in , , , ,

அறிவியல் – தொழில்நுட்பம் ஏன் நாட்டின் முதுகெலும்பு ?

நாட்டின் உயிர்நாடியாக கருதப்படுவது அந்தந்த நாட்டின் தொழில்நுட்ப பலம்தான்……

ஈரானுக்கு எதிரான அமெரிக்க – இஸ்ரேல் போரில், ஒரு முக்கியமான விஷயத்தைக் கவனித்திருப்போம். அரசர்கள் காலத்தில் போர் நடந்தபோது, ஒரு நாட்டைச் சிதைக்க வேண்டும் என்றால், அங்கிருந்த பிரம்மாண்டக் கோயில்கள், அரண்மனைகள் இடிக்கப்பட்டன. இந்தப் போரில், கடல்நீரைக் குடிநீராக்கும் சுத்திகரிப்பு மையங்கள், ஆற்றல் நிலையங்கள், ஐடி நிறுவனங்களின் தகவல் நிலையங்கள் எல்லாம் குறிவைக்கப்படுகின்றன.

அட, அதையும் மீறி இந்தப் போருக்கான காரணமாக முன்னிறுத்தப்படுவதே தொழில்நுட்பக் காரணம்தானே? ஈரானிடம் இருப்பதாகக் கூறப்படும் செறிவூட்டப்பட்ட யுரேனியம்தானே மற்றவர்களுக்குப் பிரச்சினை? ஆக, இன்றைய காலத்தில் ஒரு நாட்டின் உயிர்நாடியாக கருதப்படுவது அந்தந்த நாட்டின் தொழில்நுட்ப பலம்தான்.

இந்தப் பின்புலத்தில் நம் நாட்டின் தொழில்நுட்ப பலம் என்னவென்று யோசிக்க வேண்டியிருக்கிறது. நிறைய இடங்களுக்குச் சென்று அறிவியல் சார்ந்த உரையாடல்களை மேற்கொள்ளும்போது, இந்திய அறிவியலில் ஒன்றுமேயில்லை என்று ஒரு சாராரும், இன்னொரு பக்கம் இஸ்ரோவின் சாதனைகளை மட்டும் முன்னிறுத்தி இந்தியத் தொழில்நுட்பப் பெருமையை இன்னொரு சாராரும் பேசுகிறார்கள். இந்திய அறிவியலைப் பொறுத்தவரை இவ்விரண்டுமே தட்டையான பார்வைதான்.

அடிப்படைத் தேவைகளும் தொழில்நுட்பங்களும் இந்தியா சுதந்திரம் அடைந்த தருணத்தில், நாட்டின் முதுகெலும்பாகக் கருதப்பட்ட ‘விவசாய’த்தால், தன் சொந்த நாட்டு மக்களின் பசியைக்கூடப் போக்க முடியவில்லை. ஆனால், இன்று அரிசி ஏற்றுமதியில் உலக அளவில் முன்னணியில் இருக்கிறோம். ‘உலகின் மருந்தக’மாக இந்தியா கருதப்படுகிறது.

190-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு மருந்துகளை ஏற்றுமதி செய்கிறது. அப்படியென்றால், உலக அளவில் அங்கீகாரம் பெற்ற மருந்து தயாரிப்புத் தொழிற்சாலைகள் நம் நாட்டில் நிறுவப்பட்டுள்ளன என்று அர்த்தம்.

இந்திய ரயில்வே துறையின் செயல்பாடுகளையும் சொல்லியே ஆக வேண்டும். தங்களின் தேவைகளுக்காக ஆங்கிலேயர்கள் நீராவி இன்ஜின்களைக் கொண்டு வந்தார்கள். அதன் வேகம் மணிக்கு 30 முதல் 50 கிலோமீட்டர். அதோடு நின்றுவிட முடியாதுதானே? 20ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில், உலகம் வேகமான, தூய்மையான தொடர்வண்டி இயந்திரங்களை நோக்கி நகர்ந்து கொண்டிருந்தது.

இந்தியாவும் 1950களில் டீசல் இயந்திரங்களை அறிமுகப்படுத்தியது. அதனால், மணிக்கு 60–90 கிலோமீட்டர் வேகத்தை அடைய முடிந்தது. மின்மயமாக்கல் காரணமாக 1980களுக்குப் பிறகு, இந்தியாவில் மின்சார ரயில்கள் பெரிய அளவில் நடைமுறைக்கு வந்தன. தற்போது ‘வந்தே பாரத்’ ரயில்கள் மணிக்கு 160 கிலோமீட்டர் வேகத்துக்கு மேல் பயணிக்கின்றன. ஆனால், இத்தோடு நின்றுவிடாமல், பிற நாடுகளின் தொழில்நுட்பங்களைத் தழுவி, புல்லட் ரயில்களையும் கொண்டுவர உள்ளோம்.

விறகையும் நிலக்கரியையும் நம்பியிருந்த நாட்டில், தற்போது, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி (non-fossile fuel) அடிப்படையிலான மொத்த மின் உற்பத்தித் திறன், 200 ஜிகாவாட் அளவைத் தாண்டியிருக்கிறது. தகவல் தொழில்நுட்பத்திலும், பணப் பரிவர்த்தனையிலும் இந்தியா பெரும்பங்கு வகிக்கிறது.

What do you think?

Written by Thirukumaran

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

வெங்காய விதை உற்பத்தி: இரட்டிப்பு லாபம் தரும் நுட்பமான சாகுபடி

தமிழகத்தில் ஏப்.14 வரை வெப்பநிலை 5 டிகிரி உயர வாய்ப்பு……