நடிகை பவித்ரா கவுடாவை ஆபாசமாக விமர்சித்த ரசிகர் ரேணுகா சாமி கொலை செய்யப்பட்ட விவகாரத்தில், பிரபல கன்னட நடிகர் தர்ஷனும், நடிகை பவித்ரா கவுடா உள்ளிட்ட 15 பேரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில், நடிகர் தர்ஷனின் மனைவி விஜயலட்சுமி, பெங்களூரு போலீஸ் கமிஷனர் தயானந்தாவுக்கு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், “நடிகர் தர்ஷனை சட்டப்பூர்வமாக திருமணம் செய்த ஒரே மனைவி நான்தான். எனக்கும் தர்ஷனுக்குமான எங்கள் சட்டப்படியான திருமணம் மே 19, 2003 அன்று தர்மஸ்தலாவில் நடந்தது.
ஆனால், பவித்ரா கவுடா தர்ஷனின் மனைவி என்று பத்திரிகையாளர் சந்திப்பின் போது நீங்கள் தவறான தகவலளித்துள்ளீர்கள். இந்த தவறை கர்நாடக உள்துறை அமைச்சரும், தேசிய ஊடகங்களும் மீண்டும் மீண்டும் செய்து வருகின்றன. எனவே, இந்த கடிதத்தின் மூலம் நான் மட்டும்தான் நடிகர் தர்ஷனின் மனைவி என்பதை தெளிவுபடுத்துகிறேன். மேலும், பவித்ரா கவுடாவை போலீஸ் பதிவேடுகளில் தர்ஷனின் மனைவி என்று குறிப்பிட வேண்டாம். இதனால் எனக்கும், என் மகன் வினீஷுக்கும் எதிர்காலத்தில் சிக்கல்கள் ஏற்பட வாய்ப்பிருக்கிறது.
பவித்ரா கவுடா, சஞ்சய் சிங் என்பவரைத் திருமணம் செய்து, அவர்களுக்கு ஒரு மகள் இருக்கிறார். இந்த உண்மைகள் போலீஸ் பதிவுகளில் துல்லியமாகப் பதிவு செய்யப்பட வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன். நீதித்துறை மீது எனக்கு முழு நம்பிக்கை உள்ளது, சட்டம் தன் கடமையை நிறைவேற்றும் என்று நம்புகிறேன். பவித்ரா கவுடா என் கணவரின் தோழி என்பதுதான் உண்மை. அவர் என் கணவனுடைய மனைவியல்ல.” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
GIPHY App Key not set. Please check settings