`Dev.D’, `Black Friday’, `Gangs of Wasseypur’ படங்கள் மூலம் பாலிவுட்டில் பிரபல இயக்குநராக வலம் வருபவர் அனுராக் காஷ்யப்.
விஜய் சேதுபதி நடித்த ‘இமைக்கா நொடிகள்’ படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களிடையே பிரபலமானவர். அவ்வப்போது தமிழ் திரைப்படங்கள் சிறப்புத் தோற்றத்தில் நடித்து வருகிறார். பாலிவுட்டிலும் தொடர்ந்து பல படங்களிலும், வெப்சீரியஸிலும் நடித்து கவனம் ஈர்த்து வருகிறார். கடந்த வாரம் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்ற விஜய் சேதுபதியின் ‘மகாராஜா’ வில்லனாக நடித்து கவனம் ஈர்த்திருந்தார்.
பாலிவுட் திரையுலகில் இருக்கும் பிரச்னைகள், நல்ல படைப்புகளைத் தொடர்ந்து பாராட்டுவது, ஆரோக்கியமான சினிமாவைப் பற்றித் தொடர்ந்து பேசுவது, திறமையாளர்களை அடையாளம் கண்டு பாராட்டுவது எனத் தொடர்ந்து நேர்காணலிலும், சமூக வலைதளங்களிலும் பேசிவருகிறார்.
திரையுலகில் இருக்கும் பிரச்னைகளை வெளிப்படையாகப் பேசிவரும் அனுராக் , உச்ச நட்சத்திரங்கள் படத்தின் பட்ஜெட்டில் 60 சதவிகிதத்தை சம்பளமாகப் பெறுகிறார்கள் என்று விமர்சித்தது பேசுபொருளாகியிருந்தது. இதையடுத்து தற்போது, சில நட்சத்திர நடிகர்கள் படப்பிடிப்பின்போது தனக்கெனத் தனி செஃப்களை வைத்துக் கொள்வதாகவும், அந்த செஃப்களுக்கு ஒரு நாளைக்கு 2 லட்சம் ரூபாய் வரை சம்பளம் கொடுக்கச் சொல்கிறார்கள் என்றும் விமர்சித்துள்ளார்.
இதுபற்றி நேர்காணல் ஒன்றில் பேசியிருக்கும் அனுராக் காஷ்யப், “உச்ச நட்சத்திரங்கள் கேட்கும் அதிர்ச்சியான விஷயம் என்னவென்றால், படப்பிடிப்பின்போது அவர்களுக்கெனப் பிரத்தேகமாக ஒரு செஃப் கேட்பது மட்டுமின்றி, அவர்களுக்கு ஒரு நாளைக்கு ரூபாய் 2 லட்சம் வரை சம்பளம் கொடுக்கச் சொல்கிறார்கள்.
இதுபற்றிக் கேள்வி எழுப்பினால், ஒவ்வொரு நடிகரும் தங்களுக்கெனத் தனியான டையட் ப்ளான் வைத்திருப்பதாகவும், அதற்கேற்ப உணவை சமைக்க தனி செஃப் அவசியம் என்றும் காரணம் கூறிகின்றனர். அந்த உணவுகள் பறவைகளுக்கு உணவு வைப்பதைப்போல கொஞ்சமாகத்தான் இருக்கும். அதற்கு அவ்வளவு பணம் செலவு செய்யச் சொல்வார்கள். இதுதான் சமீபத்தில் நான் திரையுலகில் கேட்டு அதிர்ச்சியான விஷயம்.
அதுமட்டுமின்றி ஒரு நட்சத்திரம் படப்பிடிப்பு தளத்திலிருந்து வெகு தூரத்தில் அமைந்துள்ள ஐந்து நட்சத்திர ஹோட்டலில் இருக்கும் பர்கரை தினமும் வாங்கி வரச் சொல்கிறார். இப்படி பல கேளிக்கூத்துகள் திரையுலகில் நடிக்கின்றனர். படத்திற்கான பட்ஜெட் மற்றும் தயாரிப்பாளரின் பணத்தை இப்படியெல்லாம் வீணடிக்கின்றனர். இதுபோன்ற விஷயங்களை நான் எனது படங்களில் ஒருபோதும் அனுமதிப்பதில்லை” என்று கூறியுள்ளார்.
GIPHY App Key not set. Please check settings