பிரமாண்ட பொருட் செலவில் நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ், கமல்ஹாசன், அமிதாப் பச்சன், தீபிகா படுகோன் நடித்திருக்கும் ‘கல்கி 2898 AD’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
குறிப்பாக, விசித்திரமான லுக்கில் இருக்கும் கமலின் லுக் ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்திருக்கிறது. இப்படத்தில் கமல், அசாதாரணமான வில்லன் கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கிறார். இதுவரை அவர் நடித்திராத புதுமையான கதாபாத்திரமாக இது இருக்கும் என்று எதிர்ப்பார்க்கபடுகிறது.
இத்திரைப்படம் இந்த மாதம் ஜூன் 27ம் தேதி திரையரங்குகளில் தெலுங்கு, தமிழ், இந்தி எனப் பல மொழிகளில் வெளியாகவிருக்கிறது. இதையொட்டி நேற்று இப்படத்திற்கான புரோமோஷன் நிகழ்ச்சி மும்பையில் நடைபெற்றது. இதில் கமல், அமிதாப் பச்சன், பிரபாஸ், இயக்குநர் நாக் அஸ்வின், தீபிகா படுகோன், ராணா உள்ளிட்ட படக்குழுவினர் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
இவ்விழாவில் இயக்குநர் நாக் அஸ்வின் குறித்தும் தனது விசித்திரமான வில்லன் லுக் குறித்தும் பேசியிருக்கிறார் நடிகர் கமல் ஹாசன்.
‘வயதில் சிறியவராக இருக்கும் இயக்குநர் நாக் அஸ்வின் இவ்வளவு பெரிய படத்தை எப்படி எடுப்பார் என்ற சந்தேகம் உங்களுக்கு வந்ததா’ என்ற கேள்விக்குப் பதிலளித்த கமல், ” ‘சாதாரண மனிதர்கள், அசாதாரணமானச் செயலைச் செய்யும் வல்லமை பெற்றவர்கள்’ என்பதை நான் எப்போதும் நம்புகிறவன். என்னுடைய குரு பாலச்சந்தரைப் பார்த்தால் எதோ வருவாய் துறை அதிகாரியைப் போலத்தான் இருப்பார். ஆனால், அவர் திரையுலகில் செய்ததெல்லாம் அசாதாரணமான விஷயங்கள். யாருடைய வெளித்தோற்றத்தையும் வைத்து அவர்களின் திறமையை எடை போட முடியாது” என்றார்.
தனது விசித்திரமான வில்லன் லுக் குறித்து பேசிய நடிகர் கமல் ஹாசன், “இப்படத்தில் அசாதாரணமான வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன். ஹீரோவை விட வில்லன் கதாப்பாத்திரம் வலிமையானது. ஹீரோவால் நினைத்ததைச் செய்ய முடியாது. வில்லன் நினைத்தையெல்லாம் செய்பவன். அதனால், இக்கதாபாத்திரத்தை மிகவும் ரசித்துச் செய்திருக்கிறேன். இப்படத்தில் என்னுடைய இந்த வில்லன் கதாபாத்திரம் ரசிகர்களின் கவனம் ஈர்க்கும் என்று நினைக்கிறேன். இயக்குநர் என்னுடைய கதாபாத்திரத்தையும், அதற்கான லுக்கையும் மிக நேர்த்தியாகச் செய்திருக்கிறார்.
படத்தின் ட்ரெய்லரில் வந்த என்னுடைய லுக் ரசிகர்களைக் கவர்ந்திருப்பதில் மிக்க மகிழ்ச்சி. அந்த லுக்கைத் தேர்வு செய்ய நானும் இயக்குநரும் நிறைய ஒத்திகைகள் பார்த்தோம். நான் இதற்கு முன் செய்திடாத லுக்காக இருக்க வேண்டும், அதேசமயம் அதை யாரும் இதற்கு முன் செய்திருக்கக் கூடாது என்று பார்த்துப் பார்த்து அந்த லுக்கைத் தேர்வு செய்தோம்.
பார்த்தவுடன் கவரும், அனைவரும் திரும்பிப் பார்க்கும் வகையில் ஒரு லுக் செய்யலாம் என்று நினைத்தால் அதை அமிதாப் ஜி செய்கிறார் என்றார்கள். இராணுவ உடையில் லுக் வைக்கலாம் என்று நினைத்தால் அதை பிரபாஸ் செய்கிறார் என்றார்கள். பிறகு நானும், இயக்குநரும் நிறைய யோசித்து இந்த லுக்கைத் தேர்வு செய்தோம். நாங்கள் நினைத்த இந்த லுக்கை சரியாகக் கொண்டுவர பல முறை அமெரிக்கா சென்று வந்தோம்.
இப்படத்தில் கர்ப்பமாக இருக்கும் பெண் கதாபாத்திரம் கிடைத்திருந்தால் தீபிகா படுகோன் லுக்கில் கூட நடித்திருப்பேன்” என்று மகிழ்ச்சியுடன் பேசியிருக்கிறார்.
GIPHY App Key not set. Please check settings