சென்னை போரூர் ஆலப்பாக்கம், 4-வது தெருவைச் சேர்ந்தவர் சாந்தி (54). இவர் கடந்த 16.6.2024-ம் தேதி வீட்டை பூட்டி விட்டு தோழியின் மகள் வளைகாப்பு நிகழ்ச்சிக்காக சென்றார். பின்னர் வீடு திரும்பி வந்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு பீரோவில் வைத்திருந்த 42 சவரன் தங்க நகைகள், வெள்ளி பொருள்கள் திருட்டு போயிருந்ததைப் பார்த்து அதிர்ச்சியடைந்தார். இதையடுத்து மதுரவாயல் காவல் நிலையத்தில் சாந்தி புகாரளித்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜானகிராமன் வழக்குப்பதிவு செய்து விசாரித்தார். சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார், திருட்டுச் சம்பவம் எப்படி நடந்தது என்பதை விசாரித்தனர். அதே நேரத்தில் தடயஅறிவியல் நிபுணர்களும் திருட்டு நடந்த வீட்டில் பதிவாகியிருந்த கைரேகைகளை ஆய்வு செய்தனர்.
பின்னர் சாந்தியின் வீடு அமைந்துள்ள பகுதியில் உள்ள சி.சி.டி.வி கேமராக்களை போலீஸார் ஆய்வு செய்தனர். அப்போது இளைஞர் ஒருவர் சாந்தி வீட்டின் பூட்டை உடைத்து திருடிச் செல்லும் காட்சிகள் பதிவாகியிருந்தன. அந்த சி.சி.டி.வி கேமரா பதிவுகள் அடிப்படையிலும் பதிவான கைரேகை அடிப்படையிலும் விசாரித்தபோது திருட்டுச் சம்பவத்தில் ஈடுபட்டது பூந்தமல்லி, வெற்றிலைத் தோட்டம் பகுதியைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் ராஜேஷ் (24) எனத் தெரியவந்தது. இதையடுத்து ராஜேஷை போலீஸார் கைது செய்து அவரிடமிருந்து 31 சவரன் தங்க நகைகள், 348 கிராம் எடையுள்ள வெள்ளி பொருள்களை போலீஸார் பறிமுதல் செய்தனர். விசாரணைக்குப்பிறகு ராஜேஷ் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்தத் திருட்டுச் சம்பவம் குறித்து மதுரவாயல் போலீஸார் கூறுகையில், “கைது செய்யப்பட்ட ராஜேஷ், பகல் நேரங்களில் ஆட்டோ ஓட்டி வருகிறார். அப்போது சவாரிக்காக செல்லும் இடங்களில் பூட்டிய வீடுகளை நோட்டமிட்டு செல்வார். அதன்பிறகு ஒரு மணி நேரம் கழித்து பூட்டிய வீடு அமைந்துள்ள பகுதிக்கு மீண்டும் ஆட்டோவில் ராஜேஷ் செல்வார். அப்போதும் வீடு பூட்டியிருந்தால் ஆட்டோவை மறைவான இடத்தில் நிறுத்தி விட்டு சம்பவ இடத்துக்கு வந்து திருட்டு சம்பவத்தில் ஈடுபடுவார். பின்னர் ஆட்டோவில் ஏறி தப்பிச் சென்றுவிடுவார். சாந்தியின் வீடு மணிக்கணக்கில் பூட்டப்பட்டிருந்ததால் அங்கு திருட்டில் ஈடுபட்டிருக்கிறார் ஆட்டோ டிரைவர் ராஜேஷ்.
திருடிய நகைகளை விற்று மது அருந்திய ராஜேஷ், சந்தோஷத்தில் நண்பர்களுக்கும் மது விருந்து கொடுத்திருக்கிறார். சாந்தியின் வீட்டிலிருந்து திருடிய நகைகளில் 31 சவரன் நகைகளை மட்டும் பறிமுதல் செய்திருக்கிறோம். மீதமுள்ள நகைகளை மீட்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். ஆட்டோ டிரைவர் ராஜேஷ் மீது கொலை முயற்சி, திருட்டு, வழிப்பறி உள்பட 36 வழக்குகள் நிலுவையில் உள்ளன. கைதான ராஜேஷ் பெரும்பாலும் பகலில் திருடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார்” என்றனர்.
GIPHY App Key not set. Please check settings