in ,

‘‘கேரள மக்கள் பாஜகவை உற்சாகமாக ஆதரிக்கின்றனர்’’ – பிரதமர் மோடி கருத்து

“மேரா பூத் சப்சே மஸ்பூத் சம்வாத் – கேரளம்” நிகழ்ச்சி

 

கேரள மக்கள் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியை வலுவாக ஆதரித்து வருவதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். மேலும், எல்டிஎஃப் மற்றும் யுடிஎஃப் ஆகிய இரு கூட்டணிகளின் வெற்று வாக்குறுதிகளை வாக்காளர்கள் புரிந்துகொண்டுவிட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

கேரள சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி இன்று மாலை நடைபெறவுள்ள “மேரா பூத் சப்சே மஸ்பூத் சம்வாத் – கேரளம்” நிகழ்ச்சியின் மூலம், ​​கட்சித் தொண்டர்கள் மற்றும் பொதுமக்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாட உள்ளார்.

இந்த சூழலில் பிரதமர் மோடி எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், “கேரளம் முழுவதும் உள்ள மக்கள் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியை உற்சாகமாக ஆதரித்து வருகின்றனர். எல்டிஎஃப் மற்றும் யுடிஎஃப் ஆகிய இரு கூட்டணிகளின் வெற்று வாக்குறுதிகளை அவர்கள் நன்கு புரிந்துகொண்டுவிட்டனர். இன்று மாலை 4:30 மணிக்கு நடைபெறவுள்ள ‘மேரா பூத் சப்சே மஸ்பூத் சம்வாத் – கேரளம்’ நிகழ்ச்சியை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்

.

2026-ஆம் ஆண்டிற்கான கேரள சட்டப்பேரவைத் தேர்தல்கள் ஏப்ரல் 9-ஆம் தேதி நடைபெறவுள்ளன. வாக்கு எண்ணிக்கை மே 4-ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கேரளாவில் LDF, UDF மற்றும் NDA என மும்முனைப் போட்டி நிலவுகிறது.

மார்ச் 31 அன்று, கேரள பாரதிய ஜனதா கட்சி தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டது. தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தால், கேரளத்தை உலகின் முக்கியமான சுற்றுலாத் தலமாக உருவாக்குவதாகவும், திருவனந்தபுரத்தை தகவல் தொழில்நுட்பத் தலைநகராகவும், கொச்சியை இந்தியாவின் கப்பல் கட்டுமான மையமாகவும், கோழிக்கோட்டை சுகாதாரம் மற்றும் மருத்துவ தலைநகராகவும், திருச்சூரை கலாச்சாரச் சுற்றுலாத் தலைநகராகவும், கடல்சார் ஏற்றுமதிக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் கொல்லத்தை சர்வதேச அளவில் போட்டியிடக்கூடிய ‘நீலப் பொருளாதார’ மையமாகவும், கண்ணூரைப் பாதுகாப்புத் துறை சார்ந்த புத்தாக்க மையமாகவும் மேம்படுத்துவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெண்கள் ‘பக்ஷ்ய ஆரோக்கிய சுரக்ஷா அட்டை’ மூலம், மருந்துகள் மற்றும் மளிகைப் பொருட்களை வாங்குவதற்காக மாதந்தோறும் ரூ. 2,500 தொகையை பெறலாம். மேலும், கேரளாவில் எய்ம்ஸ் மருத்துவமனை ஒன்றை நிறுவுவதாகவும், திருவனந்தபுரத்தை கண்ணூருடன் இணைக்கும் அதிவேக ரயில் பாதையை மேம்படுத்துவதாகவும் தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஏழைக் குடும்பங்களுக்கு ஆண்டுக்கு இரண்டு இலவச எல்பிஜி சிலிண்டர்கள் வழங்கப்படும். ஒவ்வொரு வீட்டிற்கும் மாதந்தோறும் 20,000 லிட்டர் இலவச தண்ணீர் வழங்கப்படும் எனவும் தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

What do you think?

Written by Thirukumaran

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

‘‘திமுக வேறு; பாஜக வேறு அல்ல’’ – திருச்சியில் விஜய் பிரச்சாரம்

“திரிணமூல் காங்கிரஸை வங்காள விரிகுடாவில் தூக்கி எறிவீர்” – மம்தா தொகுதியில் அமித் ஷா ஆவேசம்