`அர்ஜுன் ரெட்டி’ படத்தை இயக்கிய சந்தீப் ரெட்டி வாங்கா இயக்கத்தில் ரன்பீர் கபூர் நடிப்பில் உருவான ‘அனிமல்’ படம் ரிலீஸானது முதலே கடும் விமர்சனங்களைப் பல தரப்பினரிடமிருந்து பெற்றது.
இத்திரைப்படத்தில் தேவையற்ற அதீத வன்முறை மற்றும் ‘Alpha Male’ எனப்படும் அடாவடியான ஆணாதிக்கம் நிறைந்திருப்பதாகத் திரையுலகில் இருக்கும் இயக்குநர்கள், நடிகர்கள் எனப் பலரும் விமர்சித்திருந்தனர். குறிப்பாக இப்படம் இளைய தலைமுறையினரின் மனதில் தவறான தாக்கத்தை ஏற்படுத்துவதாகக் கூறியிருந்தனர்.
அந்த சமயத்தில் திரையுலகில் இருக்கும் பிரச்னைகளைத் தொடர்ந்து பேசிவரும் `Dev.D’, `Black Friday’, `Gangs of Wasseypur’ படங்களின் இயக்குநரும், சமீபத்தில் வெளியான ‘மகாராஜா’ படத்தில் வில்லான நடித்திருந்தவருமான அனுராக் காஷ்யப், “‘அனிமல்’ திரைப்படத்தையும், இயக்குநர் சந்தீப் வங்கா ரெட்டி குறித்தும் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டிருக்கிறது. எனக்கும் ‘அனிமல்’ திரைப்படத்தின் மீது பல விமர்சனங்கள் இருந்தன. பிறகு, இரண்டாவது முறையும் அப்படத்தைப் பார்த்தேன். முதல் பாதி பிடித்திருந்தது. இரண்டாம் பாதியில் பல சிக்கல்கள் இருந்தன.
சந்தீப் வாங்காவைச் சந்திக்க நல்ல வாய்ப்பு கிடைத்தத போது என்னிடம் இருந்த அனைத்து கேள்விகளையும் கேட்டேன். அவர், அனைத்திற்கும் பொறுமையாகப் பதிலளித்தார். ஒருவர் மீது உங்களுக்கு விமர்சனமிருந்தால், அவரிடம் அதைப் பேசி தெளிவுபடுத்தி விடுங்கள். கோபமிருந்தால் மனம்விட்டு பேசுங்கள். ஒருவர் மீது குற்றம் சுமத்துவதற்கும் முன், அவர் ஏன் அதைச் செய்தார் என்று அவரிடமே கேள்வி கேளுங்கள். அதுதான் சரியான தீர்வாக இருக்கும். உண்மையில் சந்தீப் வங்கா ரெட்டி மிகவும் நல்ல மனிதர். ‘அனிமல்’ மீது விமர்சனங்கள் எல்லோருக்கும் இருந்தாலும், அனைவரிடையேயும் அப்படம் ஒரு தாக்கத்தை ஏற்படுத்திருக்கிறது என்பது மறுக்கமுடியாத உண்மை” என்று பதிவிட்டிருந்தார். பலரும் ‘அனிமல்’ திரைப்படத்தை விமர்சித்தபோது அனுராக் இப்படி ஒரு பதிவை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருந்தது பேசுபொருளாகியிருந்தது
இது குறித்து சமீபத்திய நேர்காணல் ஒன்றில் பேசியிருக்கும் இயக்குநர் அனுராக் காஷ்யப், ” ‘அனிமல்’ திரைப்படத்தில் சண்டைக் காட்சிகள் எல்லாம் இயல்பாக இருந்தது. இசை பிரமாதமாக இருந்தது. ரன்பீர் கபூரின் நடிப்பு சிறப்பாக இருந்தது. படத்தின் முதல் பாதி சிறப்பாக இருந்தது. ஆனால், இரண்டாம் பாதியில்தான் சிக்கல்கள் இருக்கின்றன. நிறைய விமர்சனங்கள் இருக்கின்றன. படத்தை எவ்வளவு வேண்டுமானாலும் விமர்சிக்கலாம். ஆனால், இயக்குநரை தனிப்பட்ட முறையில் தாக்குவது தவறான விஷயம்.
படத்தின் மீது எனக்கும் விமர்சனங்கள் இருக்கிறது. அதற்காகக் கண்டனம் தெரிக்கவும், தனிப்பட்ட முறையில் தாக்கமாட்டேன். எதுவாக விமர்சனங்களும், கேள்விகளும் இருந்தால் வாய்ப்புக் கிடைக்கும்போது அதை சம்பந்தப்பட்டவர்களிடமே உரையாடித் தீர்வு காண்பதுதான் சிறந்தது. ‘அனிமல்’ திரைப்படம் எனக்குப் பிடித்திருந்தது என்று நான் சொன்னதும் என் மகள் என்னிடம் வந்து பல கேள்விகள் கேட்டார். நண்பர்கள், திரையுலகினர் எனப் பலரும் எனக்கு போன் செய்து 10,000 கேள்விகள் கேட்டனர்.
அவர்களிடம் நான் சொன்ன பதில், “மனிதன் என்று பெயர் வைத்து அதீத வன்முறை, ஆணாத்திக்கம் போன்றவையெல்லாம் இருந்தால் அப்படத்திற்குக் கண்டனம் தெரிவிக்கலாம். ஆனால், அப்படத்தின் பெயரே ‘அனிமல்’ அப்படியிருக்கையில் அதற்கு ஏன் கண்டனம் தெரிவிக்கிறீர்கள்” என்று சொன்னேன். அரசியல் ரீதியாக, கருத்து ரீதியாக சரியாக இருக்கின்றதா என்றெல்லாம் பார்க்காமல் அனைவருக்கும் பிடித்த நடிகரான ரன்பீர் கபூர், அப்படியொரு நெகட்டிவ் கதாப்பாத்திரத்தில் நடித்ததுதான் இவ்வளவு விமர்சனங்களுக்கும் காரணம் என்று நினைக்கிறேன்” என்று கூறியிருக்கிறார்.
GIPHY App Key not set. Please check settings