in

'எஸ்ஐஆர் பாஜக-விற்கு சாதகமானது என்றால், தவெக எப்படி ஆட்சிக்கு வந்தது?' – வானதி சீனிவாசன் கேள்வி


கோவை கணபதி பகுதியில் பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்த நாளையொட்டி இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பா.ஜ.க ஆந்திர மாநில பொறுப்பாளரும், முன்னாள் தேசிய மகளிரணி தலைவருமான வானதி சீனிவாசன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், “நாங்கள் தூய சக்தி, தமிழகத்தில் பெரிய மாற்றத்தை கொண்டு வரப் போகிறோம் என்று சொன்னவர்கள், அ.தி.மு.க வில் இருந்து ஜெயித்த எம்.எல்.ஏ க்களை வாங்கி, அவர்களையே வேட்பாளராக நிறுத்தியுள்ளனர். இதனால் மக்களின் கோடிக்கணக்கான பணம் வீணடிக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு இடைத் தேர்தல்கள் புதிதாக ஆட்சி அமைத்து இருக்கக் கூடிய கட்சியால் நடந்து கொண்டு உள்ளது.

நான் எந்த தொகுதிக்கும் போகாமல் ஜெயித்தேன். நான் பிரபலமான மக்கள் தலைவன், மக்களுக்கு என் மீது அவ்வளவு மரியாதை இருக்கிறது என்று, சொல்லக்கூடிய மாநிலத்தின் முதல்வர் விஜய் இன்று ஒவ்வொரு கிராமத்தையும் விடாமல் செல்கின்ற மாதிரி ரோடு ஷோ செய்கிறார். இத்தனை முறை ஒவ்வொரு ஊராக ரோடு ஷோ சென்றுதான் ஜெயிக்க முடியும் என்கிற நிலைமைக்கு வந்து இருக்கிறீர்கள் என்று சொன்னால், உங்களுடைய ஆட்சியினுடைய தரம் மக்களுக்கு நன்றாக தெரிகிறது என்று தான் அர்த்தம். மின்வெட்டு அதிகரித்துக் கொண்டே செல்கிறது. மின்வெட்டு இல்லாத மாவட்டங்களை கிடையாது. சட்டம் – ஒழுங்கு மோசமாக உள்ளது.

வானதி சீனிவாசன்
வானதி சீனிவாசன்

இண்டி கூட்டணியில் தமிழக வெற்றி கழகம் இணைந்து எஸ்.ஐ.ஆர்-க்கு எதிராக ஆதரவு கொடுக்கிறோம் என்று சொல்கிறார்கள், இதுபோன்ற கோமாளித்தனமான செயல் வேறு எதுவும் இருக்க முடியாது. எஸ்.ஐ.ஆர் மோசமாக உள்ளது. தப்பாக இருந்தது சொன்னால் த.வெ.க ஆட்சிக்கு எப்படி வந்தது? எஸ்.ஐ.ஆர் பி.ஜே.பி-க்கு சாதகமாக திட்டமிட்டு நடத்தியது என்று சொன்னால், அவர்கள் எப்படி ஆட்சிக்கு வந்தார்கள்? இதனால் நாங்கள் பிரயோஜனம் அடைந்திருக்கிறோம் என்று சொன்னால், எஸ்.ஐ.ஆர்-க்கு பின்பு வந்த அனைத்து தேர்தல்களிலும் பி.ஜே.பி தான் ஜெயித்து இருக்க வேண்டும். கேரளாவில் காங்கிரஸ் எப்படி ஜெயித்தது ? த.வெ.க எப்படி தமிழகத்தில் ஜெயித்தது? இதெல்லாம் மக்களை முட்டாள் ஆக்குவதற்கும், பி.ஜே.பி மீது குறை கூறுவதற்கும் நடத்துகின்ற நாடகம். எஸ்.ஐ.ஆருக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்யும் த.வெ.க, காங்கிரஸ் எந்தெந்த வாக்காளர்கள் விடுபட்டு உள்ளார்கள் என்ற லிஸ்ட்டை கொடுங்கள்.

த.வெ.க அரசு அமைந்ததில் இருந்து கிறிஸ்தவ அதிகாரிகளுக்கு தான் முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. கிறிஸ்தவ நபர்கள் தான் மிகவும் செல்வாக்கு உள்ள நபர்களாக அங்கு வளர்க்கப்படுகின்றனர். அதற்கு என்ன பதில்? மதவாத சக்தி என்றால் அவர்களுக்கு வராதா ? செக்யூலிசம்,   செக்யூலிசத்தை எல்லா பக்கமும் காட்டுங்கள். மதவாத சக்தி என்று பாரதிய ஜனதாவை குற்றம் சாட்டும் ஆதவ் அர்ஜுனாவிற்கு, கிறிஸ்தவ அதிகாரிகளுக்கு தான் முக்கியத்துவம் கொடுப்பது கண்ணுக்குத் தெரியவில்லையா? இந்து மத நம்பிக்கைகளை கொச்சைப்படுத்துவதை தி.மு.க தலைவர்கள் தொடர்ச்சியாக செய்து கொண்டு இருக்கின்றனர். யாராக இருந்தாலும், நாகரிகத்தோடு, அரசியல் நாகரீகத்தோடு தங்களது விமர்சனத்தை வைக்க வேண்டும். பெரும் போராட்டத்திற்கு பிறகு அரசியலுக்கு வரும் பெண்களை மூத்த தலைவர் உருவ கேலி செய்யக் கூடாது. இது கண்டிக்கப்பட வேண்டியது” என்றார்.



Source link

What do you think?

Written by makkalnews.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

"ஐயப்பப் பக்தர்களின் உணர்வுகளை மதித்து, விருப்பங்களை நிறைவேற்றுவோம்" – கேரள தேவஸ்வம் அமைச்சர் உறுதி

‘குண்டுக்கட்டாக கைது செய்யும் போலீஸ்;நடுத்தெருவில் அமர்ந்த செவிலியர்கள்!’ -எக்மோரில் என்ன நடக்கிறது?