in ,

அயோத்தி ராமர் கோயில் காணிக்கை திருட்டு வழக்கில் பல தீவிரமான குறைபாடுகள் ……..

உத்தரப் பிரதேச அரசின் எஸ்ஐடி (சிறப்பு விசாரணைக் குழு) தகவல்…….

அயோத்தி ராமர் கோயில் காணிக்கை பணத்தை எண்ணிய தனியார் ஊழியர்களுக்கு சீருடை இல்லை, சோதனை இல்லை என்ற தகவல் வெளியாகி உள்ளது. எந்த விதிமுறைகளையும் கடைபிடிக்காமல் இவர்கள் பணியாற்றி வந்ததாக உத்தரப் பிரதேச அரசின் எஸ்ஐடி (சிறப்பு விசாரணைக் குழு) தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உத்தரப் பிரதேசம் அயோத்தி ராமர் கோயில் காணிக்கை திருட்டு வழக்கில் பல தீவிரமான குறைபாடுகள் கண்டறியப்பட்டுள்ளன. எஸ்ஐடி விசாரணையின்படி, பல்வேறு தரப்பினரின் பரிந்துரையின் அடிப்படையில் நியமிக்கப்பட்ட தனியார் நிறுவன ஊழியர்களே பணத்தை எண்ணியுள்ளனர்.

ஊழியர்களின் வருகை மற்றும் வெளியேற்றம் முறையாக சோதிக்கப்படவில்லை. சீருடை மற்றும் சிசிடிவி கண்காணிப்பு நடைமுறைகளும் சரியாக பின்பற்றப்படவில்லை. இந்த வகையில், ஒவ்வொரு நிலையிலும் பெரும் அலட்சியம் இருந்ததை எஸ்ஐடி கண்டறிந்துள்ளது.

ஸ்ரீராமஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை நிதிக்கான வங்கிப் பணிகளைக் கையாளும் ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, பணத்தைப் பிரித்தல், அடுக்கி வைத்தல் மற்றும் எண்ணுதல் ஆகியவற்றுக்குப் பொறுப்பாக இருந்தது.

பணத்தை எண்ணுவதற்கு எஸ்பிஐ ஒரு தனியார் பாதுகாப்பு நிறுவனத்தின் ஊழியர்களைப் பணியமர்த்தியது. இதற்காக, வாரணாசியில் உள்ள ஒரு தனியார் பாதுகாப்பு நிறுவனத்துடன் எஸ்பிஐ ஒப்பந்தம் செய்திருந்தது.

அந்த நிறுவனம், பணத்தை எண்ணும் பணிக்கு ராமர் கோயில் அறக்கட்டளையுடன் தொடர்புடைய நபர்களின் பரிந்துரையின் பேரில் அயோத்தியைச் சேர்ந்த இளைஞர்களை அமர்த்தியது.

அறிமுகமானவர்களின் பரிந்துரையின் பேரில் வேலை பெறும் வழக்கத்தைப் பின்பற்றி, அனுகுல் மிஸ்ரா தனது மைத்துனர் லவ்குஷ் மிஸ்ராவை ராமர் கோயில் அறக்கட்டளையில் பணியில் அமர்த்தினார்.

ஊழியர்களின் வருகை மற்றும் வெளியேற்றத்தின் போது மேற்கொள்ளப்பட வேண்டிய சோதனைகளிலும் அலட்சியம் இருந்தது தெரியவந்தது. யார் எதைக் கொண்டு வருகிறார்கள் அல்லது எடுத்துச் செல்கிறார்கள் என்பது குறித்து எந்தச் சோதனையும் இல்லை.

சீருடைகள் இன்றி, ஊழியர்கள் தாங்கள் அன்றாடம் அணிந்த உடைகளை அணிந்துகொண்டு ராமர் கோயில் அறக்கட்டளை அறையில் அமர்ந்து பணத்தை எண்ணினர். அனைவருக்கும் சீருடை விதிமுறைகள் வகுக்கப்பட்டு சீருடைகள் வழங்கப்பட்டிருந்தாலும், யாரும் அவற்றை அணியவில்லை.

