சண்டிகர், சண்டிகர் மாநகராட்சி மேயர் பதவிக்கு நடந்த தேர்தலில் மோசடி நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், தேர்தலை நடத்திய அதிகாரி அதை மறுத்து உள்ளார்.
பஞ்சாப், ஹரியானா மாநிலங்களின் பொது தலைநகரம் சண்டிகர்.இதன் மாநகராட்சி மன்றத்தில் மொத்தம் 35 உறுப்பினர்கள். பா.ஜ., 14, ஆம் ஆத்மி 13, காங்கிரஸ் ஏழு, அகாலி தளம் ஒன்று.
மோசடி
இதற்கான மேயர் தேர்தல் நேற்று முன்தினம் நடந்தது.
இதில், பா.ஜ.,வைச் சேர்ந்த எம்.பி., கிரோன் கிர், அலுவல் சாராத உறுப்பினராக ஓட்டளித்தார்.
இந்த தேர்தலில், இண்டியா கூட்டணியில் உள்ள காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கூட்டணி அமைத்து போட்டியிட்டன.இண்டியா கூட்டணி வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பா.ஜ., வேட்பாளருக்கு 16 ஓட்டுகளும், இண்டியா கூட்டணி சார்பில் போட்டியிட்ட ஆம் ஆத்மி வேட்பாளருக்கு 12 ஓட்டுகளும் கிடைத்தன.
இதைத் தவிர, எட்டு ஓட்டுகள் செல்லாதவையாக அறிவிக்கப்பட்டன.இது பெரும் சர்ச்சையானது. பா.ஜ., மோசடி செய்ததாகவும், அதற்கு தேர்தலை நடத்திய அதிகாரி அனில் மாஷி துணை போனதாகவும் ஆம் ஆத்மி மற்றும் காங்., குற்றஞ்சாட்டின.
இந்த விவகாரம் தொடர்பாக, தேர்தலை நடத்திய அதிகாரி அனில் மாஷி நேற்று கூறியதாவது:
இந்த தேர்தலில் மொத்தம் 36 ஓட்டுகள் இருந்தன. இதன்படி, அனைவருக்கும் ஓட்டுச் சீட்டு வழங்கப்பட்டது.
தகராறு
சில ஓட்டுச் சீட்டுகளில், சில புள்ளிகள் மற்றும் குறியீடுகள் இருந்ததாக மாற்றித் தரும்படி, ஆம் ஆத்மி மற்றும் காங்கிரஸ் உறுப்பினர்கள் கோரினர். அதன்படி, 11 சீட்டுகள் மாற்றித் தரப்பட்டன.
ஓட்டுப் பதிவு முடிந்து எண்ணும்போது, எட்டு சீட்டுகளில் வேறு குறியீடுகள் இருந்ததால், அவை செல்லாதவையாக அறிவிக்கப்பட்டன.
அந்த ஓட்டுச் சீட்டுகளை பார்க்காமல், ஆம் ஆத்மி மற்றும் காங்., தேர்தல் ஏஜன்ட்கள் மேஜை மீது ஏறி தகராறு செய்தனர். மேலும், ஓட்டுச் சீட்டுகளை கிழித்தெறிந்தனர்.
தேர்தல் நடைமுறையை சீர்குலைக்கும் வகையில், அந்த இரண்டு கட்சியினர் சதி செய்து தகராறில் ஈடுபட்டனர்.இவ்வாறு அவர் கூறினார்.
இந்நிலையில், மறு தேர்தல் நடத்த உத்தரவிடக் கோரி, மேயர் தேர்தலில் ஆம் ஆத்மி சார்பில் போட்டியிட்ட குல்தீப் குமார், ஹரியானா – பஞ்சாப் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துஉள்ளார்.
இது குறித்து மூன்று வாரங்களுக்குள் பதிலளிக்கும்படி, சண்டிகர் நிர்வாகம் மற்றும் மாநகராட்சிக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
GIPHY App Key not set. Please check settings