சென்னை: விஜய்க்குப் பிறகு அடுத்த தளபதி நீங்களா? என்ற ரசிகர்களின் கேள்விக்கு பதிலளித்த சிவகார்த்திகேயன் அந்த பேச்சுக்கே இடமில்லை என்று திட்டவட்டமாக தெரிவித்தார்.
ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில், சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடித்துள்ள படம், ‘அமரன்’. கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல், எம்.மகேந்திரன், சோனி பிக்சர்ஸ் இணைந்து தயாரிக்கும் இந்தப் படத்தில் சாய் பல்லவி, ராகுல் போஸ், புவான் அரோரா உட்பட பலர் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.
தமிழகத்தைச் சேர்ந்த, வீரமரணமடைந்த ராணுவ மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கைக் கதையை கொண்டு இந்தப் படம் உருவாகியுள்ளது. காஷ்மீரில் இந்திய ராணுவத்துக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையே நடக்கும் மோதல்தான் படம்.அக்.31-ம் தேதி படம் வெளியாகிறது. இப்படத்துக்கான புரோமோஷன் நிகழ்ச்சி அண்மையில் மலேசியாவில் நடைபெற்றது. இதில கலந்து கொண்டு பேசிய சிவகார்த்திகேயனிடம் ‘அடுத்த தளபதி நீங்களா?’ என்று கேள்வி எழுப்பினர்.
இதற்கு பதிலளித்து பேசிய சிவகார்த்திகேயன், “ஒரே தளபதிதான், ஒரே தலதான், ஒரே உலக நாயகன்தான், ஒரே சூப்பர்ஸ்டார்தான். இந்த ‘அடுத்த’ என்ற பேச்சுக்கே இடமில்லை. அதெல்லாம் வாய்ப்பே கிடையாது. அவர்களுடைய சினிமாக்களை எல்லாம் பார்த்துதான் நான் சினிமாவுக்கு வந்திருக்கிறேன். அவர்களைப் போல நன்றாக நடித்து நல்ல ஹிட் படங்கள் கொடுத்து ஜெயிக்கலாம் என்று நான் நினைக்கலாம். ஆனால் அவர்களாகவே ஆகணும் என்று நினைப்பது சரி கிடையாது. தவறு என்று நினைக்கிறேன்” என்றார்.
சமீபத்தில் விஜய் நடிப்பில் வெளியான ‘கோட்’ படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் ஹீரோ விஜய் தன்னிடம் இருக்கும் துப்பாக்கியை சிவகார்த்திகேயனிடம் கொடுத்து ‘இனி இது உங்களிடம் தான் இருக்க வேண்டும்’ என்று சொன்னது ரசிகர்கள் மத்தியில் விவாதத்தை கிளப்பியது குறிப்பிடத்தக்கது.
GIPHY App Key not set. Please check settings