கடலும் கடல் சார்ந்த பகுதியும் நெய்தல் திணை எனப்படுவது நாமறிந்ததே. அங்கிருக்கும் மக்களின் வாழ்வும் பண்பாடும் எப்படிப்பட்டது என்பதையறிய, அந்நிலப்பகுதியின் ஒவ்வொரு கூறையும் அங்குலம் அங்குலமாக ஆராய வேண்டும். அதற்கான தொடக்கத்தை நோக்கி நம்மை உந்துகிற வகையில் அமைந்துள்ளது, சென்னை நுங்கம்பாக்கம் லலித்கலா அகாடமியில் நடைபெற்றுவரும் ‘கொண்டல்’ ஓவியம் மற்றும் ஒளிப்படக் காட்சி.
நெய்தல் திணைக் கலைகளைச் சிறப்பிக்கும் விதமாக, இந்தக் கண்காட்சியில் ஒளிப்படங்கள், ஓவியங்கள் உடன் கடலோர மக்களின் வாழ்வைச் சொல்கிற முப்பரிமாணக் கலைப்படைப்புகளும் இடம்பெற்றிருக்கின்றன. அந்தோணி குரூஸ், பழனிக்குமார், நிரஞ்சனா.ர, அ.பகத்சிங் ஆகியோர் இதனை ஒருங்கிணைக்கின்றனர்.
கடலோர வாழ்வு என்றாலே படகுத்துடுப்பை வலிக்கும் மீனவர்கள் மட்டுமே பெரும்பாலும் நினைவில் மிதக்கும் நிலையில், அங்குள்ள பெண்களின் தினசரிச் செயல்பாடுகளை, எண்ணவோட்டங்களை, கனவுகளை, லட்சியங்களைப் பற்றி நம்முடன் உரையாடுவது போன்றிருக்கின்றன இக்கண்காட்சியிலுள்ள பல படைப்புகள். அது மட்டுமல்லாமல் இன்றைய கடற்புற வாழ்வைச் சொல்வதாக இருக்கின்றன.
பழவேற்காடு தொடங்கி புதுச்சேரி வரையிலான கடலோர மக்களின் உணவுப்பழக்கத்திலுள்ள சிறப்புகளை, வேறுபாடுகளை, எளிமையின் வீச்சினை உணர்த்துகின்றன ஒளிப்படங்கள். அதிலிருந்து பெருமளவு வேறுபட்டு நெய்தல் நில மக்களின் கற்பனைகளுக்கும் அவர்களது வாழ்வு குறித்த பொதுப்பார்வைக்கும் உருக்கொடுத்திருக்கின்றன ஓவியம் உள்ளிட்ட இதர படைப்புகள்.
லலித்கலா அகாடமியில் ஜுன் 9 அன்று தொடங்கிய ‘கொண்டல்’ கண்காட்சி வரும் 16ஆம் தேதி வரை நடைபெறுகிறது.



GIPHY App Key not set. Please check settings