சென்னை: “இந்த விஷயத்தில் தனிப்பட்ட பேச்சுவார்த்தையை நான் எதிர்பார்க்கிறேன். ஆனால், இன்று வரை அது மறுக்கப்படுகிறது. யாருடைய நற்பெயருக்கும் களங்கம் விளைவிக்க மாட்டேன். கடவுளையும், நீதித் துறையையும் நம்புகிறேன்” என ஆர்த்தி ரவி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “என் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து எழும் கருத்துகள் மீதான என்னுடைய மவுனத்தின் வெளிப்பாடு, பலவீனமோ, குற்ற உணர்ச்சியோ அல்ல என்பதை தெளிவுபடுத்துகிறேன். கண்ணியத்தை கடைபிடிக்கும் வகையிலும், உண்மையை மறைக்க என்னை மோசமாக சித்தரிக்க முயற்சிப்பவர்களுக்கு பதிலளிப்பதை தவிர்க்கவும், மவுனம் காக்கிறேன். அதே நேரம் நீதித் துறையால் எனக்கான நீதி கிடைக்கும் என நம்புகிறேன்.
பரஸ்பர ஒப்புதலின் அடிப்படையில் விவாகரத்து பெற்றதாக வெளியான அறிவிப்பை கண்டு அதிர்ச்சி அடைந்து, ஒரு தலைபட்சமாக இது நடக்கிறது என்பதை வெளிப்படுத்தினேன். இந்த விஷயத்தில் தனிப்பட்ட உரையாடலை நான் எதிர்பார்க்கிறேன். ஆனால், இன்று வரை அது மறுக்கப்படுகிறது. திருமணம் எனும் புனிதத்தை ஆழமாக மதிக்கிறேன். யாருடைய நற்பெயரையும் புண்படுத்தும் விதமாக பொது விவாதங்களில் ஈடுபட மாட்டேன். என் குடும்பத்தின் நலன் குறித்தே என் முழு கவனமும் உள்ளது. கடவுள் நல்வழிகாட்டுவார் என நம்புகிறேன்” என தெரிவித்துள்ளார்.
முன்னதாக. நடிகர் ஜெயம் ரவி, தயாரிப்பாளர் சுஜாதா விஜயகுமார் மகள் ஆர்த்தியை காதலித்து கடந்த 2009-ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். சமீபத்தில், பரஸ்பர ஒப்புதலுடன் தனது மனைவியை பிரிவதாக ஜெயம் ரவி அறிவித்தார். பின்னர் குடும்ப நல நீதிமன்றத்தில் விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்தார். அதன்பின், ஆர்த்தி வெளியிட்ட அறிக்கையில், “திருமணப் பந்தத்தில் இருந்து விலக வேண்டும் என்ற இந்த முடிவு சொந்த விருப்பத்தைச் சார்ந்து அவராகவே எடுத்ததே தவிர, குடும்ப நலன் கருதி எடுக்கப்பட்டதல்ல” என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
GIPHY App Key not set. Please check settings