புதுடெல்லி: நீட் நுழைவுத் தேர்வில் நடந்துள்ள முறைகேடுகள் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்த மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து, விசாரணையை சிபிஐ தொடங்கியது.
எம்பிபிஎஸ், பிடிஎஸ் உள்ளிட்டஇளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு நாடுமுழுவதும் கடந்த மே 5-ம் தேதிநடைபெற்றது. இதற்கான ஆன்லைன்விண்ணப்ப பதிவு பிப்ரவரி 9-ம்தேதி தொடங்கி மார்ச் 9-ம் தேதிநடந்தது. பின்னர், விண்ணப்பிக்கும் அவகாசம் மார்ச் 16-ம் தேதி வரைநீட்டிக்கப்பட்டது. இதன்பிறகு, திடீரென ஏப்ரல் 9, 10-ம் தேதிகளில்ஆன்லைனில் விண்ணப்பிக்க மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டது. இந்த 2 நாட்களில் விண்ணப்பித்தவர்கள் குறித்து கல்வியாளர்கள் சந்தேகம் எழுப்பி உள்ளனர்.
நீட் தேர்வு நடப்பதற்கு ஒருநாள்முன்னதாக பிஹார் தலைநகர் பாட்னாவில் வினாத்தாள் கசிந்ததை அந்தமாநில போலீஸார் கண்டுபிடித்தனர். இதுகுறித்து தேசிய தேர்வு முகமைக்கு (என்டிஏ) பிஹார் போலீஸார்தகவல் தெரிவித்தனர். போலீஸாரின் தீவிர விசாரணையில், வினாத்தாள் தலா ரூ.40 லட்சத்துக்கு விற்பனைசெய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதுதொடர்பாக இடைத்தரகர்கள், மாணவர்கள் உட்பட 19 பேர்கைது செய்யப்பட்டுள்ளனர்.
குஜராத்தின் கோத்ராவில் உள்ள ஜெய் ஜலராம் பள்ளியில் நீட் தேர்வு நடைபெற்றது. அந்த பள்ளியில் தேர்வு எழுதிய 6 மாணவர்கள் தங்களுக்கு தெரிந்த வினாக்களுக்கு மட்டும் பதில் அளித்திருந்தனர். இதர வினாக்களுக்கு தேர்வு மையத்தின் துணை கண்காணிப்பாளர் துஷார்பட் பதில் அளித்து விடைத்தாளைசமர்ப்பித்தது போலீஸ் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது. இதற்காக ஒவ்வொரு மாணவரிடமும் தலா ரூ.10 லட்சம் பெற துஷார் பட் பேரம்பேசியதும் தெரியவந்தது. இதுதொடர்பாக அவரும், 2 இடைத்தரகர்களும் கைது செய்யப்பட்டனர்.
நீட் தேர்வு முடிவுகள் ஜூன் 14-ம்தேதி வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால், முன்கூட்டியே, மக்களவை தேர்தல் முடிவுகள் வெளியான ஜூன் 4-ம் தேதி நீட் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன.
இதில் 1,563 மாணவர்களுக்கு கருணை மதிப்பெண்கள் வழங்கப்பட்டிருந்தன. இதுகுறித்து என்டிஏ அளித்த விளக்கத்தில், ‘குறிப்பிட்ட சில மையங்களில் தவறுதலாக2 வினாத்தாள் வழங்கப்பட்டன. அதனால் ஏற்பட்ட குழப்பத்தில் மாணவ, மாணவிகளுக்கு அரை மணிநேரம் வரை வீணானது. நேர இழப்பைகருத்தில் கொண்டு, அந்த மையங்களில் தேர்வு எழுதியவர்களுக்கு மட்டும் கருணை மதிப்பெண் வழங்கப்பட்டன’ என்று தெரிவிக்கப்பட்டது.
