in ,

மும்பை நகரம் இப்போது தண்ணீர் பற்றாக்குறை பிரச்சினையில் தவிக்கக் கூடிய சூழல்…..

4-வது மெட்ரோபாலிட்டன் நகரம் எனப் பெயரெடுத்த மகாராஷ்டிரா மாநிலத்தின் மும்பை……

இந்தியாவின் அதிக மக்கள் நெருக்கம் உள்ள நகரம், உலகில் மக்கள் நெருக்கம் உள்ள 4-வது மெட்ரோபாலிட்டன் நகரம் எனப் பெயரெடுத்த மகாராஷ்டிரா மாநிலத்தின் மும்பை நகரம் இப்போது தண்ணீர் பற்றாக்குறை பிரச்சினையில் தவிக்கக் கூடிய சூழலை எதிர்கொண்டுள்ளது.

மும்பை நகரம் (கிரேட்டர் மும்பை), புறநகர் பகுதிகளுக்கு குடிநீர் வழங்களுக்கு ஆதாரமாக இருக்கும் நீர்நிலைகளில் நீர் இருப்பு மிக ஆபத்தான நிலையை எட்டி, 10% மட்டுமே கையிருப்பு இருக்கிறது. அதாவது அடுத்த 40 நாட்களுக்கு மட்டுமே மும்பை மக்களுக்கு குடிநீர் வழங்கத் தேவையான நீர் மட்டுமே ஆதாரமாக இருக்கிறது.

ஏற்கெனவே பருவமழை தாமதமாகிய நிலையில், இது மேலும் தொடர்ந்து, வெயிலின் தாக்கமும் அதிகரித்தால், நீர் இருப்பு மேலும் குறையலாம், குடிநீர் ஆதாரத்துக்கு பெரும் பாதிப்பு வரலாம் என்று மாநகராட்சி நிர்வாகம் அச்சம் தெரிவித்துள்ளது.

நீர் நிலைகளில் இருப்பு எவ்வளவு?

மும்பை நகருக்கு குடிநீர் ஆதாரமாக இருப்பது 7 ஏரிகள். தான்சா, விஹார், துளசி, பட்சா, அப்பர் வைத்ராணா, மோடக் சாஹர், மிடில் வைத்ராணா ஆகிய ஏரிகளில் இருந்துதான் தண்ணீர் வழங்கப்படுகிறது. இதில் 4 ஏரிகள் பிரிஹான்மும்பை மாநகராட்சிக்கு (பிஎம்சி) சொந்தமானது, 3 ஏரிகள் மகாராஷ்டிர அரசுக்கு சொந்தமானது.

மும்பை, புறநகர் பகுதிகளில் மட்டும் ஏறக்குறைய 2.18 கோடி மக்கள் வாழ்கிறார்கள். இவர்களுக்கு நாள்தோறும் 3,950 மில்லியன் லிட்டர் தண்ணீரை பிஎம்சி நிர்வாகம் வழங்கி வருகிறது. ஆனால், குடிநீர் ஆதாரமாக விளங்கும் 7 ஏரிகளில் தற்போது 1,44,918 மில்லியன் லிட்டர் நீர் மட்டுமே இருப்பு இருக்கிறது. இது தோரயமாக 40 நாட்களுக்கானதுதான்.

பருவமழை தாமதமாகி வருவதால், நிலைமை மோசமாவதை அறிந்த பிஎம்சி, கடந்த 15-ம் தேதி முதல் குடிநீர் வழங்களை 10 சதவீதம் குறைத்துவிட்டது. அதாவது 4,100 மில்லியன் லிட்டர் அளவு வரை குறைத்துவிட்டது.

முக்கிய ஏரியான அப்பர் வைத்தராணா ஏரி வறட்சியை நோக்கி நகர்ந்துள்ளது. மோடக் சாஹர் ஏரியில் நீர் இருப்பு 29%, தான்சா ஏரியில் 4.71%. மிடில் வைத்ராணாவில் 10.34%, பட்ஸாவில் 9.24%, விஹார் ஏரியில் 42.11%. துளசி ஏரியில் 23% நீர் இருப்பு மட்டுமே இருக்கிறது.

நடவடிக்கை என்ன?

மும்பை மக்களுக்கு அடுத்த 40 நாட்களுக்கு மட்டுமே குடிநீர் வழங்க நீர் இருப்பு இருப்பதை அறிந்த பிஎம்சி நிர்வாகம், அதிரடியாக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. அதில் குறிப்பாக தினசரி குடிநீர் வழங்கும் அளவை 10 சதவீதம் முதல் 20 சதவீதம் குறைத்துவிட்டது.

வர்த்தகம் மற்றும் தொழில் துறை, விளையாட்டு மைதானம் பகுதிகளுக்கான குடிநீர் வழங்களை 20% வரை குறைத்துவிட்டது. கட்டிடங்களுக்கான நீர் வழங்களை முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ளது. புதிய கட்டிடங்களுக்கான அனுமதி தற்காலிகமாக நிறுத்தப்பட்டு, நீச்சல் குளம் கட்டுவது, நீச்சல் குளம் செயல்பாட்டையும் மாநகராட்சி நிர்வாகம் தற்காலிகமாக தடை செய்துள்ளது.

