நடந்து முடிந்த மக்களவை தேர்தல் முடிவுகள் சிலருக்கு அதிர்ச்சியையும், சிலருக்கு ஆச்சர்யத்தையும் கொடுத்து இருக்கலாம். சிலர் வெறும் சொற்ப வாக்கு வித்தியாசத்தில் தோல்வி அடைந்திருப்பார்கள். அவர்களால் தோல்வியை தாங்கிக்கொள்ளவே முடியாமல் இருக்கும். மகாராஷ்டிராவில் பா.ஜ.க வேட்பாளர் ஒருவருக்கு அது போன்ற ஒரு நிலை ஏற்பட்டுள்ளது. அகமத் நகர் தொகுதியில் பா.ஜ.க சார்பாக சுஜெய் விகே பாட்டீல் போட்டியிட்டார். அவரை எதிர்த்து தேசியவாத காங்கிரஸ் (சரத் பவா) சார்பாக நிலேஷ் லாங்கே போட்டியிட்டார். இத்தொகுதியில் போட்டியிட சரத் பவார் கட்சிக்கு ஆளே இல்லாமல் இருந்தது. கடைசி நேரத்தில் அஜித் பவார் கட்சியில் இருந்து வந்த நிலேஷ் லாங்கேவிற்கு சரத் பவார் சீட் கொடுத்தார். இதில் நிலேஷ் லாங்கே யாரும் எதிர்பாராத விதமாக வெற்றி பெற்றுவிட்டார். இந்த வெற்றியை பா.ஜ.க வேட்பாளர் சுஜெய் விகே பாட்டீலால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. இதையடுத்து வாக்குப்பதிவு இயந்திரத்தில்தான் ஏதோ கோளாறு நடந்திருக்கவேண்டும் என்று சுஜெய் விகே பாட்டீல் நம்புகிறார்.
அவர் கட்சி நிர்வாகிகளிடம் கலந்து ஆலோசித்தபோது, மக்கள் பா.ஜ.க-விற்குதான் வாக்களித்தனர் என்று நம்பிக்கையுடன் தெரிவித்தனர். ஆனால் ஓட்டு ஒரு பக்கமாக விழுந்திருப்பதாக தெரிவித்தனர். இதையடுத்து அகமத் நகர் மக்களவை தொகுதியில் உள்ள பர்னார், சிரிகோண்டா, சேவ்காவ் உட்பட 6 சட்டமன்ற தொகுதியிலும் தனக்கு செல்வாக்குள்ள வாக்குச்சாவடியில் பயன்படுத்தப்பட்ட வாக்கு இயந்திரங்களை சரிபார்க்க சுஜெய் விகே பாட்டீல் முடிவு செய்துள்ளார். மொத்தம் 40 வாக்குச்சாவடி மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை சரிபார்க்க முடிவு செய்து, சுப்ரீம் கோர்ட் வழிகாட்டுதலின் பேரில் 18.9 லட்சம் ரூபாயை சுஜெய் விகே பாட்டீல் மாவட்ட ஆட்சித்தலைவரிடம் முன்பணமாக கட்டி இருக்கிறார். சில வாக்குச்சாவடியில் நீண்ட நாட்களாக தீர்க்கப்படாமல் இருந்த பிரச்னைகளை சுஜெய் விகே பாட்டீல் தீர்த்து வைத்தார்.
GIPHY App Key not set. Please check settings