சென்னை, தண்டையார்பேட்டை நேதாஜி நகர், 5-வது தெருவை சேர்ந்தவர் ராமராஜன். இவர் பழைய இரும்பு வியாபாரம் செய்து வருகிறார். இவரின் மனைவி நவமணி (48). இந்தத் தம்பதியினருக்கு ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர். ரயில்வே பிளாட்பாரம் பகுதியில் கடை வைக்க நவமணி, பா.ஜ.க மாவட்ட செயலாளர் செந்திலை அணுகி உள்ளார். அப்போது செந்தில், கடை வைக்க ஏற்பாடு செய்து தருவதாகவும் அதற்கு இரண்டரை லட்சம் ரூபாய் வரை செலவாகும் என கூறியதாக சொல்லப்படுகிறது. இதையடுத்து கடந்த 2022்-ல் இரண்டரை லட்சம் ரூபாயை செந்திலிடம் நவமணி கொடுத்ததாக கூறப்படுகிறது. ஆனால் நவமணிக்கு பிளாட்பாரத்தில் கடை வைக்க செந்தில் ஏற்பாடு செய்யவில்லை.
அதனால் பணத்தை திரும்ப கேட்டிருக்கிறார் நவமணி. ஆனால், செந்தில் பணத்தைக் கொடுக்காமல் காலம் கடத்தி வந்திருக்கிறார். இதுகுறித்து ஆர்கே நகர் காவல் நிலையம், மகளிர் ஆணையம், மனித உரிமை ஆணையம், பா.ஜ.க மூத்த நிர்வாகிகள் என பல இடங்களில் நவமணி புகார் கொடுத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அதனால் செந்திலைச் சந்தித்த நவமணி பணம் கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டிருக்கிறார். அப்போது செந்தில், நவமணியை ஆபாசமாக பேசியதாக தெரிகிறது. இதனால் மனமுடைந்த நவமணி, தூக்க மாத்திரைகளை சாப்பிட்டு தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார். தற்போது நவமணி ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். மருத்துவமனையிலிருந்து தண்டையார்பேட்டை காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதனால் போலீஸார், நவமணி மற்றும் அவரின் குடும்பத்தினரிடம் விசாரணை நடத்தினர். அப்போது நவமணி எழுதிய கடிதம் சிக்கியது. அதனடிப்படையில் பா.ஜ.க மாவட்டச் செயலாளர் செந்தில்குமாரை போலீஸார் கைதுசெய்து சிறையில் அடைத்தனர்.
GIPHY App Key not set. Please check settings