறுகிறது.

What do you think?

Written by Thirukumaran

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

EXIT POLLS -க்கு பின் அதீத நம்பிக்கையுடன் EPS | Karnataka CM Kharge? | ஆலோசனையில் STALIN VIJAY | IPS

கொடைக்கானலில் வனத்துறை சுற்றுலா இடங்களுக்கு ஒரே இடத்தில் நுழைவு கட்டணம் …….