பொதுக் கழிப்பறை, வர்த்தக மையங்களிலும், பன்முக தேசிய நிறுவனங்களிலும், மருத்துவமனைகளிலும், கழிப்பறை பயன்பாட்டுக்கு நிலத்தடி நீரையே பயன்படுத்த வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. இதுதவிர குடிநீரை தவறாகப் பயன்படுத்தினாலும், அதை வீணாக்கினாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

குடிநீர் தட்டுப்பாடுக்கு என்ன காரணம்?

மும்பையில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படுவதற்கும், பெரிய அளவிலான தண்ணீர் பஞ்சத்தை அந்த மக்கள் எதிர்கொள்ள பருவமழை தாமதமாகி வருவதுதான் முக்கியக் காரணமாகும். குறிப்பாக தென் மேற்கு பருவமழை மும்பை பகுதில் ஜூன் 11 முதல் 25-ம் தேதிக்குள் நல்ல மழையை கொடுத்திருக்க வேண்டும்.

கடந்த காலங்களில் இதே காலகட்டத்தில் தேவைக்கும் அதிகமாகவே நீர் இருப்பு இருக்க பருவமழை சரியான நேரத்தில் பெய்ததுதான் காரணம். ஆனால், பருவமழை தொடர்ந்து தாமதமாகி வருவது கவலைக்குரியதாக மாறியுள்ளது.

இந்த நிலைமை மாறுமா?

இந்திய வானிலை மைய அதிகாரிகள் தரப்பில் கூறுகையில் “தென் மேற்கு பருவமழை தாமதமாவதால், இந்த ஆண்டு பருவமழை குறையலாம் என்று சொல்வதற்கில்லை. இதற்கு முந்தைய ஆண்டுகளில் பருவமழை ஒரு வாரம், 2 வாரங்கள் தாமதமாகத் தொடங்கினாலும், பிற்பகுதியில் நல்ல மழையைக் கொடுத்து, இயல்புக்கு அதிகமான மழை எனப் பதிவாகியுள்ளது.

ஆனால், இந்த ஆண்டில் எல்நினோ காரணியால் மழை அளவு பாதிக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. இதுவரை ஜூன் மாதத்தில் மும்பை நகரம் தனது வழக்கமான மழை அளவில் 2.5% மட்டுமே பெற்றுள்ளது. வழக்கமாக ஜூன் மாதத்தில் இந்தியாவில் 53.7 மில்லிமீட்டர் மழை கிடைத்திருக்க வேண்டும். ஆனால், ஜூன் 15-ம் தேதி வரை 19.2 மி.மீ மழைதான் கிடைத்துள்ளது, 64 சதவீதம் மழை பற்றாக்குறையாக இருக்கிறது.

நாட்டில் 100-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் இயல்பான மழையும், 236 மாவட்டங்களில் மழையளவு மோசமாகவும், 200 மாவட்டங்களில் மழை மிகவும் மோசமான நிலையையும் எட்டியுள்ளது.

பருவமழை காலங்களில் மும்பைக்கு 2,200 மி.மீ முதல் 2500 மிமீ அளவு வரை மழை கிடைக்கும். ஆனால், கொலாபாவில் இதுவரை 2 இலக்கத்தில் மழையை பார்க்க முடியவில்லை, சான்டாகுரூஸில் மட்டுமே 15 மி.மீ மழை பெய்துள்ளது. ஜூன் மாதத்தில் மும்பையில் 525 மிமீ மழை பெய்ய வேண்டும், அது எட்டப்படுமா என்பது தெரியவில்லை” எனத் தெரிவித்தனர்.

ஐஎம்டி என்ன சொல்கிறது?

மும்பையில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட காரணம் குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில் “கடந்த 4-ம் தேதி கேரளாவில் தென் மேற்கு பருவமழை தொடங்கும் என கணிக்கப்பட்டது. அந்தமானில் நிலவிய வானிலையைப் பார்த்தபோது, பருவமழை முன்கூட்டியே தொடங்கிவிடும் என கணக்கிட்டோம்.

குறிப்பாக கேரளா, தமிழகம், தென்கிழக்கு அரபிக்கடல், லட்சத்தீவுகள், தென்மேற்கு, மேற்குமத்திய வங்கக்கடலில் பருவமழை முன்கூட்டியே தொடங்கும் என்று கணித்தோம். ஆனால், எதிர்பார்த்த அளவு கேரளாவிலும், தமிழகத்திலும் பருவமழை இல்லை, மும்பையிலும் பருவமழை தொடங்குவது தாமதமாகி வருகிறது” எனத் தெரிவித்துள்ளது.

