in

கட்டா குஸ்தி 2 திரைப்படம்……..

இயக்குநர் செல்லா அய்யாவு…..

கடந்த 2022-ஆம் ஆண்டு விஷ்ணு விஷால், ஐஸ்வர்யா லட்சுமி நடிப்பில் வெளியான ‘கட்டா குஸ்தி’ படம் பேசிய கருத்துகளும், சுவாரஸ்யமான திரைக்கதையும் பெரிதும் பாராட்டப்பட்டது. தற்போது அந்தக் கதையின் தொடர்ச்சியாக இரண்டாம் பாகத்தை உருவாக்கி இருக்கிறார் இயக்குநர் செல்லா அய்யாவு.

முதல் பாகத்தின் நிகழ்வுகளுக்குப் பிறகு, வீரா (விஷ்ணு விஷால்) மற்றும் கீர்த்தி (ஐஸ்வர்யா லட்சுமி) தம்பதியினர் தங்களது குட்டி மகளுடன் வாழ்ந்து வருகிறார்கள். தன் மனைவிக்கு கொடுத்த வாக்குறுதியின்படி அவரது மல்யுத்த கனவுக்கு துணை நிற்கிறார் வீரா. கீர்த்தி ரயில்வேயில் பணிபுரிந்து கொண்டே தன் மல்யுத்த பாதையில் தொடர, வீரா வீட்டில் இருந்து குழந்தையை பார்த்துக்கொள்ளும் ‘ஹவுஸ் ஹஸ்பண்ட்’ ஆக இருக்கிறார்.

கீர்த்தி விளையாட்டில் அடுத்தடுத்த உயரங்களைத் தொட முயலும்போது, அவருக்கு எதிராக அவரது கோச் சதி செய்கிறார். இதில் வீரா பகடைக்காயாக மாற, கணவன் – மனைவி இடையே விரிசல் விழுகிறது. இவர்களுக்கு நடுவில் இவர்களது மகள் எப்படித் தவிக்கிறார், இருவருக்கும் இடையிலான சிக்கல் தீர்ந்ததா ‘கட்டா குஸ்தி 2’ படத்தின் மீதிக் கதை.

முதல் பாகத்தின் கலகலப்பான டோனை அப்படியே இதிலும் பின்பற்றி படம் முழுக்க ஒருவித இலகுவான மனநிலையில் ஆடியன்ஸை வைத்திருப்பதில் இயக்குநர் செல்லா அய்யாவு வெற்றி பெறுகிறார். படம் முழுக்க ஆங்காங்கே போகிற போக்கில் வரும் நகைச்சுவை வசனங்கள் அப்ளாஸ் அள்ளுகின்றன.

குறிப்பாக கருணாஸ், காளி வெங்கட் வரும் காட்சிகள், கருணாஸுக்கும் அவரது மனைவியாக வரும் லிஸி ஆண்டனிக்கும் இடையிலான உரையாடல்களை சொல்லலாம். இதுபோன்ற காட்சிகள்தான் படத்தை முழுமையாக உட்கார்ந்து பார்க்க பெரிதும் உதவியுள்ளன.

ஒரு திரைப்படத்தை அதன் ஆரம்பக் காட்சிகளை வைத்து மட்டுமே எடைபோடக் கூடாது என்பதுதான் பொதுவான விதி. திரைக்கதையின் இறுதியில் ஏதேனும் ஒரு திடீர் திருப்பம் வைக்கப்பட்டு, அதுவரை நாம் பார்த்த காட்சிகளின் பரிமாணத்தையே அது மாற்றிவிடக்கூடும்.

ஆனால், பெண் விடுதலை பேசுவதாக விளம்பரம் செய்யப்பட்ட ஒரு படத்தின் ஆரம்பக் காட்சியிலேயே, நாயகன் தண்ணீர் லாரியை சுற்றி நிற்கும் பெண்களுக்கு இடையே முண்டியடித்துக் கொண்டு வரும்போது, அவரது தலை இரண்டு பெண்களின் இடைகளுக்கு நடுவில் மாட்டிக்கொள்வதாகவும், அதிலிருந்து தப்பிக்க அவர் ஒரு பெண்ணின் இடையை கிள்ளுவதாகவும் காட்சி வைத்திருந்தால் அதை என்னவென்று சொல்வது?

