மகாராஷ்டிராவில் தேர்தலுக்குப் பிறகு கடந்த 5ஆம் தேதி, பாஜக கூட்டணி அரசு பதவியேற்றுக்கொண்டது. கடந்த வாரம்தான் அனைத்து அமைச்சர்களும் பதவியேற்றுக்கொண்டனர். சட்டமன்றக் கூட்டம் கடந்த ஒரு வாரமாக நடந்து கொண்டிருந்தது. ஆனால் அமைச்சர்கள் யாருக்கும் இலாகா ஒதுக்கப்படவில்லை.
சட்டமன்றக் கூட்டம் நேற்று (டிசம்பர் 21) முடிவடைந்த நிலையில் மாலையில் இலாகாக்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தனக்கு உள்துறை கொடுக்கவேண்டும் என்று நெருக்கடி கொடுத்து வந்தார். இதனால் இலாகா ஒதுக்கீட்டில் தாமதம் ஏற்பட்டு வந்தது. நேற்று இலாகா ஒதுக்கீடு செய்யப்பட்டதில் முதல்வர் தேவேந்திர பட்னாவிஸுக்கு உள்துறை ஒதுக்கப்பட்டுள்ளது. இது தவிர எரிசக்தி, சட்டம் மற்றும் நீதி, பொது நிர்வாகம், தகவல் தொழில் நுட்பம் போன்ற துறைகள் முதல்வர் தேவேந்திர பட்னாவிஸுடம் இருக்கும். துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டேயிக்கு நகர மேம்பாடு, வீட்டு வசதி மற்றும் பொதுப்பணித்துறை ஒதுக்கப்பட்டுள்ளன.
மற்றொரு துணை முதல்வரான அஜித்பவாருக்கு நிதித்துறையும், கலால் வரித்துறையும் ஒதுக்கப்பட்டுள்ளன. அதே சமயம் வருவாய்த்துறை பா.ஜ.க-வைச் சேர்ந்த சந்திரசேகர் பவன்குலேயிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. நீர்வளத் துறைக்கு இரண்டு அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மும்பை பா.ஜ.க தலைவர் ஆசிஷ் ஷெலாருக்கு கலாசாரத் துறை ஒதுக்கப்பட்டுள்ளது. சிவசேனாவைச் சேர்ந்த பரத் கோகாவாலாவிற்கு வேலை உத்தரவாத துறையும், உதய் சாவந்த்திற்கு தொழில் துறையும், தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த தனஞ்சே முண்டேவிற்கு உணவு மற்றும் சிவில் சப்ளை துறையும் ஒதுக்கப்பட்டுள்ளன.
ஏக்நாத் ஷிண்டேயிக்கு உள்துறை ஒதுக்கப்படவில்லை என்றாலும் மிகவும் முக்கியமான இலாகாக்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் மும்பையில் கட்டமைப்புப் பணிகளை மேற்கொண்டு வரும் எம்.எம்.ஆர்.டி.ஏ, சிட்கோ, மகாராஷ்டிரா சாலை போக்குவரத்துக் கழகம் ஆகியவை ஏக்நாத் ஷிண்டே கட்டுப்பாட்டில் வந்திருக்கின்றன. இதன் மூலம் அமைச்சரவையில் ஏக்நாத் ஷிண்டேயிக்கு இரண்டாவது இடம் கிடைத்திருக்கிறது.
GIPHY App Key not set. Please check settings