சென்னையில் இன்று (டிசம்பர் 22) தி.மு.க செயற்குழுக் கூட்டம் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் தி.மு.க தலைவர் மற்றும் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளதாவது…
“2026-ம் ஆண்டு வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலிலும் தி.மு.க ஏழாவது முறையாக ஆட்சி அமைக்க வேண்டும். அது தான் நமது இலக்கு. மேலும், அந்த சட்டமன்றத் தேர்தலில் 200 இடங்களில் தி.மு.க கூட்டணி வெற்றி பெற வேண்டும். அதற்காக நாம் அனைவரும் உழைக்க வேண்டும். தற்போதே அதற்கான பணிகளைத் தொடங்க வேண்டும்.
கடந்த சில நாட்களாக எடப்பாடி பழனிசாமி வாக்கு சதவிகித கணக்கு ஒன்றைக் கூறி வருகிறார். அது ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கில் நீதிபதி குமாரசாமி போட்ட கணக்கையே மிஞ்சும் கணக்காக உள்ளது. அந்தக் கணக்கை அ.தி.மு.க தொண்டர்களுக்குக் கூட்டல், வகுத்தல் கணக்கு தெரியாது என்று நம்பி சொல்லிக்கொண்டிருக்கிறார். ஆனால், அந்தக் கணக்கை அடிப்படை அறிவு உள்ள எந்த அ.தி.மு.க-வினரும் நம்பமாட்டார்கள்.
கோழைச்சாமியாக இருக்கும் பழனிச்சாமி பா.ஜ.க-வின் டங்ஸ்டன் சுரங்க அனுமதியைக் கண்டித்திருக்கிறாரா? அம்பேத்கரை அவதூறாகப் பேசிய ஒன்றிய அமித்ஷாவுக்கு ஏன் கீச்சுக்குரலில் கூட எதிர்க்கவில்லை? எடப்பாடி பழனிசாமிக்குப் பிரதமரை எதிர்த்துப் பேசும் துணிச்சல் உண்டா?
தி.மு.க என்றால் கொள்கையும், அதை நிறைவேற்றும் தியாகமும் தான். ஆனால், உங்களின் (அ.தி.மு.க) அரசியலுக்கு என்ன அடிப்படை? நீங்கள் துரோகத்தைத் தவிர பெருமையாகச் சொல்லிக்கொள்வதற்கு என்ன இருக்கிறது?
வரலாற்றுக் காலத்தில் எப்படி சோழரின் ஆட்சியைப் பொற்காலம் என்று கூறினார்களோ, அப்படி இப்போது மக்கள் ஆட்சியில் தி.மு.க ஆட்சி பொற்கால ஆட்சி என்று கூறவேண்டும். தமிழ்நாட்டை வளர்த்தெடுத்தவர்கள் என்று கருப்பு – சிவப்புக்காரர்களைச் சொல்ல வேண்டும். வெல்வோம் இருநூறு… படைப்போம் வரலாறு!” என்று பேசினார்.
GIPHY App Key not set. Please check settings