குஜராத்தில் அமெரிக்க நிறுவனம் ஒன்றுக்கு மொத்த முதலீட்டில் 70 சதவிகிதம் மானியம் கொடுக்கத் துணிந்த மத்திய அரசை விமர்சித்து சர்ச்சையைக் கிளப்பி இருக்கிறார் மத்திய கனரகத் தொழில் துறை அமைச்சர் ஹெச்.டி. குமாரசாமி.
பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசில் கனரகத் தொழில் துறை அமைச்சராக ஹெச்.டி.குமாரசாமி நியமிக்கப்பட்டுள்ளார். அவர் பொறுப்பேற்றவுடன் மத்திய அரசின் முடிவை எதிர்த்துக் கேள்வி எழுப்பி சர்ச்சையைக் கிளப்பினார்.
அமெரிக்காவைத் தலைமையிடமாகக் கொண்ட மைக்ரான் டெக்னாலஜி என்ற செமி கண்டக்டர் உற்பத்தி நிறுவனம் குஜராத்தில் 2.5 பில்லியன் டாலர் (ரூ.20,888 கோடி) முதலீட்டில் தொழிற்சாலையை அமைக்க உள்ளது.
இதில் அந்நிறுவனம் மேற்கொள்ளும் முதலீடு ரூ.4,188 கோடி மட்டுமே. மீதமுள்ள ரூ.16,700 கோடி மத்திய மற்றும் மாநில அரசுகள் வழங்கும் மானியமாக உள்ளது.
இந்த உற்பத்தி ஆலையில் 5000 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. எனில், வெறும் 5,000 பேருக்கு வேலைவாய்ப்பு தரும் நிறுவனத்துக்கு ரூ.16,700 கோடி மானியமாக வழங்கப்படுவது சரியா என்று கேள்வி எழுப்பி இருக்கிறார் குமாரசாமி.
இந்தக் கணக்குப்படி, ஒரு வேலைவாய்ப்புக்கு ரூ.3.2 கோடி மானியமாக வழங்கப்படுகிறது. இது மிகப் பெரிய தொகை. மானியமாக இவ்வளவு தொகை கொடுப்பதற்குப் பதிலாக உள்நாட்டு நிறுவங்களுக்கு மானியமாக வழங்கினால், இதைவிட அதிகமான வேலைவாய்ப்புகளை உருவாக்கலாம். உள்நாட்டு நிறுவனங்களை வலுப்படுத்தலாம் என்று அவர் கூறியுள்ளார். இது பெரும் சர்ச்சையைக் கிளப்பியது.
அவரது இந்தக் கருத்துக்கு சிவசேனா கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பிரியங்கா சதுர்வேதி ஆதரவு தெரிவித்திருந்தார். அதே போல, கர்நாடக தொழில் துறை அமைச்சர் எம்.பி. பாட்டிலும் அவருக்கு ஆதரவாகப் பேசியிருக்கிறார்.
இந்த நிலையில், குமாரசாமி பேசிய இந்தக் கருத்து வைரலாகப் பரவி, சர்ச்சைக்கு உள்ளாகி வெடித்திருக்கிறது. இதனைக் கண்டு பயந்துபோன குமாரசாமி, தனது கருத்திலிருந்து ஜகா வாங்கி திடீர் பல்டியும் அடித்திருக்கிறார்.
தனது கருத்து குறித்து குமாரசாமி செய்தியாளர்களிடம் விளக்கமாக எடுத்துச் சொன்னார்.
‘‘நான் எந்த குறிப்பிட்ட மாநிலத்தையும் சுட்டிக்காட்டி பேசவில்லை. என் கருத்து தவறாக புரிந்துகொள்ளப்பட்டது. எதிர்காலத்தில் எனது பேச்சில் நான் இன்னும் கவனமாக இருக்க வேண்டும். அதை செய்வேன்.
பிரதமர் நரேந்திர மோடி செமி கண்டக்டர் துறையில் எடுத்துவரும் முயற்சிகள் பாராட்டுக்குரியவை மற்றும் நாட்டுக்கு மிகவும் அவசியமானவை. குறிப்பாக, எலெக்ட்ரானிக் மற்றும் ஆட்டோமொபைல் துறையின் வளர்ச்சிக்கு செமி கண்டக்டர்களின் தேவை முக்கியமானது. அதற்காக எடுக்கப்படும் முயற்சிகளில் என்னுடைய துறையின் பங்களிப்பும் இருக்கும்.
என்னை நம்பி எஃகு மற்றும் கனரக தொழில்துறை அமைச்சகத்தை ஒப்படைத்த பிரதமருக்கு நன்றி. அதிகமான வேலைவாய்ப்புகளை உருவாக்கி தருவதுதான் எனது நோக்கம். அதில் அதிக கவனம் செலுத்துவேன்’ என்று கூறியிருக்கிறார்.
மத்திய அரசை விமர்த்து பேசியதும் ஹெச்.டி.குமாரசாமியைக் கொண்டாடிய பலரும், உடனே அவர் தனது கருத்து தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டது என்று பல்டி அடித்ததும் ஏமாற்றம் அடைந்து விமர்சிக்க ஆரம்பித்துவிட்டனர்.
‘அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா…’ என பலரும் கமென்ட் அடித்து குமாரசாமியைக் கலாய்த்து வருகின்றனர்!
GIPHY App Key not set. Please check settings