கோயில் வளாகத்திலிருந்து அறக்கட்டளை அறைக்குக் காணிக்கைப் பெட்டிகளைக் கொண்டு செல்வது முதல் வங்கியில் பணத்தைச் செலுத்துவது வரை ஒவ்வொரு நிலையிலும் அலட்சியம் இருந்ததை எஸ்ஐடியின் விசாரணை வெளிப்படுத்தியது.

சிசிடிவி காட்சிகளிலும் அலட்சியம் வெளிப்பட்டிருந்தது தெரிந்துள்ளது. ஊழியர்கள் சிசிடிவி கேமராக்களுக்கு முன்னால் நின்றுகொண்டே திருட்டில் ஈடுபட்டதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தற்போது எஸ்ஐடியின் அறிவுறுத்தலின் பேரில் காணிக்கை என்ணும் பணி முழுவதும் சிசிடிவி கேமிராக்களால் பதிவாகி சேமித்து வைக்கப்பட உள்ளது. இதுவரை கிடைத்த ஆதாரங்களின் பேரில் எஸ்ஐடி இன்று கானிக்கை திருட்டு வழக்கில் எப்ஐஆர் பதிவு செய்ய உள்ளது.

இதற்கிடையில், அயோத்தி ஸ்ரீ ராமர் கோயிலில் காணிக்கைகள் மற்றும் நன்கொடைகள் தொடர்பான முறைகேடுகள் மற்றும் நிதி முறைகேடுகள் குறித்து சிபிஐ விசாரணை மற்றும் தலைமைத் தணிக்கையாளர் மூலம் தணிக்கை கோரி பொதுநல வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இவ்வழக்கை அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் லக்னோ அமர்வு இன்று (திங்கள்கிழமை) விசாரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த வழக்கின் மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் மோஹித் அசோக் சர்மா கூறுகையில், “இவ்விவகாரம் லட்சக்கணக்கான பக்தர்களின் நம்பிக்கை மற்றும் பரந்த பொது நலன் சார்ந்தது என்பதால், இதற்கு முன்னுரிமை அடிப்படையில் விசாரணை தேவை. தேவைப்பட்டால், இவ்வழக்கை கூடுதல் வழக்குப்பட்டியலில் சேர்ப்பதற்கான கோரிக்கையும் முன்வைக்கப்படும். இவ்வழக்கு நீதிமன்ற எண் 2 இல் இன்றைய விசாரணைக்காகப் பட்டியலிடப்பட்டுள்ளது.” எனத் தெரிவித்தார்.

இதனிடையே, அயோத்தியில் முதல்வர் யோகி ஆதித்யநாத்தை இன்று எஸ்ஐடி உறுப்பினர்கள் சந்தித்தனர். அப்போது முதல்வரிடம், ஒரு முதற்கட்ட அறிக்கையை சமர்ப்பித்தனர். இந்த முதற்கட்ட அறிக்கையைத் தொடர்ந்து, எஸ்ஐடி ஒரு விரிவான அறிக்கையை தயாரித்து சமர்ப்பிக்கவுள்ளது.

எஸ்ஐடியின் விசாரணை வரம்பிற்குள் வரும் நபர்கள் எவரும் முன்அறிவிப்பின்றி அயோத்தியை விட்டு வெளியேறக் கூடாது என்று தடை விதிக்கப்பட்டுள்ளது. விசாரணையுடன் தொடர்புடைய அதிகாரிகள், ஊழியர்கள் மற்றும் பிற நபர்கள் நகரத்தை விட்டு வெளியேறும் முன் சிறப்புப் புலனாய்வுக் குழுவுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

விசாரணையில் எந்தவித இடையூறும் ஏற்படாமல் தடுப்பதற்கும், தேவைப்படும்போது தொடர்புடைய நபர்களிடம் உடனடியாக விசாரணை நடத்துவதை உறுதி செய்வதற்கும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. தற்போது இக்குழு இவ்வழக்கின் ஒவ்வொரு அம்சம் குறித்தும் தீவிர விசாரணை நடத்தி வருகிறது.

What do you think?

Written by Thirukumaran

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

தலைசிறந்த அணுகுமுறையாக புதிய நடுவர் மன்ற கோரிக்கையை முன்வைத்துள்ளோம்…….

தமிழகத்தில் கூட்டுறவு கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும்……