ஈரோடு மாவட்டம், கவுந்தப்பாடி அருகே உள்ள பெருந்தலையூர், நத்தக்காட்டு வீதியைச் சேர்ந்தவர் பாஸ்கரன் (32). இவர், பெருமாநல்லூரில் உள்ள பனியன் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார். பாஸ்கரன் இன்ஸ்டாகிராமில் பெண்போல பேசி ஏமாற்றி, கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த சிலரிடம் பணம் பறித்ததாகக் கூறப்படுகிறது. அவர் ஆண் என்பதை தெரிந்துகொண்டவர்கள், பணத்தை திருப்பித் தருமாறு பாஸ்கரனுக்கு நெருக்கடி கொடுத்துள்ளனர்.
இதையடுத்து, அவர்களுக்குப் பணத்தை திருப்பித் தருவதற்காக பாஸ்கரன், தனது உறவினர்களிடம் பணம் கேட்டு வந்துள்ளார். மேலும், 5-ம் தேதிக்குள் பணம் கொடுத்துவிடுவதாகவும் பாபாஸ்கரன் உறுதியளித்திருந்தாராம். ஆனால், கேட்ட இடத்தில் பணம் கிடைக்காததால், பாஸ்கரன் மிகுந்த மன உளைச்சலில் இருந்துள்ளார்.
இந்த நிலையில், பாஸ்கரன் வேலைக்குச் செல்லாமல் வீட்டிலேயே இருந்துள்ளார். அவரது பெற்றோர் வேலை விஷயமாக வெளியில் சென்றுவிட்டு, மாலையில் வீடு திரும்பி உள்ளனர். அப்போது, வீட்டினுள் பாஸ்கரனைக் காணவில்லை. மாடிக்குச் சென்று பார்த்தபோது அங்குள்ள அறையில் பாஸ்கரன் தூக்கிட்டுத் தற்கொலை செய்தது தெரியவந்தது. இது குறித்து, பாஸ்கரனின் தாய் சித்ரா அளித்த புகாரின்பேரில், கவுந்தப்பாடி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
GIPHY App Key not set. Please check settings