அ.தி.மு.க முன்னாள் அமைச்சரான எம்.ஆர்.விஜயபாஸ்கர், தற்போது அ.தி.மு.க கரூர் மாவட்டச் செயலாளராக இருந்து வருகிறார். இவர் மீது, கரூர் அருகே உள்ள வாங்கல் காட்டூர் பகுதியைச் சேர்ந்த தொழிலாதிபர் பிரகாஷ் என்பவர் தோரணக்கல்பட்டி மற்றும் குன்னம்பட்டி கிராமத்தில் உள்ள தனக்கு சொந்தமான ரூ.100 கோடி மதிப்புள்ள 22 ஏக்கர் நிலத்தை, எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆட்களை வைத்து மிரட்டி, போலியான ஆவணம் கொடுத்து சொத்தை அபகரித்துக் கொண்டதாக, கரூர் நகர காவல் நிலையத்தில் கடந்த மாதம் புகார் அளித்தார். இதற்கிடையில், மேலக்கரூர் சார்பதிவாளர் முகமது அப்துல் காதர், கரூர் நகர காவல் நிலையத்தில் அளித்த புகாரின், அடிப்படையில், தொழிலதிபர் பிரகாஷ் தனது மகள் சோபனாவுக்கு தான செட்டில்மெண்டாக எழுதிக் கொடுத்த ரூ. 100 கோடி மதிப்புள்ள சொத்தை, அசல் ஆவணம் தொலைந்து விட்டதாக வில்லிவாக்கம் காவல் நிலையத்தில் போலி சான்றிதழ் பெற்று பத்திரப்பதிவு மேற்கொண்டதாக புகாரில் தெரிவித்திருந்தார்.
அதோடு அந்த புகாரின் பேரில், காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த ரகு, ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த சித்தார்த்தன், கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த மாரப்பன், செல்வராஜ் ஆகியோர் மீது மோசடி செய்து கிரைய பத்திரம் பதிவு செய்ய முயன்றதாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடைபெற்று வந்தது. அதோடு இந்த வழக்கில் நில மோசடி செய்ததாக சாட்சியங்களின் விசாரணை அடிப்படையில் அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், அவரது சகோதரர் சேகர் ஆகியோரது பெயர்களை சேர்ப்பதற்கான நடவடிக்கைகளில் கரூர் நகர காவல்துறை ஈடுபட்டு வந்தது. இந்நிலையில், தன்மீது இப்படி ஒரு புகார் கொடுக்கப்பட இருப்பதை உணர்ந்த எம்.ஆர்.விஜயபாஸ்கர் தலைமறைவானார். அதோடு, இந்த வழக்கில் தொடர்புடைய மற்றவர்களும் தலைமறைவானார்கள்.
இதனிடையே, தலைமறைவாக இருந்த எம்.ஆர்.விஜயபாஸ்கர், கரூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தாக்கல் செய்த முன்ஜாமீன் மனு, நிராகரிக்கப்பட்டது. இதனிடையே, கடந்த 18-ஆம் தேதி, இந்த வழக்கு திடீரென சி.பி.சி.ஐ.டி போலீஸாருக்கு மாற்றப்பட்டது. அதனைத் தொடர்ந்து, தனிப்படைகள் அமைக்கப்பட்டு, முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் அவரது சகோதரர் சேகர், பிரவீன் உள்ளிட்ட 13 பேரை சி.பி.சி.ஐ.டி போலீஸார் ஐந்து தனிப்படைகள் அமைத்து தேடி வருவதாகவும் கூறப்படுகிறது. இதற்கிடையில், இந்த விவகாரத்தில் கரூர் நகர காவல் நிலையத்தில், மேல கரூர் சார்பதிவாளர் அளித்த புகாரில் வழக்கு பதிவு செய்த போது முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பெயர் சேர்க்கப்படவில்லை. அதற்கு பின்னர் சி.பி.சி.ஐ.டி போலீஸார் சாட்சியங்களிடம் நடத்திய விசாரணையின் அடிப்படையில், எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீது வழக்கு பதிவு செய்து அவரை தேடிவந்தனர். இந்நிலையில்தான், முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீது வாங்கல் காவல் நிலையத்தில் மற்றொரு புகாரில் ஆறு பிரிவுகளில் தற்போது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
பிரகாஷ் கரூர் நகர காவல் நிலையத்தில் அளித்திருந்த புகாரியின் அடிப்படையில், மனுதாரர் வாங்கல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வசிப்பதால், பிரகாஷ் அளித்த புகாரின் அடிப்படையில், கொலை மிரட்டல், மோசடி செய்தல், உள்ளிட்ட ஆறு சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனிடையே, 24 நாள்களுக்கு மேலாக தலைமறைவாக இருந்துவரும் எம்.ஆர்.விஜயபாஸ்கர், `எனது தந்தைக்கு உடல்நிலை சரியில்லாததால், அவரை மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அவரை அருகில் இருந்து கவனித்துக்கொள்ள வேண்டும். அதனால், இடைக்கால முன்ஜாமீன் வழங்க வேண்டும்’ என்று கரூர் அமர்வு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.
அந்த மனுவை கடந்த 4 – ம் தேதி விசாரித்த நீதிபதி சண்முகசுந்தரம், இடைக்கால முன்ஜாமீன் மீதான இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்தபின், அந்த மனுவை தள்ளுபடி செய்தார். இந்நிலையில், எம்.ஆர்.விஜயபாஸ்கர் தொடர்புடைய மூன்று இடங்களில் சி.பி.சி.ஐ.டி போலீஸார் சோதனை மேற்கொண்டனர். இந்நிலையில், கரூர் நீதிமன்றத்தில் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட ஜாமீன் மனு மீதான கோர்ட் விசாரணை நடவடிக்கைகளை தமிழினியன் என்ற இளைஞர் வாட்ஸ்அப் கால் வழியாக லைவாக எம்.ஆர்.விஜயபாஸ்கர் உறவினருக்கு காட்டியதாக கோர்ட் ஊழியர் கொடுத்த புகாரின் அடிப்படையில் கைது செய்யப்பட்டார். இந்நிலையில், ஜாமீன் கோரிய மனுவையும் நேற்று நீதிபதி தள்ளுபடி செய்தார். இந்நிலையில், இன்று சி.பி.சி.ஐ.டி போலீஸார் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தொடர்புடைய இடங்களில் இரண்டாவது முறையாக சோதனை நடத்தி வருகின்றனர்.
கரூர் – கோவை சாலையில் உள்ள என்.எஸ்.ஆர் நகர் அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள எம்.ஆர்.விஜயபாஸ்கரின் வீடு, ரெயின்போ நகரில் உள்ள சாயப்பட்டறை அலுவலகம், ரெயின்போ அப்பார்ட்மெண்டில் உள்ள அவரது தம்பி சேகர் வீடு உள்ளிட்ட இடங்களில் சி.பி.சி.ஐ.டி போலீஸார் சோதனை நடத்தி வருகின்றனர். சொத்து மோசடி வழக்கில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரின் முன் ஜாமீன் மனு நேற்று தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், சி.பி.சி.ஐ.டி போலீஸார் கரூர் மாவட்ட காவல்துறை பாதுகாப்புடன் மீண்டும் சோதனை மேற்கொண்டு வருவது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
GIPHY App Key not set. Please check settings