இது தவிர அமெரிக்காவின் காலநிலை ஆய்வு அமைப்பான என்ஓஏஏ, ஐரோப்பிய காலநிலை செயற்கைக்கோளான மெட்டோசாட், இஸ்ரோவின் இன்சாட் 3டிஎஸ் செயற்கைக்கோள் வெளியிட்ட தகவலின்படி, இந்தியாவின் மத்திய, மேற்கு மாநிலங்களில் ஜூன் மாதத்தில் மேகக்கூட்டங்களின் அடர்த்தி குறைவாக காணப்படுறது எனத் தெரிவித்துள்ளது. மேகக் கூட்டங்கள் திரட்சியாக, கூட்டமாக இருந்தால்தான் பருவமழை பெய்வதற்கு ஏதுவான சூழலாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்ககது.

மழை தாமதமாக காரணம் என்ன?

ஜூன் மாதத்தில் பருவமழை கேரளா, தமிழகம், கர்நாடகத்தில் இயல்பான மழையை் கொடுப்பதற்கு ‘சோமாலி ஜெட்’ எனப்படும் ஈரப்பதமான காற்று அவசியம். வலிமையான தரைக்காற்று ஈரப்பதத்தோடு இந்தியப் பெருங்கடல் பகுதியில் வீசும் போது, காற்றால் மேகங்கள் இந்தியாவின் பக்கம் உந்தித்தள்ளப்படும்.

ஆனால், ஜூன் மாதத்தில் இருந்து நாட்டின் மத்திய மற்றும் மேற்கு மாநிலங்களை நோக்கி வறண்ட காற்று தொடர்ந்து உந்தி தள்ளப்பட்டு வருகிறது. இதனால் மேகக்கூட்டங்கள் அடர்த்தியாக உருவாவது தடுக்கப்பட்டு பிரிக்கப்படுகிறது, பரவலாக மழை பெய்வதிலும் சிக்கலையும், தடையையும் ஏற்படுத்துகிறது. இதன் காரணமாக, மழைப் பொழிவு குறைந்து வருகிறது, வெயிலின் தாக்கமும் அதிகரித்து வருகிறது.

மிரட்டும் எல்-நினோ

மும்பை மட்டுமல்லாது, தென் மேற்கு பருவமழை தாமதமாகவும், குறைவாகப் பெய்யவும் எல்-நினோ காரணி முக்கியமானது. இந்த ஆண்டு ஜூன் முதல் செப்டம்பர் வரை வலிமையான எல்-நினோ காரணி, பருவமழை காலத்தில் எதிர்பார்க்கலாம் என்று இந்திய வானிலை மையம் ஏற்கெனவே எச்சரித்துள்ளது.

கடந்த காலங்களில் எல்-நினோ இந்தியப் பகுதிகளில் வந்தபோது, ஈரப்பதமான காற்று வருவதில் தடையை ஏற்படுத்தியது, அதேபோன்ற சூழல் இப்போதும் நிலவுகிறது.

இந்தக் காரணிகளால் பருவமழை இன்னும் முழுமையாகத இயல்புக்கு வராமல் போக்குக் காட்டி வருகிறது. இப்போதுள்ள நிலவரப்படி நாடு முழுவதும் பெய்த மழை என்பது இயல்பைவிட 40 சதவீதம் குறைவாகும் என்று இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

பல்வேறு மாநிலங்களில் மழை பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. அதிலும் மகாராஷ்டிராவில் 79 சதவீதம் மழைப் பொழிவு பற்றாக்குறையாக இருப்பதுதான் மும்பையின் அவலத்துக்கு காரணம். அடுத்ததாக குஜராத்தில் 98%, ஜார்க்கண்டில் 66%, சத்தீஸ்கரில் 65% மழை பற்றாக்குறையாக இருக்கிறது என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

அடுத்த சிக்கலில் புனே…

பருவமழை இன்னும் தாமதமானால், மும்பை சந்தித்துவரும் அதேபிரச்சினையை விரைவில் புனே நகரமும் சந்திக்கும் என்று ஆய்வாளர்கள் எச்சரிக்கிறார்கள். மகாராஷ்டிராவில் மும்பைக்கு அடுத்து பெரிய நகராக புனே இருந்து வருகிறது.

புனே நகர மேயர் மஞ்சுஷா நாக்பியூர் கூறுகையில் “பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள், அதிகாரிகள் உள்ளிட்டோருடன் இணைந்து குடிநீர் பற்றாக்குறை குறித்து ஆலோசித்துள்ளோம். மக்களுக்கு குடிநீர் வழங்கும் அளவை 15 சதவீதம் வரை குறைக்கவும் திட்டமிட்டுள்ளோம்.

மத்திய ரயில்வே, மேற்கு ரயில்வே, ஆர்சிஎப், எச்பிசிஎல், பிபிசிஎல், கப்பற்படை, எம்ஐடிசி, மும்பை துறைமுக முனையம் ஆகியவை கழிவு நீரில் இருந்து மறுசுழற்சி செய்யப்பட்ட நீரை குடிநீர் தவிர வேறு பயன்பாட்டுக்கு பயன்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்” எனத் தெரிவித்தார்.

What do you think?

Written by Thirukumaran

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

நேரலை பாதியிலேயே துண்டிப்பு அதிருப்தி…..

மணல் குவாரி வழக்கு: `தவறு செய்த அதிகாரிகளை பணிநீக்கம் செய்க’- உயர் நீதிமன்றக் கிளை அதிரடி