புதுடில்லி, பார்லிமென்ட் பட்ஜெட் கூட்டத் தொடர் ஜனாதிபதி உரையுடன் நேற்று துவங்கியது. முன்னதாக சபைக்கு வெளியே செய்தியாளர்களை பிரதமர் நரேந்திர மோடி சந்தித்தார்.
இடைக்கால பட்ஜெட்
அப்போது அவர் கூறியதாவது:
புதிய பார்லிமென்ட் அரங்கில் நடந்த முதல் அமர்வில், மகளிர் இட ஒதுக்கீடு மசோதா நிறைவேற்றப்பட்டது.
அதன்பின், மகளிர் சக்தியின் திறன், வீரம், வலிமை ஆகியவற்றை நாடு எவ்வாறு அனுபவித்தது என்பதை, நடந்து முடிந்த குடியரசு தின விழா அணிவகுப்பில் பார்த்தோம்.
அப்போது, பெண் வலிமை பறைசாற்றப்பட்டுள்ளது. மகளிர் இட ஒதுக்கீடு மசோதா நிறைவேற்றப்பட்டது மகத்தான சாதனை.
ஜனாதிபதி திரவுபதி முர்முவின் வழிகாட்டுதலில் பட்ஜெட் கூட்டத் தொடர் துவங்கவுள்ளது. நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்யவிருக்கிறார்.
பட்ஜெட் கூட்டத் தொடரை சுமுகமாக நடத்த அனைத்துக் கட்சிகளின் ஒத்துழைப்பு அவசியம். எனவே, எதிர்க்கட்சிகள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். சபையில் விவாதங்கள் ஆக்கப்பூர்வமாக இருக்க வேண்டும்; வாதங்கள் தீவிரமாக இருக்கலாம். இடையூறு செய்யும் வகையில் இருக்கக்கூடாது.
சபையில் அமளி செய்பவர்களை வரலாறு நினைவில் வைத்திருக்காது. அதே சமயம், சிறந்த கருத்துக்களால் பார்லிமென்டை அலங்கரித்தவர்கள் எவ்வளவு தான் விமர்சிக்கப்பட்டாலும், மக்களால் எப்போதும் நினைவு கூரப்படுகின்றனர்.
அவர்களின் வார்த்தைகள் வரலாற்றின் ஒரு பகுதியாக மாறும். அமளியில் ஈடுபட்டவர்கள் மனம் திருந்துவதற்கும், நேர்மறையான தடம் பதிப்பதற்கும் இந்த கூட்டத் தொடர் ஒரு வாய்ப்பாகும்.
முன்னேற்றம்
இந்த வாய்ப்பை தவறவிட வேண்டாம் என்று அனைத்து உறுப்பினர்களையும் கேட்டுக் கொள்கிறேன். தேர்தலில் வெற்றி பெற்று வந்த பின், பா.ஜ., முழு பட்ஜெட்டை தாக்கல் செய்யும்.
ஒவ்வொரு நாளும் நம் நாடு முன்னேற்றத்தின் புதிய உச்சங்களைத் தாண்டி வருகிறது என்பதை நான் உறுதியாக நம்புகிறேன். அனைத்தையும் உள்ளடக்கிய முன்னேற்றம் இது. மக்களின் ஆசியுடன் இந்த பயணம் தொடரும்.
இவ்வாறு பிரதமர் கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
GIPHY App Key not set. Please check settings