சத்தீஸ்கர் மாநிலம் கான்கேர் மாவட்டத்தில் இன்று (சனிக்கிழமை) நடைபெற்ற கண்ணிவெடி அகற்றும் பணியின்போது, ஐஇடி வெடிபொருள் வெடித்ததில், டிஆர்ஜி மாவட்டக் காவல் படையை சேர்ந்த மூன்று வீரர்கள் உயிரிழந்தனர், ஒருவர் படுகாயமடைந்தார்.
கான்கேர் – நாராயண்பூர் எல்லைக்கு அருகே உள்ள பகுதியில் கண்ணிவெடிகளை அகற்றுவதற்காக சோட்டேபேத்தியா காவல் நிலையத்திலிருந்து ஒரு குழு அங்கு அனுப்பப்பட்டது. அங்கே மாவோயிஸ்டுகளால் முன்னரே புதைக்கப்பட்ட ஒரு ஐஇடி வெடிபொருளை செயலிழக்கச் செய்யும் முயற்சியின்போது அது தற்செயலாக வெடித்து சிதறியது. இந்தத் தீவிர வெடிப்பில் 4 டிஆர்ஜி வீரர்கள் படுகாயமடைந்தனர்.

படுகாயமடைந்தவர்களில், ஆய்வாளர் சுக்ராம் வட்டி, காவலர்கள் கிருஷ்ணா கோம்ரா மற்றும் சஞ்சய் கத்வாலே ஆகிய மூவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். படுகாயமடைந்த மற்றொரு காவலரான பரமானந்த் கோம்ராவுக்கு தற்போது மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இது குறித்து பேசிய பாஸ்டர் சரகக் காவல் துறைத் தலைவர் பி.சுந்தர்ராஜ் கூறும்போது, “கடந்த சில மாதங்களாக, உளவுத் துறை தகவல்கள் மற்றும் சரணடைந்த மாவோயிஸ்ட் தொண்டர்கள் அளித்த தகவல்களின் அடிப்படையில், பாதுகாப்புப் படையினர் இப்பகுதியில் நூற்றுக்கணக்கான ஐஇடி-களை வெற்றிகரமாகக் கண்டெடுத்துச் செயலிழக்கச் செய்தனர். இருப்பினும், இப்பகுதியை மேலும் பாதுகாப்பானதாக மாற்றும் தொடர் முயற்சியின்போது இந்த துயரமான விபத்து நடந்தது” என்று தெரிவித்தார்.



GIPHY App Key not set. Please check settings