நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகி, பா.ஜ.க கூட்டணி ஆட்சியமைக்கவிருக்கிறது. இந்த நிலையில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் எம்.பி-க்களின் கூட்டம், கொல்கத்தாவில் நடைபெற்றது. இதில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற கட்சித் தலைவராக மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தேர்வு செய்யப்பட்டார்.
மக்களவைக் குழுத் தலைவர் சுதீப் பந்த்யோபாத்யாவும், மக்களவை துணைத் தலைவராக ககோலி கோஸ் தஸ்திதாரும், மாநிலங்களவைக் குழுத் தலைவராக டெரெக் ஓ பிரையன், மாநிலங்களவை துணைத் தலைவராக சகரிகா கோஸும் தேர்வு செய்யப்பட்டனர். அதைத் தொடர்ந்து பேசிய, மம்தா பானர்ஜி, “பா.ஜ.க அரசியலமைப்பு சட்டத்திற்குப் புறம்பாக, சட்ட விரோதமாக ஆட்சி அமைக்க முயல்கிறது. அதற்கு என்னால் வாழ்த்து சொல்ல முடியாது.
பெரும்பான்மையான மக்கள் பா.ஜ.க-வை நிராகரித்திருக்கிறார்கள். அதேநேரம் எனது வாழ்த்துகள் நாட்டுக்காக இருக்கும். இப்போது தேர்வான அனைத்து எம்.பி-க்களும் அவர்கள் கட்சிகளை வலுப்படுத்துவார்கள். பா.ஜ.க மீண்டும் கட்சிகளை உடைக்க முயலும். பா.ஜ.க-வை நாங்கள் உடைக்க வேண்டிய அவசியம் இல்லை. ஆனால் அவர்கள் கட்சிக்குள்ளேயே பிளவுகள் ஏற்படும்… அது ஏற்கெனவே ஆரம்பித்துவிட்டது என்றே தெரிகிறது… பா.ஜ.க-வில் உள்ளவர்கள் மகிழ்ச்சியாக இல்லை என்பது நாட்டு மக்கள் அனைவருக்கும் தெரிகிறது.
கடந்த இரண்டு நாடாளுமன்ற தேர்தல்களிலும் பா.ஜ.க 300-க்கும் மேற்பட்ட இடங்களில் வென்று ஆட்சியைப் பிடித்திருந்த நிலையில், இந்த முறை 400 இடங்களில் வெல்வோம் என்றார்கள். ஆனால் தனிப்பெரும்பான்மையைக்கூட பெற முடியவில்லை. 240 சீட்களில் வென்ற பா.ஜ.க, கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சியை அமைக்கிறது. மோடியின் பதவியேற்பு விழாவில் கலந்துகொள்ள அழைப்பு வரவில்லை… எனவே நான் போக மாட்டேன்.
இந்தியா கூட்டணி இப்போது ஆட்சியமைக்க உரிமை கோரவில்லை என்பதற்காக, அது நடக்காது என்று பொருளல்ல. நமது நாட்டில் ஓரிரு நாள்கள் மட்டுமே நீடித்த அரசுகள்கூட இருக்கின்றன என்பதை மறந்துவிட வேண்டாம். இந்த அரசு 15 நாள்கள் நீடிக்குமா… இல்லை அதற்குள் கவிழுமா என்பது யாருக்குத் தெரியும்… என்ன நடக்கிறது என்பதை உன்னிப்பாகக் கவனித்து வருகிறோம். நேரம் வரும்போது இந்தியா கூட்டணி ஆட்சி அமைக்கும். குடியுரிமை திருத்தச் சட்டம் (சிஏஏ) உட்பட முரட்டுத்தனத்தைப் பயன்படுத்தி இயற்றப்பட்ட சட்டங்கள் ரத்து செய்யப்பட வேண்டும்” எனக் கடுமையாகச் சாடியிருக்கிறார்.
GIPHY App Key not set. Please check settings