நாய்களுக்கும், மனிதர்களுக்கும் இடையேயான பாசம் பிரிக்க முடியாதது. வளர்ப்பு நாய்க்காகச் சிலர் என்ன வேண்டுமானாலும் செய்வார்கள். தொழிலதிபர் ரத்தன் டாடா தனது வளர்ப்பு நாய்களுக்கு சிகிச்சையளிக்க மும்பையில் சொந்தமாக மருத்துவமனை ஒன்றைக் கட்டி இருக்கிறார். சமீபத்தில் அவரது வளர்ப்பு நாய் ஒன்றுக்கு ரத்தம் தேவைப்பட்டது. அது குறித்து சோசியல் மீடியாவில் குறிப்பிட்டு இருந்தார். உடனே ஏராளமானோர் தங்களது நாய்களை டாடா மருத்துவமனைக்கு அழைத்து வந்தனர்.
அதிகமானோர் தங்களது செல்லப்பிராணியான வளர்ப்பு நாய்க்குப் பிறந்தநாள் கொண்டாடியதைக் கேள்விப்பட்டு இருக்கிறோம். மும்பையில் ஒரு பெண் தனது வளர்ப்பு நாய் பிறந்த நாளை புதிய வகையில் கொண்டாடி இருக்கிறார். மும்பை செம்பூர் பகுதியில் வசிக்கும் சரிதா என்ற அப்பெண் தனது வீட்டில் வளர்க்கும் டைகர் என்ற வளர்ப்பு நாய் மீது அதிக பாசம் வைத்திருக்கிறார்.
அதன் பிறந்த நாளையொட்டி அந்த வளர்ப்பு நாயை அங்குள்ள அனில் ஜூவல்லர்ஸ் என்ற கடைக்கு அழைத்துச் சென்றார். நாயுடன் நகைக்கடைக்குப் பெண் வந்ததைப் பார்த்துக் கடை ஊழியர்கள் அதிர்ச்சியடைந்தனர். ஆனால் அப்பெண் ஜூவல்லரி வாங்க வந்ததே நாய்க்குத்தான் என்று தெரியவந்தவுடன் அவர்களால் ஒன்றும் சொல்ல முடியவில்லை. நாயை வெளியில் விடுங்கள் என்றும் சொல்ல முடியவில்லை. ஊழியர்கள் பல்வேறு விதமான தங்கச் சங்கிலிகளை அப்பெண்ணிடம் காட்டினர். அதில் ரூ.2.5 லட்சம் மதிப்புள்ள ஒரு சங்கிலியைத் தனது வளர்ப்பு நாய்க்கு அப்பெண் வாங்கினார்.
வாங்கியவுடன் அந்த சங்கிலியைக் கடையிலேயே நாய் கழுத்தில் அணிவித்து அழகு பார்த்தார். கடை ஊழியர்கள் இந்த காட்சியை வீடியோ எடுத்து இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு, “‘எங்கள் வாடிக்கையாளர் சரிதா தனது அன்பான நாய் டைகரின் பிறந்தநாளைச் சிறப்பாகக் கொண்டாட முடிவு செய்தார். இந்த நிகழ்வைக் குறிக்க, அவர் அனில் ஜூவல்லர்ஸுக்குச் வந்து ஒரு அழகான சங்கிலியைத் தேர்ந்தெடுத்தார். அதை டைகருக்குப் பரிசளித்தபோது, அவனது வால் உற்சாகத்துடன் அசைந்தது. மனிதர்களுக்கும், விலங்குகளுக்கும் இடையிலான ஆழமான மற்றும் அழகான நட்பைக் கொண்டாடுகிறோம்” என்று குறிப்பிட்டிருந்தனர்.
சோசியல் மீடியாவில் இந்த வீடியோ வைரலாக பரவியது. நெட்டிசன்கள் பலரும் ஆச்சரியம் தெரிவித்திருந்தனர். நாயைப் பத்திரமாகப் பார்த்துக்கொள்ளும்படி சிலர் ஆலோசனை வழங்கி இருந்தனர்.
GIPHY App Key not set. Please check settings