`கோக் ஸ்டுடியோ’ தமிழின் முதலாவது சீசன் நல்ல வரவேற்பைப் பெற்றதைத் தொடர்ந்து தற்போது அதன் இரண்டாவது சீசன் பாடல்கள் வரிசையாக வெளியாகி வருகின்றன.
அந்த வகையில் தற்போது கோக் ஸ்டுடியோ தமிழ் ‘கல்யாண கச்சேரி’ என்ற பாடலை வெளியிட்டிருக்கிறது. தமிழ் மண்ணின் திருமண கலாசாரங்களை மையப்படுத்தும் வகையில் இந்தப் பாடல் அமைந்திருக்கிறது. இந்தப் பாடலுக்கு ஜஸ்டின் பிரபாகர் இசையமைத்திருக்கிறார். சித்தாரா கிருஷ்ணகுமார், கபில் கபிலன் ஆகியோர் இப்பாடலைப் பாடியிருக்கின்றனர்.
இந்தப் பாடல் குறித்து இசையமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகர் பேசுகையில், “கோக் ஸ்டுடியோ தமிழில் கால்பதித்ததே எனக்குப் பெரிய ஆர்வத்தைக் கொடுத்தது. நான் அவர்களின் பயணத்தைத் தொடக்கத்திலிருந்தே பார்த்து வருகிறேன். இரண்டாவது சீசனில் அவர்களுடன் இணைந்திருப்பதில் மகிழ்ச்சி. ‘கல்யாண கச்சேரி’ பாடலின் உருவாக்கமே கொண்டாட்டமாக இருந்தது. திருமணங்களின் ஆராவாரத்தையும் உணர்வையும் கொண்டாட்டத்தையும் இசையில் கொண்டு வந்திருக்கிறோம். என்னைப் போலவே ரசிகர்களும் இந்தப் பாடலை ரசிப்பார்கள் என நம்புகிறேன். கபில், சித்தாரா போன்ற திறமை வாய்ந்த இசைக்கலைஞர்களுடன் பணியாற்றியது பேரனுபவம்” என்றார்.
சித்தாரா கிருஷ்ணகுமார் பேசுகையில், “கோக் ஸ்டூடியோ மிகச்சிறந்த பிளாட்பார்ம். இங்கே வெவ்வேறு பின்னணியையும் கலாசாரத்தையும் கொண்ட இசைக்கலைஞர்கள் ஒன்றாக இணைந்து பணியாற்ற முடிகிறது. சீசன் 2 வில் எனக்கும் பணியாற்ற வாய்ப்பு கிடைத்ததில் பெரும் மகிழ்ச்சி” என்றார்.
பாடல் பற்றி கபில் கபிலன் பேசுகையில், “எங்களின் பாடலுக்கு ரசிகர்களின் வரவேற்பு எப்படியிருக்கும் என்பதை அறிய ஆவலாகக் காத்திருக்கிறேன். ஜஸ்டின் பிரபாகர் மற்றும் குழுவுடன் இணைந்து பணியாற்றியது நல்ல அனுபவமாக இருந்தது. எல்லாரும் ஒன்றாக இணைந்து பிரமாண்டமாக ஒரு கல்யாண பாடலைப் படைத்திருக்கிறோம். கேட்பவர்களைக் கொண்டாட்ட மனநிலைக்கு அழைத்துச் செல்லும் வகையில் பாடல் இருக்கும். இது செம வைப்!” என்றார்.
GIPHY App Key not set. Please check settings