in , ,

ஈரானியர்கள் அடுத்த 12 மணி நேரத்துக்கு ரயில்களை பயன்படுத்த வேண்டாம்: இஸ்ரேல் எச்சரிக்கை……

ரயில்களையும், ரயில் பாதைகளையும் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்….

“ஈரான் மக்கள் ரயில்களையும், ரயில் பாதைகளையும் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். அவ்வாறு செய்தால் அவர்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படக்கூடும்” என்று இஸ்ரேல் ராணுவம் எச்சரித்துள்ளது.

இஸ்ரேல் ராணுவம் இன்று தனது எக்ஸ் தளத்தில் பாரசீக மொழியில் வெளியிட்ட அறிவிப்பில், “உங்கள் பாதுகாப்பிற்காக, இப்போதிலிருந்து ஈரான் நேரப்படி இரவு 9 மணி (இந்திய நேரப்படி இரவு 11 மணி) வரை, ஈரான் முழுவதும் ரயில்களைப் பயன்படுத்துவதையும் பயணம் செய்வதையும் தவிர்க்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம். ரயில்களிலும், ரயில் பாதைகளுக்கு அருகிலும் நீங்கள் இருப்பது உங்கள் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பில் குறிப்பிட்ட பிராந்தியங்களோ அல்லது ரயில் பாதைகளோ குறிப்பிடப்படவில்லை. எனவே, ஈரான் முழுவதும் மக்களிடம் அச்சம் எழுந்துள்ளது. இருப்பினும், இந்த எச்சரிக்கை குறித்து ஈரான் அதிகாரிகளிடமிருந்து உடனடியாக எந்த பதிலும் வரவில்லை.

பிப்ரவரி 28 அன்று முதல் இஸ்ரேல் அமெரிக்காவுடன் இணைந்து ஈரானை தாக்கி போரில் ஈடுபட்டு வருகிறது. ஈரானும் பதிலுக்கு, இஸ்ரேல் மற்றும் வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க இலக்குகள் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. மேலும், உலகின் கச்சா எண்ணெய் போக்குவரத்தில் முக்கிய இடம் வகிக்கும் ஹார்முஸ் ஜலசந்தியையும் ஈரான் மூடியுள்ளதால், நிலைமை தொடர்ந்து மோசமடைந்து வருகிறது.

முன்னதாக, செவ்வாய்க்கிழமை இரவு 8:00 மணிக்குள் தற்காலிக போர் நிறுத்த ஒப்பந்தத்தை எட்டுமாறு ஈரானுக்கு அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் இறுதி எச்சரிக்கை விடுத்துள்ளார். வெள்ளை மாளிகையில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய ட்ரம்ப், “அவர்களுக்கு நாளை வரை அவகாசம் உள்ளது. இப்போது என்ன நடக்கிறது என்று பார்ப்போம். அதற்குப் பிறகு, அவர்களுக்குப் பாலங்கள் ஏதும் இருக்காது. மின் நிலையங்கள் ஏதும் இருக்காது. கற்காலம் போன்ற நிலைதான் இருக்கும்,” என்று எச்சரித்தார். இந்தச் சூழலில், இஸ்ரேல் இதுபோன்ற எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது பதற்றத்தை அதிகமாக்கியுள்ளது.

What do you think?

Written by Thirukumaran

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

MAKKAL UPDATE

Kanniyakumari மக்கள் யார் பக்கம்? | Ground Report | DMK, ADMK, TVK, NTK | #50