in ,

கொசஸ்தலை ஆற்றில் மீன்கள் இறந்தது தொடர்பாக விசாரணை……

கொசஸ்தலை ஆற்றில் மீன்கள் இறந்தது தொடர்பாக விசாரணை நடத்த குழு அமைக்கப்பட்டு, அக்குழு 10 நாட்களில் விரிவான அறிக்கை அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது என்று சட்டப்பேரவையில் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் ராஜீவ் விளக்கம் அளித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவையில் நேரமில்லா நேரத்தில் இன்று (ஆக.21) முன்னாள் முதல்வர் பழனிசாமி உள்ளிட்டோர், கொசஸ்தலை ஆற்றில் மீன் இறந்து மிதந்தது தொடர்பாக சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவந்தனர்.

தீர்மானம் தொடர்பாக பேசிய அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, “கொசஸ்தலையாறு – பக்கிங்ஹாம் கால்வாய் ஆகியவை கடலில் கலக்கும் முகத்துவாரப் பகுதியில் கொத்து கொத்தாக மீன்கள் செத்து மிதந்தன. இப்பகுதியில் உள்ள நெட்டுக்குப்பம், தாழங்குப்பம், எண்ணூர் குப்பம், காட்டுக்குப்பம் உள்ளிட்ட கிராமத்தை சேர்ந்த மீனவர்கள் கட்டுமரங்கள் மற்றும் பைபர் படகுகளில் மீன் பிடி தொழில் செய்து வருகின்றனர்.

லட்சக்கணக்கான மீன்கள் இப்பகுதியில் செத்து மிதப்பதால் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், அப்பகுதியில் உள்ள தொழிற்சாலை கழிவுகள் அடிக்கடி கொசஸ்தலையாற்றில் கலப்பதால், ஆறு மஞ்சள் நிறமாக மாறுவதாக மீனவர்கள் கூறுகின்றனர்.

இது குறித்து மாசு கட்டுப்பாடு வாரிய அதிகாரிகள் முறையாக ஆய்வு மேற்கொள்ளவில்லை. எனவே, இந்த விவகாரத்தில் அரசு உடனடியாக தலையிட்டு மீனவர்களின் வாழ்வதாரத்தை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கூறினார்.

திமுக எம்எல்ஏ தங்கம் தென்னரசு பேசுகையில், “கொசஸ்தலையாறு மீனவர்களின் ஜீவாதாரமாக உள்ளது. தொடர்ந்து இந்த ஆறு, எண்ணூர், மணலில் உள்ள தொழிற்சாலைகளால் மாசடைந்து வருகிறது. அங்கு சூழலியல் பாதிக்கப்பட்டதால் மீன்கள் செத்து மிதக்கின்றன. அதனால் அரசு அப்பகுதியை சூழலியல் பாதுகாப்பு மண்டலமாக உருவாக்க வேண்டும்” என்று கூறினார்.

பாமக எம்எல்ஏ கணேஷ்குமார் கூறும்போது, “வடசென்னை பகுதியில் அதிகமாக இருக்கும் அனல் மின் நிலையங்களும், ரசாயன தொழிற்சாலைகளும் வெளியேற்றும் கழிவுகள் தொடர்ச்சியாக கொசஸ்தலையாற்றில் விடப்படுவதால் மீன்கள் செத்து மிதக்கின்றன. சுற்றுச்சூழலை பாதிக்கும் வகையில் செயல்படும் அனைத்து நிறுவனங்கள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்கென்று தனியாக விசாரணை ஆணையம் அமைக்க வேண்டும்” என்று வலியுறுத்தினார்.

காங்கிரஸ் எம்எல்ஏ தாரகை கத்பர்ட், “மீனவர் நலனை கருத்தில் கொண்டு தொழிற்சாலை கழிவுகளை ஆற்றில் கொட்டும் நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மாசு கட்டுப்பாடு வாரியம் மற்றும் மீன்வளத் துறை இணைந்து ஆற்றின் அருகே உள்ள தொழிற்சாலையில் கழிவுகளை கண்காணிக்க கண்காணிப்பு குழுவை ஏற்படுத்த வேண்டும்” என்றார்.

இதற்கு பதிலளித்து பேசிய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் ராஜீவ் கூறுகையில், “கொசஸ்தலை ஆற்றில் மீன்கள் இறந்ததாக தகவல் கிடைத்ததும் மாசுக் கட்டுப்பாடு வாரியம் சார்பில் பக்கிங்ஹாம் கால்வாய், ரயில்வே மேம்பால கால்வாய், பக்கிங்ஹாம் கால்வாய் – கொசதஸ்தலையாறு சேருமிடமான எண்ணூர் முகத்துவாரம், காட்டுப்பாக்கம் அனல் மின் நிலையம் அருகில் ஆகிய இடங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

அப்பகுதியில் உள்ள நீரில் ஆக்சிஜன் செறிவு குறைவாக இருந்துள்ளது. இந்த ஆய்வில் தொழிற்சாலை கழிவு கலப்போ, எண்ணெய் படலமோ கண்டறியப்படவில்லை. நீரின் வெப்ப நிலையும் இயல்பாகவே இருந்துள்ளது. இறந்த மீன்களின் மாதிரிகள் ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளன. மொத்தம் 2,150 கிலோ மீன்கள் இறந்தன. அவை மாநகராட்சி உதவியுடன் அகற்றப்பட்டன. நீர், இறந்த மீன் மாதிரிகள் ஆய்வுக்காக அனுப்பப்பட்டுள்ளன. ஆய்வு முடிவுக்காக காத்திருக்கிறோம்.

இது தொடர்பாக முழுமையாக விசாரிக்க மீன்வளத் துறை இணை இயக்குநர், மீன்வளக் கல்லூரி பேராசிரியர், மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரி, மீன்வளத்துறை ஆய்வாளர் ஆகியோர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. 10 நாட்களுக்குள் விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. இனிமேல் இதுபோன்ற மீன்கள் இறப்பை தடுக்க எல்லா நடவடிக்கையும் எடுக்கப்படும்.

எண்ணூர், மணலி பகுதியில் பாதாள சாக்கடை திட்டம் சரியாக செயல்படுத்தவில்லை. அதனால் ஆற்றில் மனிதக் கழிவுகள் கலந்திருக்கலாம். சாக்கடை நீர், ஆற்று நீரில் கலந்தால் தான் ஆக்ஸிஜன் செறிவு குறையும். அதனால் பாதாளா சாக்கடை திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறோம். தொழிற்சாலை கழிவுகள் எதுவும் அங்கு கலக்கவில்லை” என்று அமைச்சர் ராஜீவ் பதில் அளித்தார்.

What do you think?

Written by Thirukumaran

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

மக்களின் வாழ்க்கைத் தரமும் பொருளாதாரமும் உயர்வதற்கான வாய்ப்புகள் எத்தனை?

அறநிலையத் துறையில் செய்தவற்றை ஆதாரத்துடன் வெளியிடுவோம்……….