in

பாபா சித்திக் கொலைக்கு லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல் பொறுப்பேற்பு: உறுதி செய்த காவல்துறை | Lawrence Bishnoi’s gang claims Baba Siddique murder


மும்பை: மகாராஷ்டிராவில் அஜித் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பாபா சித்திக் பிரமுகர் பாபா சித்திக் கொலை செய்யப்பட்டதற்கு லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளது.

இது தொடர்பாக அக்கும்பலைச் சேர்ந்த ஒருவர் பேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்த பதிவு வைரலாகியுள்ளது. அதில் அந்த நபர், “பாலிவுட் நடிகர் சல்மான் கான் மற்றும் நிழல் உலக தாதாக்கள் தாவூத் இப்ரஹிம், அனுஜ் தாப்பன் ஆகியோருடன் கொண்ட தொடர்பின் காரணமாகவே பாபா சித்திக் கொல்லப்பட்டார். எங்களுக்கும் சித்திக்குக்கும் இடையே தனிப்பட்ட விரோதம் ஏதும் இல்லை. சல்மான் கான் அல்லது தாவூத் குழுவுக்கு யாரெல்லாம் உதவுகிறார்களோ அவர்கள் இத்தகைய தாக்குதலுக்கு உள்ளாக வேண்டியிருக்கும். தயார் ஆகிக் கொள்ளுங்கள். எங்களின் சகோதரர்கள் கொல்லப்பட்டால் நாங்கள் பதிலடி கொடுப்போம். நாங்கள் எப்போதுமே முதலில் தாக்குவதிலை” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

66 வயதான பாபா சித்திக் கடந்த 1976 முதல் காங்கிரஸ் கட்சியின் உறுப்பினராக இருந்தார். மூன்று முறை எம்எல்ஏ-வாக தேர்வு செய்யப்பட்டவர். அமைச்சராகவும் பணியாற்றி உள்ளார். கடந்த பிப்ரவரியில் தேசியவாத காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.

இந்நிலையில், நேற்று (சனிக்கிழமை) நிர்மல் நகரில் உள்ள அவரது மகனின் அலுவலகத்துக்கு வெளியில் இருந்த போது துப்பாக்கிச்சூடு நிகழ்ந்துள்ளது. இரண்டு முதல் மூன்று ரவுண்டுகள் வரை சுடப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தை மூன்று பேர் நிகழ்த்தியுள்ளனர். அதில் இருவரை போலீஸார் பிடித்துள்ளனர். ஒருவர் மாயமாகி உள்ளார். அவர்களிடம் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

‘கூலிப்படை கைவரிசை; போலீஸ் உறுதி’ – இதற்கிடையில் பாபா சித்திக்கை கூலிப்படையினர் மேற்கொண்டதை காவல்துறையினரும் உறுதி செய்தனர். இது குறித்து காவல்துறை இன்று (ஞாயிற்றுக்கிழமை) அளித்தப் பேட்டியில், “இதுவரை இருவரை கைது செய்துள்ளோம். அதில், ஒருவர் குர்மாயில் பல்ஜித் சிங் (23). இவர் ஹரியானாவைச் சேர்ந்தவர். இன்னொருவர் ராஜேஷ் கஷ்யப் (19). இவர் உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்தவர். மூன்றாவதாக உபி.,யைச் சேர்ந்த சிவ் குமாரை தேடி வருகிறோம்” எனத் தெரிவித்துள்ளது. இந்நிலையில் பாலிவுட் நடிகர் சல்மான் கான் வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

யார் இந்த லாரன்ஸ் பிஷ்னோய்? பஞ்சாபின் பெரோஸ்பூரை சேர்ந்தவர் லாரன்ஸ் பிஷ்னோய் (30). ஹரியாணா காவலர் மகனான லாரன்ஸ், பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் சட்டம் படித்துள்ளார். கல்லூரி காலங்களில் மாணவர் பேரவை அரசியலில் தலையிட்டவருக்கு நண்பராக மாறினார் கோல்டி பிரார் எனும் சத்தீந்தர் சிங். 2010-ல் பட்டம் பெற்ற பின் சண்டிகரில் இருவரும் இணைந்து பல்வேறு குற்றங்களில் ஈடுபடத் துவங்கினர். இருவர் மீதும் கொலை முயற்சி, கொள்ளை, வழிப்பறி போன்ற 7 வழக்குகள் 2012 வரை பதிவாகின. இதற்காக கைதான பிஷ்னோய் சிறையில் அடைக்கப்பட்டார்.

சிறை வாழ்க்கையில் அவர் தாதாவாக மாறினார். அங்கிருந்த சக கைதிகளின் நட்பை பெற்றவர் விடுதலையாகி ஆயுதக் கடத்தலில் இறங்கினார். அப்போது, தன்னுடன் மோதிய முக்ஸ்தர் என்பவரை சுட்டுக் கொலை செய்தார் பிஷ்னோய்.

பிறகு மது கடத்தலிலும் இறங்கியவர் தன் தலைமையில் ஒரு கும்பலை உருவாக்கினார். 2014-ல் ராஜஸ்தான் போலீஸாருடனான என்கவுன்ட்டரில் மீண்டும் கைதான பிஷ்னோய் மீது சிறையினுள் முக்கிய சாட்சியை கொலை செய்த வழக்கும் பதிவானது. சிறையில் சம்பத் நெஹரா எனும் குற்றவாளியுடன் நட்பு கொண்டு தனது கும்பலின் நடவடிக்கைகளை ராஜஸ்தானிலும் பரப்பினார்.

பழிவாங்கும் சதி பின்னணி? பிஷ்னோய் சமூகத்தினர் மான் உள்ளிட்ட விலங்குகளை புனிதமாகக் கருதுபவர்கள். கடந்த 1998-ம் ஆண்டு, ஜோத்பூரில், அரியவகை மான் ஒன்றை வேட்டையாடிய வழக்கில் சல்மான் கானுக்கு 5 ஆண்டு சிறைத் தண்டனை வழங்கப்பட்டது. அவர் இப்போது ஜாமீனில் இருக்கிறார். அந்த மான், தங்கள் சமூகத்தின் புனித விலங்கு என்பதால் அதற்குப் பழிவாங்கும் வகையில் சல்மான் கானை கொல்வோம் என்று பஞ்சாப்பை சேர்ந்த பிரபல தாதா லாரன்ஸ் பிஷ்னோய் கொலை மிரட்டல் விடுத்திருந்தார். பிஷ்னோய் குழுவில் ஒருவரான கோல்டி ப்ரார், கடந்த வருடம் பகிரங்கமாகவே மிரட்டல் விடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.





Source link

What do you think?

Written by makkalnews.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

ஓடிடியில் ‘தங்கலான்’ வெளியீடு தாமதம்: பின்னணி என்ன? | Reason behind Thangalan’s OTT release delay

‘லியோ’ ப்ளாஷ்பேக் காட்சிகளுக்கு கிடைத்த விமர்சனம்: லோகேஷ் கனகராஜ் விளக்கம் | Lokesh speaks about criticisms on Leo’s flashback scenes