ஆனால், ஹரியாணாவின் ஜாஜர்நகரில் உள்ள ஹர்தயாள் பள்ளிமையத்தில் நேர இழப்பு ஏற்படாத நிலையிலும், அந்த மையத்தை சேர்ந்த 504 பேருக்கு கருணை மதிப்பெண் வழங்கப்பட்டது எப்படி என கேள்வி எழுந்தது. இவ்வாறு பலமுறைகேடுகள் தொடர்பாக குற்றச்சாட்டு எழுந்ததால், உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு மனுக்கள் தாக்கல்செய்யப்பட்டன. அதில், ‘நீட் தேர்வைரத்து செய்ய வேண்டும். சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.கருணை மதிப்பெண்ணை ரத்து செய்ய வேண்டும்’ என பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
இந்நிலையில், என்டிஏ செயல்பாட்டை ஆய்வு செய்ய இஸ்ரோ முன்னாள் தலைவர் கே.ராதாகிருஷ்ணன் தலைமையில் 7 பேர் அடங்கிய குழு நியமிக்கப்பட்டது. என்டிஏ தலைவர் சுபோத் குமார் பதவி நீக்கம் செய்யப்பட்டு, இந்தியவர்த்தக மேம்பாட்டு நிறுவனத்தின் தலைவராக பணியாற்றும் பிரதீப் சிங் கரோலா புதிய தலைவராக நியமிக்கப்பட்டார்.
இந்த சூழலில் மத்திய கல்வித்துறை வெளியிட்ட அறிக்கையில், ‘நீட் தேர்வில் முறைகேடுகள், ஆள்மாறாட்டம் நடந்திருப்பதாக புகார்கள் எழுந்துள்ளன. இதுதொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. தவறு இழைத்தவர்கள்மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து நீட் வினாத்தாள் கசிவு, முறைகேடு தொடர்பாக சிபிஐ தரப்பில் நேற்று வழக்கு பதிவுசெய்யப்பட்டது. இந்த விவகாரம் தொடர்பாக பிஹார், குஜராத், மகாராஷ்டிரா, ஹரியாணா உட்பட பல்வேறு மாநிலங்களில் பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகள் சிபிஐக்கு மாற்றப்பட உள்ளன.
நீட் வினாத்தாள் கசிவு, முறைகேடுகள் தொடர்பாக விசாரிக்க சிபிஐஅதிகாரிகள் பிஹார், குஜராத் விரைந்துள்ளனர். நீட் முறைகேடு தொடர்பாக பிஹார், குஜராத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளவர்களை காவலில் எடுத்து விசாரணை நடத்தப்படும். முறைகேட்டில் தொடர்பு உடைய அனைவரும் விசாரணை வளையத்துக்குள் கொண்டு வரப்படுவார்கள் என்று சிபிஐ வட்டாரங்கள் தெரிவித்தன.
வினாத்தாள் கசிவு தொடர்பாக மகாராஷ்டிராவின் லத்தூர், சோலாப்பூர் பகுதிகளை சேர்ந்த சஞ்சய் துக்காராம் ஜாதவ், ஜலீல் உமர்கான்ஆகிய 2 ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதற்கிடையே, 1,563 பேருக்குவழங்கப்பட்ட கருணை மதிப்பெண்களை என்டிஏ ஏற்கெனவே ரத்து செய்திருந்தது. இதில் விருப்பம் உள்ளவர்கள் மறுதேர்வு எழுத வாய்ப்பு வழங்கப்பட்டது. அதன்படி, சத்தீஸ்கர் மாநிலம் பலோட், தந்தேவாடா, ஹரியாணா மாநிலம் பகதூர்ஹர், சண்டிகர், குஜராத்தின் சூரத், மேகாலயா தலைநகர் ஷில்லாங் ஆகிய 6 நகரங்களில் நேற்று மறுதேர்வு நடந்தது. மொத்தம் உள்ள 1,563 மாணவர்களில் 813 பேர் மட்டுமே தேர்வு எழுதினர். மற்றவர்கள் தேர்வு எழுத வரவில்லை.
GIPHY App Key not set. Please check settings