கரூர் மாவட்டம், குளித்தலை அருகே நங்கவரம் பேரூராட்சிக்குட்பட்ட கருப்பண்ண மேடு பகுதியைச் சேர்ந்தவர் பழனிச்சாமி. இவரின் தங்கை மல்லிகாவிற்கு ஹரிபிரசாத் என்ற மகனும், ரேணுகாதேவி என்ற மகளும் உள்ளனர். இந்த நிலையில், ஹரிபிரசாத் அதே ஊரைச் சேர்ந்த மனோரஞ்சனி (எ) அபி என்ற இளம்பெண்ணை கடந்த இரண்டு வருடங்களாக காதலித்து வந்துள்ளனர். இதை பெண் வீட்டார் கண்டித்தும் வந்துள்ளனர். இதனால், ஹரிபிரசாத் கரூர் டெக்ஸ் நிறுவனத்தில் தங்கி வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில், பெண் வீட்டாரின் மிரட்டல் குறித்து மல்லிகா, அவரது உறவினர் மூலம் குளித்தலை காவல் நிலையத்தில் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார்.
எனினும், குளித்தலை காவல்துறையினர் எதிர்தாரருக்கு ஆதரவாக செயல்பட்டதாகக் கூறப்படுகிறது. அதன் பிறகு, கடந்த 5-ம் தேதி அன்று ஹரிபிரசாத்தும், அபியும் காதல் திருமணம் செய்து கொண்டு திருப்பூர் காவல் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு தஞ்சமடைந்தனர். இதனால், ஆத்திரமடைந்த அபி குடும்பத்தார் அன்று முதல் ஹரிபிரசாத் வீட்டிற்கு சென்று அங்கிருந்த மல்லிகா மற்றும் அவரது கணவர் ராஜு ஆகிய இருவரையும் அடிக்கடி மிரட்டி, அவர்களோடு தகராறு செய்து அச்சுறுத்தி மிரட்டி வந்துள்ளனர்.
இந்நிலையில், சம்பவத்தன்று வீட்டில் இருந்த மல்லிகாவை, அபியின் குடும்பத்தார்களான கன்னியம்மாள், ஜோதி, பிரேமா, சிரும்பாயி, லட்சுமி ஆகியோர், “நீங்கள் செத்தால் உன் மகன் இங்கே வருவான்’ என மல்லிகாவை அடித்து துன்புறுத்தியுள்ளனர். இது குறித்தும், மல்லிகாவின் தம்பி பழனிச்சாமி அவசர எண் 100-க்கு தகவல் தெரிவித்துள்ளார். ஆனால், அதுபற்றி எந்த போலீஸாரும் வீட்டில் வந்து விசாரணையோ, பாதுகாப்போ கொடுக்கவில்லை என மல்லிகா தம்பி பழனிச்சாமி குற்றம்சாட்டினார். இதனால், அன்று முதல் மன வேதனையில் இருந்த மல்லிகா, வீட்டில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இதை அறிந்த குளித்தலை போலீஸார் சம்பவ இடத்திற்கு சென்று மல்லிகாவின் உடலை மீட்டு, உடற்கூராய்வு செய்வதற்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மல்லிகா தற்கொலைக்கு குளித்தலை காவல்துறையினர் முக்கிய காரணம் என மல்லிகா உறவினர்கள் திரண்டு வந்து குளித்தலை காவல் நிலையத்தில் புகார் மனு அளித்துள்ளனர். காதல் திருமணம் செய்துகொண்ட விவகாரத்தில் பெண் வீட்டாரின் மிரட்டலுக்குப் பயந்து மாப்பிள்ளையின் தாயார் தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம், குளித்தலை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/2b963ppb
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/2b963ppb
GIPHY App Key not set. Please check settings