in

Doctor Vikatan: அடிக்கடி சாவியைத் தேடும் அளவுக்கு மறதி பிரச்னை… தீர்வுகள் உண்டா?


Doctor Vikatan: என் வயது 48. அடிக்கடி சில விஷயங்களை மறந்து போகிறேன். சாவியை வைத்த இடம் தெரியாமல் தேடுகிறேன். பேசும்போதே மறதி ஏற்பட்டு பேச்சை பாதியில் நிறுத்துகிறேன். இந்த ஞாபக மறதி பிரச்னைக்கு என்ன காரணம்… இதற்கு என்ன தீர்வு?

பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த மனநல மருத்துவர் சுபா சார்லஸ்

சுபா சார்லஸ்

அடிக்கடி ஞாபகமறதி ஏற்பட பல காரணங்கள் இருக்கலாம்.  பிபி, கொலஸ்ட்ரால் போன்ற பிரச்னைகளுக்காக நீங்கள் எடுத்துக்கொள்ளும் மருந்து, மாத்திரைகள்கூட ஞாபகமறதியை ஏற்படுத்தலாம்.  மனநல பிரச்னைகளுக்காக எடுத்துக்கொள்ளும் மாத்திரைகளும் காரணமாகலாம். அதாவது மூளையுடன் தொடர்புடைய மருந்து மாத்திரைகளால் திடீர் ஞாபக மறதி ஏற்படலாம். 

‘நல்லா படிச்சிருந்தேன்… ஆனா, எக்ஸாம் ஹால்ல போய் உட்கார்ந்து கொஸ்டீன் பேப்பரை பார்த்ததும் எல்லாம் மறந்துடுச்சு’ என சில மாணவர்கள் சொல்வதைக் கேட்டிருப்போம். இந்த வகை மறதிக்கு காரணம் ஸ்ட்ரெஸ். சிலருக்கு இந்த ஸ்ட்ரெஸ் உச்சத்துக்குப் போகும்போது வழக்கமாகச் செய்கிற விஷயங்கள்கூட மறந்து போகும். கண்ணுக்கு எதிரிலேயே சாவியை வைத்துக்கொண்டு, எங்கிருக்கிறது என்று தேடுவார்கள்.  அந்தச் சாவியின் பிம்பம் கண்களில் விழுந்தாலும், மூளை அதை கிரகித்துக்கொள்ளாது. அந்த அளவுக்கு அவர்களது மூளையில் ஏகப்பட்ட விஷயங்கள் திணிக்கப்பட்டிருக்கும்.

மறதி

இன்னும் சிலர் சரளமாகப் பேசிக்கொண்டே இருப்பார்கள்… திடீரென பேசுவதை நிறுத்திவிட்டு, ‘என்ன சொல்லிக் கொண்டிருந்தேன், எங்கே நிறுத்தினேன்’ என கேட்பார்கள். அதுவும் தற்காலிகமான மறதிதான். இப்படி ஞாபகமறதியின் பின்னணியில் பல காரணங்கள் இருக்கலாம்.  அதுவே, 80, 90 வயதானாலும் நினைவாற்றல் சிறிதும் மங்காமல் வாழ்பவர்களும் இருக்கிறார்கள். மூளையின் செயல்திறன் சிறப்பாக இருக்கவும், நினைவாற்றல் குறையாமலிருக்கவும் பிரெயின் ஃபுட்ஸ் (brain foods) எனப்படும் சில உணவுகள் அவசியம். 

அந்த வகையில் வைட்டமின் டி சத்து நினைவாற்றலுக்கு மிக முக்கியம். இது சூரிய வெளிச்சத்திலிருந்து நம் சருமம் வழியே உடலுக்குக் கிடைக்கக்கூடியது.  ஆனால், இன்று பெரும்பாலும் பலரும் வெயில் படாத அறைகளுக்குள் வாழப் பழகிவிட்டதால் நிறைய பேருக்கு வைட்டமின் டி பற்றாக்குறை இருக்கிறது. மருத்துவரின் ஆலோசனையோடு வைட்டமின் டி சப்ளிமென்ட் எடுத்துக்கொள்வது இந்தப் பிரச்னைக்கு உதவும். குறிப்பிட்ட டோஸ், குறிப்பிட்ட நாள்கள் இதை எடுத்துக்கொள்ள வேண்டியிருக்கும்.

வைட்டமின் டி

வைட்டமின் பி காம்ப்ளெக்ஸ் குறைபாட்டாலும் ஞாபக மறதி பிரச்னை ஏற்படலாம். இதற்கு சுத்திகரிக்கப்பட்ட அரிசி, தானியங்கள், பருப்பு, சர்க்கரை, எண்ணெய் போன்றவற்றை உபயோகிப்பதைத் தவிர்ப்பது அவசியம்.  மூளையின் செயல்திறனுக்கு  இரும்புச்சத்து, பொட்டாசியம் என பல சத்துகள் அவசியம். அவற்றில் மக்னீசியம் சத்துக்கு மிக முக்கியப் பங்கு உண்டு. மக்னீசியம் சத்து குறைந்தால் தூக்கம் பாதிக்கப்படும். அதன் விளைவாக நினைவாற்றல் பாதிக்கும். ஒமேகா 3 கொழுப்பு அமிலம் உள்ள உணவுகளும் அவசியம்.

உணவுகளின் மூலம் இவற்றைப் பெற முடியாதவர்கள், மருத்துவ ஆலோசனையோடு சப்ளிமென்ட்டாக எடுத்துக்கொள்ளலாம். மனதை ரிலாக்ஸ் செய்யப் பழக வேண்டும். உடற்பயிற்சி செய்வதை வழக்கமாக்கிக் கொள்ள வேண்டும். ஒட்டுமொத்த லைஃப்ஸ்டைலையும் மாற்றும்போது நினைவாற்றலும் மேம்படும்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.



Source link

What do you think?

Written by makkalnews.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

தி.மு.க Vs பா.ம.க Vs நா.த.க – விக்கிரவாண்டியில் அ.தி.மு.க வாக்குகள் யாருக்கு?! | DMK Vs PMK Vs NTK – Who will ADMK vote in Vikkiravandi?

Portugal vs France EURO 2024 France defeat Portugal via penalties book semis | Portugal vs France, EURO 2024: சோகத்தில் ரொனால்டோ