‘கட்டா குஸ்தி’ முதல் பாகம் இடைவேளைக்குப் பிறகு சற்றே ஆணாதிக்கப் பாதைக்குத் திரும்பினாலும், கமர்ஷியல் சினிமா எல்லைக்குள் பாலின சமத்துவத்தை அது ஓரளவுக்கு பேச முயன்றது. ஆனால் பாலின அரசியல், சமத்துவம் குறித்த விவாதங்கள் மிகவும் பரவலாக இருக்கும் இந்த 2026-ஆம் ஆண்டில், அதன் இரண்டாம் பாகத்தை எடுப்பது என்பது கத்தி மேல் நடப்பதற்கு சமம். முதல் பாகத்தை விட இது ஒரு படி மேலே சென்று அப்படியான விஷயங்களை பேசியிருக்க வேண்டும். துரதிருஷ்டவசமாக, முதல் பாகத்தில் இருந்த அந்த சிறிய முன்னேற்றங்களையும் கூட பின்னுக்குத் தள்ளி, 80, 90-களில் வெளியான படங்களை போல ஒன்றை எடுத்திருக்கிறார் இயக்குநர்.

ஒரு தடகள வீராங்கனை தாயான பிறகும் தன் கனவைத் தொடர்வது, ஒரு ஆண் வீட்டைப் பார்த்துக்கொள்ளும் தந்தையாக இருப்பது, தேர்தலில் பெண்களுக்கான இடஒதுக்கீட்டின் முக்கியத்துவம் என சில முற்போக்கான விஷயங்கள் ஆங்காங்கே தூவப்பட்டிருந்தாலும், அவை யாவும் படத்தின் உள்ளே இருக்கும் ஆணாதிக்க முகமூடியை மறைப்பதற்காக செய்யப்பட்ட போலி முயற்சிகளோ என்று தோன்றாமல் இல்லை.

நாயகனின் மகளின் வகுப்பு ஆசிரியை மீனு (மோக்‌ஷா) கதாபாத்திரம் இதற்கு ஒரு சிறந்த உதாரணமாக சொல்லலாம். அவருக்கும் நாயகனுக்கும் இடையே தவறான உறவு இல்லை என்று காட்டினாலும், அவரை ஒரு முட்டாள் பெண்ணாகவும், திருமணமான ஓர் ஆணிடம் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்று தெரியாதவர் போலவும் காட்டி படம் முழுக்க அவர் வெறும் போகப்பொருளாக மட்டுமே பயன்படுத்தப்பட்டிருக்கிறார். ‘முந்தானை முடிச்சு’, ‘நாட்டாமை’ போன்ற படங்களில் வரும் அதே ‘ஸ்லீவ்லெஸ்’ டீச்சர் கதாபாத்திரம். அவரது நீண்ட கூந்தலை காட்டுவதாகக் கூறி கேமரா ஆங்கிளை வேண்டுமென்றே கோக்குமாக்காக வைத்திருப்பதும், நடனக் காட்சிகளை கையாண்ட விதமும் படம் சொல்ல வரும் கருத்துக்கு அப்படியே நேரதிர் முரணாக இருக்கிறது.

ஹவுஸ் ஹஸ்பண்ட் என்றால் இழிவு அல்ல என்று பேசிவிட்டு அடுத்தக் காட்சியிலேயே சம்பந்தமே இல்லாமல் ஹீரோவின் வீரபராக்கிரமத்தை பறைசாற்ற ஒரு சண்டை காட்சி ஏன்?

மனைவிக்கு விஷம் வைப்பதை பற்றிய ஜோக்குகள் (?), ஆண்கள் எப்படி ஆணாதிக்க விதிகளின்படி நடந்துகொண்டால் பெண்களுக்கு மத்தியில் மரியாதை கிடைக்கும் என்ற உபதேசங்கள் என படம் முழுக்க இந்த முரண்கள் தொடர்கின்றன. இவை தமிழ் சினிமாவுக்கு புதிதல்ல என்றாலும் இதுபோன்ற ‘சோ கால்டு’ பெண்ணிய திரைப்படங்கள் என்று வரும்போதுதான் அவை கூடுதல் விமர்சனத்துக்கு உள்ளாகின்றன.

