பிளாஷ்பேக்: 14 வயதில் பாட்டு… 21 வயதில் தேசிய விருது… 37 வயதில் மரணம்
29 ஏப், 2024 – 11:51 IST
‘மாலையில் யாரோ மனதோடு பேச…’ என தமிழ் ரசிகர்களின் இதயத்தில் ஆனந்தத்தையும், கண்களில் ஆனந்த கண்ணீரையும் ஒரே நேரத்தில் வரவழைத்தவர் பின்னணி பாடகி சொர்ணலதா. ‘போவோமா ஊர்கோலம்’ என உற்சாகம் தந்தார். ‘ஆட்டமா தேரோட்டமா’ என்று பாடி ஆட வைத்தார், ‘போறாளே பொண்ணுத்தாயி’ என கதற வைத்தார். ‘ராக்கம்மா கையைத்தட்டு’ எனச் சொடக்குப்போட வைத்தார். ஆனால் சொடக்கு போடும் நேரத்தில் இந்த உலகை விட்டும் பறந்தார்.
ஆயிரக்கணக்கான பாடல்களால் தென்னிந்திய இசை ரசிகர்களை மகிழ்வித்த சொர்ணலதா 14 வயதில் பாட தொடங்கினார். 21வது வயதில் தேசிய விருது பெற்றார். 37 வயதில் இறந்து போனார். ‘ஏனம்மா இத்தனை அவசரம்’ என இசை உலகம் கண்ணீர் விட்டது. தனது பாடல்களால் மற்றவர்களின் கவலையை மறக்கச் செய்தவர், கவலையிலேயே வாழ்ந்தார் என்பதுதான் பெரிய சோகம். திருமணம் செய்து கொள்ளாமல் கடைசி வரை இசைக்காக வாழ்வதாக சொன்னவர். திருமண வயதில் மறைந்தது காலம் செய்த சூழ்ச்சி. திடீர் உடல் நலக்குறைவு, திடீர் மறைவு என முடிந்தது அவரது வாழ்க்கை.
சொர்ணலதா இன்று இருந்தால் அவருக்கு வயது 51. ஆம் இன்று அவருக்கு பிறந்தநாள். அவர் உயிரோடு இருந்திருந்தால் எத்தனை விருதுகள் அவரது கழுத்தை அலங்கரித்திருக்கும், எத்தனை பாடல்கள் நம் காதுகளை குளிரவைத்திருக்கும். மாலையில் யாரோ மனதோடு பேச கேட்கும்போதெல்லாம். அதுதான் நீ இருக்கிறாயே… காற்றாய்… இசையாய் என்று ஆறுதல் அடைய வேண்டியதிருக்கிறது.
GIPHY App Key not set. Please check settings