தமிழகத்தில் தேனி, மதுரை, கோவை, திருச்சிராப்பள்ளி உள்ளிட்ட 8 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மே 18-ம் தேதி இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் வி.ஆர்.துரை வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழகத்தில் ஒரு சில இடங்களில் (வட தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும்) மழை பெய்துள்ளது. புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் மிதமானது முதல் கனமழை பெய்துள்ளது.
கடந்த 24 மணி நேர நிலவரப்படி, செங்கல்பட்டு மாவட்டம் நியூ சென்னை டவுன்ஷிப்பில் 5 செ.மீ., திருநெல்வேலி மாவட்டம் ஊத்துவில் 4 செ.மீ., கோயம்புத்தூர் மாவட்டம் பெரியநாயக்கன்பாளையத்தில் 3 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.
தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, சனிக்கிழமை காலை காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக அதே பகுதிகளில் நிலவியது.
இதன் காரணமாக, ராமநாதபுரம், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய 3 மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும். தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.
மே 17-ம் தேதி தேனி, திண்டுக்கல், மதுரை கோயம்புத்தூர், நீலகிரி ஆகிய 5 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும். தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் ஞாயிற்றுக்கிழமை இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.
மே 18, 19, 21, 22 ஆகிய தேதிகளில், தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், மே 20-ம் தேதி ஓரிரு இடங்களிலும் மிதமான மழை பெய்யக்கூடும்.

மே 18-ம் தேதி தேனி, திண்டுக்கல், மதுரை கோயம்புத்தூர், நீலகிரி, சிவகங்கை, கரூர், திருச்சிராப்பள்ளி ஆகிய 8 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.
மே 19-ம் தேதி திண்டுக்கல், தேனி, கோயம்புத்தூர், நீலகிரி ஆகிய 4 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்றும், நாளையும் (மே 16, 17) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
தென்மேற்கு பருவமழை:
தென்மேற்கு பருவமழை தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளிலும், தென்மேற்கு மற்றும் தென்கிழக்கு வங்கக்கடலின் சில பகுதிகளிலும், அந்தமான் கடல் பகுதிகள் மற்றும் நிகோபார் தீவுகளிலும், ஸ்ரீ விஜயபுரம் உட்பட அந்தமான் தீவுகளின் சில பகுதிகளிலும் சனிக்கிழமை (மே 16) தொடங்கியது. கேரளப்பகுதிகளில் தென் மேற்கு பருவமழை மே 26-ம் தேதி தொடங்கும்.
மீனவர்களுக்கான எச்சரிக்கை:
தென் தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகள், அந்தமான் கடல் பகுதிகள், தெற்கு வங்கக்கடல், மத்திய கிழக்கு வங்ககடல், மத்திய மேற்கு வங்கக்கடல், ஆந்திர கடலோரப்பகுதி, கேரள – கர்நாடகா கடலோரப்பகுதி, லட்சத்தீவுகளில் மே 20-ம் தேதி வரை பலத்த சூறாவளி காற்று வீசும். எனவே, இப்பகுதிகளுக்கு மேற்படி நாட்களில் செல்ல வேண்டாம் என்று மீனவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.


GIPHY App Key not set. Please check settings