கொடைக்கானலில் சாலை வசதியில்லாத மலைக் கிராமங்களுக்கு வாக்குப் பதிவு இயந்திரங்கள் குதிரை மூலமாக புதன்கிழமை (ஏப்.22) மாலை எடுத்துச் செல்லப்பட்டன.
தமிழகத்தில் நாளை (ஏப்.23) சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி, திண்டுக்கல் மாவட்டம் பழநி தொகுதிக்கு உட்பட்ட கொடைக்கானல் மலைப் பகுதியில் 121 வாக்குச்சாவடிள் என மொத்தம் 339 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில், ஆண்கள் 1,15,728, பெண்கள் 1,21,582, இதரர் 49 என் மொத்தம் 2,37,359 வாக்காளர்கள் உள்ளனர்.
புதன்கிழமை (ஏப்.22) காலை பழநி தேர்தல் நடத்தும் அலுவலர் அலுவலகத்தில் இருந்து அனைத்து வாக்குச் சாவடிகளுக்கும் வாகனங்களில் வாக்குப் பதிவு இயந்திரங்கள் உட்பட தளவாட பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டன. அதில், கொடைக்கானல் அருகேயுள்ள வெள்ளகெவி, சின்னூர், பெரியூர் ஆகிய மலைக் கிராமங்களில் மொத்தம் 508 வாக்காளர்கள் உள்ளனர்.

இந்தக் கிராமங்களுக்கு சாலை வசதியில்லாததால் வாக்குப் பதிவு இயந்திரங்களை குதிரை மூலமாக எடுத்து செல்லப்பட்டன. நக்சல்கள் நடமாட்டம் உள்ள பகுதி என்பதால் துப்பாக்கி ஏந்திய துணை ராணுவத்தினர், நக்சல் தடுப்பு பிரிவு போலீஸார் பாதுகாப்புடன் கொண்டு சென்றனர்.
பழநியில் இருந்து கொடைக்கானல் வட்டக்கானல் வரை வாகனத்தில் சென்று, அங்கிருந்து 8 கி.மீ., தூரம் கரடு, முரடான பாதையில் பல மணி நேரம் நடந்து சென்று அவற்றை அந்தந்த வாக்குச் சாவடிகளில் கொண்டு சேர்த்தனர்.
மன்னவனூர் ஊராட்சிக்கு உட்பட்ட மஞ்சம்பட்டி கிராமத்திற்கு, திருப்பூர் மாவட்டம் வழியாக கனரக வாகனத்தில் வாக்குப் பதிவு இயந்திரங்கள் கொண்டு செல்லப்பட்டன.
நாளை வாக்குப் பதிவு நிறைவடைந்ததும், வாக்குப்பதிவு இயந்திரங்களை நாளை மறுநாள் (ஏப்.24) காலை திண்டுக்கல்லில் உள்ள வாக்கு எண்ணிக்கை மையத்துக்கு எடுத்து செல்லப்படும் என தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர்.



GIPHY App Key not set. Please check settings