படத்தில் குறிப்பிட்டு சொல்ல வேண்டிய இன்னொரு அம்சம், படத்தில் வரும் சிறுமி கதாபாத்திரம். பெரியவர்கள் போல குழந்தைகள் பேசும் கதாபாத்திர வார்ப்புகள் 2000-களின் தொடக்கத்திலேயே வழக்கொழிந்துவிட்ட நிலையில், அதையும் மீட்டுக் கொண்டு வந்திருக்கிறார் இயக்குநர். ‘கியூட்னஸ்’ என்ற பெயரில் ஒரு குழந்தை கதாபாத்திரத்தை அதிகப்பிரசங்கித்தனமாக பேசவிட்டுள்ளனர்.

இதையெல்லாம் தாண்டி ஒரு படமாக ‘கட்டா குஸ்தி 2’ எப்படி இருக்கிறது என்று பார்த்தால், முதல் பாகத்தில் குஸ்தி விளையாட்டு கதைக்கு முக்கியப் பங்களிப்பைத் தந்தது, ஆனால் இதில் விளையாட்டு வெறும் பெயரளவுக்கு மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட முதல் பாதி முழுக்கவே படம் எதை நோக்கி போகிறது என்ற ஐடியா எதுவும் இல்லாமல் தாறுமாறாக செல்கிறது திரைக்கதை.

நாயகியின் முன்னேற்றத்தில் பொறாமை கொள்ளும் அவரது கோச். ‘அவள் முன்னேறிக் கொண்டே இருக்கிறாள், நீ அப்படியே இருக்கிறாய்’ என்று கோச்சின் மனைவி கடிந்து கொள்வதாக ஒரு காட்சி வருகிறது. இதில் என்ன லாஜிக் என்றே புரியவில்லை. வகுப்பில் இருக்கும் மாணவி அடுத்த வகுப்புக்கு பாஸ் ஆகிச் செல்வதற்காக அவரது ஆசிரியரை ஏன் கடிந்து கொள்ள வேண்டும்? அவர்தான் மெயின் வில்லன் போலிருக்கிறது என்று நாம் நினைக்கும் தருணத்தில் அவர் காணாமல் போய்விடுகிறார்.

நாயகனாக விஷ்ணு விஷால் முதல் பாகத்தை விட ஒரு படி மேலாக நல்ல நடிப்பை வழங்கி இருக்கிறார். எமோஷனல் காட்சிகளில் ஈர்க்கிறார். ஐஸ்வர்யா லட்சுமியின் நடிப்பில் குறைகள் எதுவும் இல்லை என்றாலும் பல இடங்களில் டப்பிங் சுத்தமாக ஒட்டவில்லை. ஷான் ரோல்டனின் பின்னணி இசை படம் தொய்வடையும் இடங்களில் காப்பாற்ற முயல்கிறது.

வெறும் கைதட்டலுக்காக மட்டுமே வலிந்து திணிக்கப்பட்ட ‘அப்படிப் போடு’ பாடல், அதிலும் இரண்டு முறை வேறு வருகிறது. கிளைமாக்ஸில் வரும் கேமியோக்களும் வீணடிக்கப்பட்டுள்ளது. அதிலும் இறுதியில் வரும் நீதிமன்ற காட்சியும், அதில் கதாபாத்திரங்கள் பேசிக்கொள்வதாக வரும் காட்சியும் படு அபத்தம்.

முதல் பாகத்தின் வெற்றியை மனதில் கொண்டு ஒரு படத்தை எடுக்க நினைத்தவரை சரிதான். ஆனால் அப்படம் கொண்டிருந்த நோக்கத்தை சிதைக்கும் வகையில் காட்சிகளை வைத்திருக்க வேண்டாம். படம் கொண்டிருக்கும் அபத்தங்களை மறக்கச் செய்யும் வகையில் திரைக்கதை மேஜிக்கும் முற்றிலுமாக மிஸ்ஸிங் என்பதால் சுமாரான ஒரு திரைப்படமாக மட்டுமே மிஞ்சுகிறது ‘கட்டா குஸ்தி 2’.

What do you think?

Written by Thirukumaran

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

`அதிமுகவில் நான் இருக்கிறேனா இல்லையா என்று எனக்கே தெரியவில்லை!’ – சி.வி.சண்முகம்

லிங்கம் சீரியசான கிரைம் த்ரில்லர்…….