கேரள மாநிலம், ஆலப்புழா மாவட்டம், சென்னிதலா பகுதியைச் சேர்ந்தவர் கலா (36). இவரும் அதே பகுதியைச் சேர்ந்த அனில் என்பவரும் 15 ஆண்டுகளுக்கு முன் காதலித்தனர். அனில் அப்போது தென்னாப்பிரிக்காவில் பணி செய்துவந்துள்ளார். காதலுக்கு கலாவின் வீட்டில் எதிர்ப்பு கிளம்பியதை அடுத்து கலாவும், அனிலும் வீட்டைவிட்டு வெளியேறி திருமணம் செய்துகொண்டனர். அந்த சமயம் இதுகுறித்து கலாவின் பெற்றோர் போலீஸில் புகார் அளிக்கவில்லை. இதற்கிடையே ஒரு குழந்தைக்கு தாயான கலா 2009-ம் ஆண்டு திடீரென காணாமல் போனார். அப்போது, மற்றொருவருடன் சென்றுவிட்டதாக அனில் கூறிவந்துள்ளார். அந்த சமயத்தில் மானார் காவல் நிலையத்தில் அனிலின் தந்தை புகார் அளித்திருந்தார். ஆனாலும், தொடர் நடவடிக்கை இல்லாமல் அந்த வழக்கு கிடப்பில் போடப்பட்டது. சுமார் 15 ஆண்டுகள் ஆன நிலையில் கலா கொலைச் செய்யப்பட்டிருப்பதாகவும், அவரை காரில் ஏற்றி மது கொடுத்து கழுத்தை நெரித்து கொலைச்செய்ததும் இப்போது தெரியவந்துள்ளது. கலா கொலைச் செய்யப்பட்டது குறித்து அம்பலப்புழா போலீஸுக்கு ஒரு மொட்டை கடிதம் சென்றதைத் தொடர்ந்தே மீண்டும் விசாரணை நடத்தி கொலையாளிகள் கைது செய்யபப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
தற்போது இஸ்ரேல் நாட்டில் பணிசெய்யும் கலாவின் கணவர் அனிலை ஊருக்கு வரவழைத்து கைது செய்யும் நடவடிக்கையில் போலீஸார் இறங்கியுள்ளனர். இது குறித்து ஆலப்புழா எஸ்.பி சைத்ரா தெரசா ஜான் கூறுகையில், “கலா கொலைச் செய்யப்பட்டுள்ளதாக சில தகவல்கள் காவல் துறைக்கு கிடைத்தன. அதன்படி விசாரணை நடத்தியதில் கலாவை கொலைச் செய்த வழக்கின் பின்னணில் அனில்குமார் மற்றும் அவரது உறவினர்கள், நண்பர்கள் ஈடுபட்டது தெரியவந்தது. கலாவை கொலைச் செய்து அவரது உடலை அழிப்பதற்காக ஒருகாரில் உடலை எடுத்துச் சென்றுள்ளதும் தெரியவந்துள்ளது. ஆதாரங்களை அழிக்கும் செயலிலும் அவர்கள் ஈடுபட்டுள்ளனர்.
மேலும், அனிலின் வீட்டு வளாகத்தில் உள்ள செப்டிக் டேங்கில் இருந்து சில உடல் பாகங்கள் கண்டறியப்பட்டுள்ளன. அது, கலாவின் உடலின் பாகங்கள் என சந்தேகம் உள்ளது. அதை உறுதிபடுத்துவதற்காக ஃபாரன்சிக் பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளது. மேலும், பெண்கள் பயன்படுத்தும் லாக்கெட், கிளிப் உள்ளிட்டவையும் செப்டிக் டேங்கிலிருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந்த வழக்கில் முதல் குற்றவளியாக சேர்க்கப்பட்டுள்ள அனிலை இஸ்ரேலில் இருந்து வரவழைத்து கைதுசெய்ய நடவடிக்கை எடுத்துள்ளோம். 2, 3 மற்றும் 4-ம் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள ஜினு, சோமன், பிரமோத் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். அனைவர் மீதும் கொலை வழக்கு பதிவுசெய்யப்பட்டுள்ளது” என்றார்.
வேறு ஆணுடன் தொடர்பு உள்ளதாக சந்தேகம் ஏற்பட்டதை தொடர்ந்தே கலா கொலைச் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், உடல் மட்கிப்போகும் வகையில் ரசாயன திரவங்கள் செப்டிக் டேங்கில் ஊற்றப்பட்டுள்ளதாகவும் சந்தேகம் கிளம்பி உள்ளது. செப்டிக் டேங்கிலிருந்து எடுக்கப்பட்ட உடல் பாகங்ள் குறித்து அறிய டி.என்.ஏ பரிசோதனை நடத்தப்பட உள்ளது. இந்த நிலையில் கைதுசெய்யப்பட்ட மூன்று பேரையும் போலீஸார் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
GIPHY App Key not set. Please check settings