in ,

‘சாத்தான்குளம் கொலையில் 9 போலீஸாருக்கும் தூக்கு தண்டனை வழங்குக’ – சிபிஐ இறுதி வாதம்

நீதிபதி முன்பு ஜெயராஜ் மனைவி கண்ணீர் | ஏப்.6-ல் தண்டனை அறிவிப்பு

‘சாத்தான்குளம் கொலையில் 9 போலீஸாருக்கும் தூக்கு தண்டனை வழங்குக’ – சிபிஐ இறுதி வாதம்

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் உட்பட 9 போலீஸாருக்கும் தூக்கு தண்டனை வழங்க வேண்டும் என இறுதி வாதத்தில் சிபிஐ கேட்டுக் கொண்டுள்ளது.

ஜெயராஜ் மனைவி நீதிபதி முன்பு நேரில் ஆஜராகி 9 பேருக்கும் உச்சபட்ச தண்டனை வழங்க வேண்டும் என கண்ணீர் மல்க கேட்டுக்கொண்டார். இதையடுத்து 9 பேருக்கான தண்டனை ஏப்ரல் 6-ல் அறிவிக்கப்படும் என நீதிபதி ஒத்திவைத்தார்.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்தவர் ஜெயராஜ். இவர் மகன் பென்னிக்ஸ். இவர்கள் சாத்தான்குளத்தில் செல்போன் கடை நடத்தி வந்தனர். கடந்த 2020 ஜூன் 19-ல் கரோனா ஊரடங்கு கட்டுப்பாட்டு நேரம் தாண்டி கடையை திறந்து வைத்திருந்ததாக கூறி ஜெயராஜ், பென்னிக்ஸ் இருவரையும் சாத்தான்குளம் போலீஸார் விசாரணைக்காக காவல் நிலையம் அழைத்துச் சென்றனர்.

பின்னர் காவல் நிலையத்தில் வைத்து இரவு முழுவதும் போலீஸார் தாக்கியதில் முதலில் பென்னிக்ஸ், அடுத்து ஜெயராஜ் உயிரிழந்தனர். இதையடுத்து சிபிஐ கொலை வழக்கு பதிவு செய்து காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், சார்பு ஆய்வாளர்கள் பாலகிருஷ்ணன், ரகுகணேஷ், காவலர்கள் முருகன், சாமதுரை, முத்துராஜா, செல்லத்துரை, தாமஸ் பிரான்சிஸ், வெயிலுமுத்து ஆகியோர் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்த வழக்கை மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் நீதிமன்ற நீதிபதி முத்துக்குமரன் விசாரித்து, 9 பேரும் குற்றவாளிகள் என அறிவித்தார். இவர்களுக்கு தண்டனை வழங்குவதற்கான விசாரணை நீதிபதி முன்பு இன்று நடைபெற்றது.

பின்னர் சிபிஐ வழக்கறிஞர் விஜயன் வாதிடுகையில், ‘குற்றம் நிரூபிக்கப்பட்டதால் குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை, இரட்டை ஆயுள் போன்ற அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும். அரிதானும் அரிதான காவல் கொடுர மரணம் வழக்குகளில் தூக்கு தண்டனை வழங்கலாம் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

பொதுவாக காவல் மரணங்களில் நேரடி சாட்சிகள் இருக்க மாட்டார்கள். இந்த வழக்கில் 3 பேர் நேரடி சாட்சிகளாக உள்ளனர். எனவே 9 பேருக்கும் அதிக பட்ச தண்டனை வழங்க வேண்டும்’ என்றார்.

போலீஸார் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், ‘குற்றம்சாட்டப்பட்ட 9 பேரும் ஐந்தரை ஆண்டுகள் மேலாக சிறையில் உள்ளனர். குற்ற வழக்கில் ஒருவருக்கு தண்டனை வழங்கும்போது அவரின் குடும்ப சூழல், உடல் நிலை, வயது, சிறையில் இருந்தது ஆகியவற்றை கவனத்தில் கொண்டு முடிவெடுக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.

இந்த வழக்கில் குற்றம் திட்டமிட்டு நடைபெற்றதா, திடீர் ஆத்திரம் காரணமாக நடைபெற்றதாக என்பதையும் பார்க்க வேண்டும். ஜெயராஜ் விசாரணைக்காக காவல் நிலையம் அழைத்துச் சென்றது வரை ஒன்றும் இல்லை. பென்னிக்ஸ் காவல் நிலையம் சென்ற பிறகு தான் அனைத்தும் நடந்துள்ளது.

பென்னிக்ஸ் போலீஸாரை கோபப்படுத்தும் வகையில் நடந்துள்ளார். இதனால் போலீஸார் தாக்கியுள்ளனர். போலீஸார் உள்நோக்கத்துடன் செயல்படவில்லை. உண்மையில் உள்நோக்கம் இருந்திருந்தால் இருவரை உடலில் உள்ள முக்கிய பாகங்களில் தாக்கியிருப்பார்கள். போலீஸாரின் செயல்பாடு மரணம் விளைவிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இல்லை’ என்றனர்.

தண்டனை குறித்து ஜெயராஜின் மனைவி செல்வராணியிடம் நீதிபதி கருத்து கேட்டார். அதற்கு அவர் கண்ணீர் சிந்தியபடியே கூறுகையில், ‘என் கணவரை போலீஸார் விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். விசாரணைக்காக அழைத்துச் சென்றுள்ளனர். விசாரித்து விட்டு அனுப்பிவிடுவார்கள் என நினைத்தேன். அப்பாவை அழைத்து வருவதாக மகனும் காவல் நிலையம் சென்றார்.

இருவரும் வீடு திரும்பவில்லை. நான் காவல் நிலையம் சென்று போலீஸார் காலில் விழுந்து இருவரையும் விட்டுவிடுமாறு கெஞ்சினேன். அதன் பிறகும் இருவரையும் விடவில்லை. இரவு முழுவதும் இருவரையும் கொடூரமாக தாக்கி கொலை செய்துள்ளனர். அனைவருக்கும் அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும்’ என்றார்.

பின்னர் நீதிபதி, ஏப்ரல் 6-ல் தண்டனை அறிவிக்கப்படும் என்று கூறி விசாரணையை ஒத்திவைத்தார்.

What do you think?

Written by Thirukumaran

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

“திரிணமூல் காங்கிரஸை வங்காள விரிகுடாவில் தூக்கி எறிவீர்” – மம்தா தொகுதியில் அமித் ஷா ஆவேசம்

தமிழகத்தில் ஏப்.8 வரை சில இடங்களில் மழை வாய்ப்பு….