ஓசூர்: தளி அருகே குட்டியுடன் சுற்றிய யானையை கிராம மக்கள் வனப்பகுதிக்குள் விரட்டியபோது, அப்பகுதியில் இருந்த தடுப்பு இரும்பு வேலியை கடக்க முடியாமல் திணறிய குட்டிக்கு தாய் யானை வழி ஏற்படுத்தி பாதுகாப்பாக அழைத்துச் சென்ற நிகழ்வு கிராம மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
கிருஷ்ணகிரி மாவட்டம் தளி அருகே ஜவளகிரி வனப்பகுதியிலிருந்து வெளியேறிய 5-க்கும் மேற்பட்ட யானைகள் தேவர்பெட்டா பகுதிக்கு வந்தன. அப்போது பொதுமக்கள் யானைகளை விரட்டியபோது, யானைகள் அப்பகுதியில் உள்ள 300 அடி உயர மலைக்குன்று மீது ஏறி அங்கிருந்த தடுப்புகளைச் சேதப்படுத்தின.
பின்னர் மீண்டும் கீழே இறங்கின. தகவல் அறிந்து அங்கு வந்த வனத்துறையினர் யானைகளை அங்கிருந்து வனப்பகுதிக்குள் இடம்பெயரச் செய்தனர்.
இதுபோல தேவர்பெட்டாவின் இன்னொரு பகுதியில் குட்டியுடன் சுற்றிய யானையை, அப்பகுதி மக்கள் விரட்டியபோது அப்பகுதியில் வனத்துறையினரால் அமைக்கப்பட்ட இரும்பு கம்பி தடுப்பு வேலியை கடக்க முடியாமல் குட்டி யானை திணறியது.
இதை பார்த்த தாய் யானை தடுப்பு வேலியின் இரு கம்பிகளுக்கு இடையில் தரையில் படுத்து குட்டி யானை பாதுகாப்பாக வேலியை கடக்க 15 நிமிடங்களுக்கும் மேல் போராடி வழியை ஏற்படுத்தியது.
இதையடுத்து, குட்டி யானை கம்பிகளுக்கு இடையில் புகுந்து மறுபக்கம் சென்றது. அதன் பின்னர் தாய் யானையும் மறுபக்கம் சென்றதோடு, தொடர்ந்து வனப்பகுதிக்குள் இடம் பெயர்ந்தது. குட்டி யானையை பாதுகாப்பாக தாய் யானை அழைத்துச் சென்றது கிராம மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
யானைகளை வனத்துறையினர் விரட்டினாலும். அவை மீண்டும் தமிழக எல்லைப் பகுதியில் சுற்றித் திரிகின்றன. யானைகள் பயிர்களைச் சேதப்படுத்தி வருவதால், வேளாண் பணிகளை நிம்மதியாக செய்ய முடியவில்லை.
வழக்கமாக யானைகள் சமவெளியில் செல்லும். தற்போது 300 அடி உயரத்தில் உள்ள மலைக் குன்றுகள் மீதும் ஏறி கீழே இறங்குகின்றன. மலைக்குன்று மீது தாழ்வாக மின்கம்பிகள் செல்கின்றன.
இதனால் யானைகளுக்கு ஆபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, ஜவளகிரி பகுதியில் சுற்றித்திரியும் யானைகளை அடர்ந்த வனப்பகுதிக்கு விரட்ட வனத்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.


GIPHY App Key not set. Please check settings