சென்னை காசிமேடு புதுமனைக்குப்பத்தைச் சேர்ந்தவர் ரிஷி கண்ணன் (21). பிரபல ரௌடியான இவர் மீது கொலை, கொலை முயற்சி உள்பட 16-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. கடந்த மாதம் திருவொற்றியூரைச் சேர்ந்த ஆகாஷ் என்பவரிடம் கத்தியைக் காட்டி மிரட்டி 5,000 ரூபாயை ரிஷிகண்ணன் பறித்துச் சென்றதாகக் கூறப்படுகிறது. இதுதொடர்பான புகார் அடிப்படையில் திருவொற்றியூர் போலீஸார், ரௌடி ரிஷிகண்ணனைத் தேடி வந்தனர். ஆனால் அவர் தலைமறைவாகிவிட்டார். இந்தநிலையில் ரிஷிகண்ணன், மிஸ்டர் ப்ரொபஷனல் ரௌடி என்ற சமூக வலைதள பக்கத்தில் `நான் இருக்கும் இடத்தை கண்டுபிடிக்க முடியாமல் தலை முடியை பிச்சுக்குவீங்க, கொலை ஒன்று செய்ய போகிறேன். முடிந்தால் தடுத்துப் பாருங்க. செல்போனை வைத்து பிடிக்க முயன்றால் சிம்கார்டை தூக்கிப் போட்டுவிடுவேன். போலீஸாரால் என்னைப் பிடிக்க முடியாது. ஏனென்றால் நீங்கள் போலீஸ்.. நான் அக்யூஸ்ட்” என போலீஸாருக்கு சவால்விடும் வகையில் வீடியோ ஒன்றை பதிவு செய்திருந்தார்.
அந்த வீடியோவைப் பார்த்த போலீஸார், ரௌடி ரிஷிகண்ணன் எங்கிருந்து வீடியோவை பதிவு செய்தார் என அவரின் செல்போன் சிக்னலை ஆய்வு செய்தனர். அதன்அடிப்படையில் அவரைப் பிடித்து கைது செய்தனர். அப்போது போலீஸாரிடமிருந்து தப்பி ஓட முயன்ற ரிஷிகண்ணனுக்கு கை, காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. அதற்கு ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் மாவு கட்டு போட்ட போலீஸார், ரிஷிகண்ணனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இதுகுறித்து போலீஸார் கூறுகையில், “வீடியோ வெளியான ஐபி அட்ரஸை முதலில் சைபர் க்ரைம் போலீஸாரின் உதவியோடு ஆய்வு செய்தோம். அப்போது ரௌடி ரிஷிகண்ணன், தலைமறைவாக இருக்கும் இடம் குறித்த தகவல் கிடைத்தது. உடனடியாக அங்குச் சென்று அவரை மடக்கிப் பிடிக்க முயன்றோம். ஆனால் அவர் தப்பி ஓட முயன்றபோது கை, காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. போதையிலிருந்ததால் ரிஷி கண்ணன், இப்படி பேசியிருப்பது விசாரணையில் தெரியவந்தது” என்றனர்.
GIPHY App Key not set. Please check settings