IND vs BAN 1st Test: இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட வங்கதேச அணி இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது. 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் விளையாட இந்திய அணிக்கு இந்த டெஸ்ட் தொடர் முக்கியமானதாக இருக்கும். இந்திய அணி அடுத்ததாக பத்து டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது. ஐந்து டெஸ்ட் போட்டிகள் சொந்த மண்ணிலும், ஐந்து டெஸ்ட் போட்டிகள் மற்ற நாட்டிலும் விளையாட உள்ளது. இந்த ஆண்டு இறுதியில் ஆஸ்திரேலியா மண்ணில் பார்டர்-கவாஸ்கர் டிராபி தொடரில் விளையாடும் முன்பு, இந்தியா வங்கதேசம் அணிக்கு எதிராக 2 டெஸ்ட் போட்டிகளிலும், நியூசிலாந்துக்கு எதிராக 3 டெஸ்ட் போட்டிகளிலும் விளையாட உள்ளது. இந்த ஆண்டு தொடக்கத்தில் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்தியா வென்று இருந்தது குறிப்பிடத்தக்கது.
பங்களாதேஷ் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி வரும் செப்டம்பர் 19 முதல் 23 வரை சென்னையில் நடைபெற உள்ளது. இந்நிலையில் முதல் டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியை பிசிசிஐ ஞாயிற்றுக்கிழமை இரவு அறிவித்தது. 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் முதல் போட்டிக்கான அணியை மட்டும் பிசிசிஐ அறிவித்துள்ளது. இதில் நீண்ட நாட்களுக்கு பிறகு விராட் கோலி டெஸ்ட் அணிக்கு திரும்பி உள்ளார். சில சொந்த காரணங்களால் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விராட் கோலி விளையாடவில்லை. இந்நிலையில் முதல் டெஸ்ட் போட்டிகளுக்கான அணியில் இடம் பிடித்துள்ளார். விராட் கோலியை தொடர்ந்து ரிஷப் பண்ட் மீண்டும் டெஸ்ட் அணியில் இடம்பிடித்துள்ளார். கார் விபத்திற்கு பிறகு தற்போது தொடர்ச்சியாக அணியில் தனது இடத்தை தக்க வைத்துள்ளார்.
இந்திய அணியில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள்
டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளை தாண்டி டெஸ்ட் கிரிக்கெட்டில் ரிஷப் பந்த் இல்லாதது அணிக்கு பெரிய இழப்பாக இருந்தது. அவருக்கு பதில் விக்கெட் கீப்பராக கேஎஸ் பரத் விளையாடினார், ஆனாலும் அவரால் பெரிதாக ரன்கள் அடிக்க முடியவில்லை. துலீப் டிராபி தொடரில் விளையாடி தனது உடற்தகுதியை நிரூபித்துள்ள பந்த் மீண்டும் தேசிய அணியில் இடம் பிடித்துள்ளார். காயம் காரணமாக இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் பாதியில் வெளியேறிய கேஎல் ராகுலுக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இருப்பினும் பிளேயிங் 11ல் வாய்ப்பு கிடைக்குமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். ஆச்சரியமளிக்கும் விதமாக ஐபிஎல் தொடரில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்காக விளையாடி வரும் வேகப்பந்து வீச்சாளர் யாஷ் தயாள் தனது முதல் டெஸ்ட் அழைப்பை பெற்றுள்ளார்.
நீக்கப்பட்டுள்ள இளம் வீரர்கள்
விராட் கோலி, ரிஷப் பந்த், கேஎல் ராகுல் அணிக்கு திரும்பி உள்ளதால் சில வீரர்களை நீக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இங்கிலாந்துக்கு எதிராக தர்மசாலா டெஸ்ட் போட்டியில் சிறப்பாக விளையாடிய படிக்கல் பங்களாதேஷ் தொடரில் இடம் பெறவில்லை. அவர் விளையாடிய முதல் இன்னிங்ஸில் 65 ரன்கள் எடுத்து இருந்தார். மேலும் ரஜத் படிதார் அணியில் இடம் பெறவில்லை. இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் மூன்று போட்டிளில் விளையாடி வெறும் 63 ரன்கள் மட்டுமே அடித்தார். தொடர்ந்து பல வாய்ப்புகள் கொடுத்தும் பெரிதாக ரன்கள் அடிக்காத கேஎஸ் பாரத் அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். இனி அவருக்கு டெஸ்ட் தொடரில் வாய்ப்பு கிடைப்பது சந்தேகமே.
முதல் டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி:
ரோஹித் சர்மா (C), யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஷுப்மான் கில், விராட் கோலி, கே.எல். ராகுல், சர்பராஸ் கான், ரிஷப் பந்த் (WK), துருவ் ஜூரல் (WK), ஆர்.அஷ்வின், ஆர்.ஜடேஜா, அக்சர் படேல், குல்தீப் யாதவ், முகமது. சிராஜ், ஆகாஷ் தீப், ஜஸ்பிரித் பும்ரா, யாஷ் தயாள்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் – @ZEETamilNews
ட்விட்டர் – @ZeeTamilNews
டெலிக்ராம் – https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் – https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ
GIPHY App Key not set. Please check settings