சென்னை கொட்டிவாக்கம் வேம்புலி அம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் குமரவேல் (43). இவர், பைக் கால் டாக்ஸி டிரைவராக இருந்து வருகிறார். கடந்த 21.6.2024-ம் தேதி இரவு சென்ட்ரலுக்கு ஒரு கஸ்டமரை டிராப் செய்ய குமரவேல் பைக்கில் சென்றார். பின்னர் வீடு திரும்பி வந்துக் கொண்டிருந்தபோது குமரவேலுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. அதனால் மெரினா கடற்கரை கலங்கரை விளக்கம் பகுதியின் பின்புறத்தில் பைக்கை நிறுத்திய குமரவேல் அங்கேயே ஓய்வெடுத்தார். அப்போது அவர், தூங்கிவிட்டார். இரவு 12 மணியளவில் போலீஸ் சீருடையில் வந்த ஒருவர், குமரவேலை தட்டி எழுப்பி இங்கேல்லாம் படுக்கக் கூடாது என்று எச்சரித்தார். அதன் பிறகு குமரவேலை பார்த்து உன் மீது எனக்கு சந்தேகமாக இருக்கிறது நீ என்ன வேலை செய்கிறாய் என்று அந்த போலீஸ்காரர் கேட்க, நான் பைக் டாக்ஸி டிரைவராக உள்ளேன் என்று பதிலளித்தார் குமரவேல்.
உடனே டிரைவிங் லைசென்ஸ் எடு என மிரட்டும் தொனியில் போலீஸ்காரர் கேட்க, குமரவேலும் தன்னுடைய பர்ஸிலிருந்து டிரைவிங் லைசென்ஸை எடுத்திருக்கிறார். அப்போது அந்தப் பர்ஸை பறித்துக் கொண்ட போலீஸ்காரர், ஸ்டேஷனுக்கு வந்து வாங்கிக் கொள் என்று வேகமாக இருட்டில் நடந்து சென்றார். அவரைப் பின்தொடர்ந்து வந்த குமரவேல், அய்யா, பர்ஸை கொடுங்க என்று பரிதாபமாக கேட்க, பர்ஸிலிருந்த ஏ.டி.எம் கார்டு, கிரெடிட் கார்டு, ஆதார் கார்டு, 500 ரூபாய் பணம் ஆகியவற்றை எடுத்துக் கொண்ட போலீஸ்காரர், காலி பர்ஸை அங்கேயே வீசிவிட்டு வேகமாக நடந்து சென்றார்.
அதைப்பார்த்த குமரவேல், காலி பர்ஸை எடுத்துக் கொண்டு அந்த போலீஸ்காரரை பின்தொடர்ந்து சென்றார். ஆனால் அதற்குள் அந்த போலீஸ்காரர் இருட்டில் மாயமாக மறைந்து விட்டார். உடனே அருகில் உள்ள மெரினா காவல் நிலையத்துக்கு சென்ற குமரவேல், அங்கிருந்து காவலர்களிடம் விவரத்தைக் கூறினார். அதைக்கேட்ட காவலர்கள், லைட் ஹவுஸ் பகுதிக்கு இரவு ரோந்து பணிக்கு எந்தக் காவலரும் செல்லவில்லையே என்று கூறியதோடு காவல் நிலையத்திலிருந்து சி.சி.டி.வி கேமராக்களை ஆய்வு செய்தனர். அப்போது போலீஸ் சீருடையில் ஒருவர் வேகமாக நடந்துச் செல்லும் காட்சி பதிவாகியிருந்தது. அவர் யார் என்று மெரினா போலீஸார் விசாரிக்கத் தொடங்கினர்.
GIPHY App Key not set. Please check settings