அதிகம் எதிர்பார்க்கப்பட்ட டி20 உலகக்கோப்பையின் இறுதிப்போட்டி தொடங்கியிருக்கிறது. டாஸை இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா வென்றிருக்கிறார். டாஸில் இரண்டு அணிகளின் கேப்டன்களும் பேசியவை இங்கே.
டாஸில் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா பேசியவை, “நாங்கள் முதலில் பேட் செய்கிறோம். இது நல்ல பிட்ச்சாக தெரிகிறது. இங்கே ஒரு போட்டியில் ஆடியிருக்கிறோம். இங்கே நல்ல ஸ்கோர்கள் எடுக்கப்பட்டிருக்கின்றன. இது ஒரு மாபெரும் தருணம். ஆனாலும் நாங்கள் பதற்றப்படாமல் அமைதியாக இருக்க வேண்டும். இதை மற்றுமொரு சர்வதேசப் போட்டியாக அணுக வேண்டும். ஒவ்வொரு வீரரும் மனதளவில் நிதானமடைய ஒவ்வொரு வழியை வைத்திருப்பார்கள். ஒவ்வொரு வீரரும் தனிப்பட்ட முறையில் தங்களின் பொறுப்பை உணர்ந்து ஆடினால் போதும்.
தென்னாப்பிரிக்கா அணி இந்தத் தொடர் முழுவதும் நன்றாக ஆடியிருக்கிறது. நாங்களுமே சிறப்பாகத்தான் ஆடியிருக்கிறோம். இரண்டு திறமையான அணிகளுக்கிடையேயான சிறப்பான போட்டியாக இருக்கும். எங்களுக்காக ஒவ்வொரு போட்டியிலும் ஒவ்வொரு சூழலிலும் வெவ்வேறு வீரர்கள் சிறப்பாக ஆடியிருக்கிறார்கள். அதையேதான் இந்தப் போட்டியிலும் எதிர்பார்க்கிறோம்” என்றார்.
தென்னாப்பிரிக்க கேப்டன் எய்டன் மார்க்ரம் பேசுகையில், “நாங்களும் முதலில் பேட் செய்யவே விரும்பினோம். ஆனாலும் பிட்ச்சிலுள்ள வெடிப்புகள் எங்கள் பௌலர்களுக்கு உதவும் என நினைக்கிறேன். ஒவ்வொரு போட்டியையும் போராடி வென்றிருக்கிறோம். அது எங்களுக்கு நல்ல நம்பிக்கையை கொடுத்திருக்கிறது. நாங்கள் இதுவரைக்கும் இறுதிப்போட்டிக்கு வந்ததே இல்லை. அதனால் எங்கள் மீது எந்த அழுத்தமும் இல்லை. நாங்கள் அனுபவித்து மகிழ்ந்து விளையாடுகிறோம்” என்றார்.
இரு அணிகளுமே இந்தத் தொடரில் எந்தப் போட்டியிலுமே தோற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய அணி 2007-இல் நடந்த டி20 உலகக்கோப்பையை வென்றிருக்கிறது. ஆனால் 2013-க்குப் பிறகு எந்த ஒரு ஐ.சி.சி கோப்பையையும் வெல்லவில்லை. தென்னாப்பிரிக்கா அணி 1992-லிருந்து இப்போது வரைக்குமே எந்த ஒரு உலகக் கோப்பையையும் வென்றதில்லை. எனவே இரு அணிகளுக்குமே கோப்பையை வென்றே தீர வேண்டும் என்கிற கனவு தீர்க்கமாக இருக்கிறது.
உங்களின் கணிப்புப்படி உலகக்கோப்பையை வெல்லப்போவது யார் என்பதை கமென்ட் செய்யுங்கள்.
GIPHY App Key not set. Please check settings