in , , , ,

பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்……

தவெகவுக்கு அன்புமணி எச்சரிக்கை……

“இடைத்தேர்தல் வந்தால் 4 வேட்பாளர்களும் படுதோல்வி அடைவார்கள். ஆளும் கட்சிக்கு எதிராக அனைத்து எதிர்கட்சிகளும் ஒன்று சேர்ந்து பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம். அந்தளவுக்கு எங்களை தள்ளாதீர்கள்.” என பாமக தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார்.

பாமக தலைவர் அன்புமணி, புதுச்சேரியில் உள்ள பாமக முன்னாள் மாநில அமைப்பாளர் தன்ராஜ் வீட்டுக்கு இன்று வருகை தந்தார்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், “மக்களுடைய விருப்பத்துக்கு எதிராக எதிர்க்கட்சியைச் சேர்ந்த நான்கு எம்எல்ஏக்களை எந்தக் காரணமும் இன்றி திடீரென வெற்றி பெற்ற 20 நாட்களில் ராஜினாமா செய்ய வைத்து அடுத்த 10 நிமிடத்தில் தவெகவில் இணைத்துள்ளனர்.

இது ஜனநாயகப் படுகொலை மட்டுமல்ல, ஒரு மோசடி. நாங்கள் மட்டும் அல்ல தமிழக மக்களும் இதனை விரும்பவில்லை. கோடிக்கணக்கான இளைஞர்கள் ஒரு மாற்றம் வர வேண்டும் என்ற நோக்கத்தில் விஜய்யை வெற்றி பெற வைத்தார்கள். இது அந்த இளைஞர்களுடைய நம்பிக்கைக்கு எதிரான செயல். இது நேர்மையான முறையில் ஆட்சி செய்வதும் கிடையாது. இது குதிரை பேரத்தைவிட மோசமானது.

தமிழகம் இதுபோன்ற ஒரு சூழலை பார்த்தது கிடையாது. வாக்களித்த மக்கள் அவர்கள் என்ன தவறு செய்தார்கள். 20 நாட்களில்  ராஜினாமா செய்து உடனே இன்னொரு கட்சியில் சேர்வது நல்லதல்ல.

இடைத்தேர்தல் வந்தால் 4 வேட்பாளர்களும் படுதோல்வி அடைவார்கள். ஆளும் கட்சிக்கு எதிராக அனைத்து எதிர்கட்சிகளும் ஒன்று சேர்ந்து பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.  அந்தளவுக்கு எங்களை தள்ளாதீர்கள்.

மதுராந்தகம், பெருந்துரை, தாராபுரம் ஆகிய 3 தொகுதிகளின் வெற்றிக்கு பாமகவின் பங்களிப்பு மிகப்பெரியது. அங்குள்ள மக்கள் என்ன முட்டாள்களா? அல்லது தமிழக மக்கள் முட்டாள்களா?  இதுபோன்ற செயல்களில் ஈடுபடாதீர்கள். முதல்வர் விஜய், அவரது அமைச்சர்களும் மக்களை அலட்சியப்படுத்தாதீர்கள். கோடிக்கணக்கான இளைஞர்களும் இடைத்தேர்தலில் உங்களுக்கு எதிராக வாக்களிப்பார்கள்.

எவ்வளவு சிரமப்பட்டு இவர்களை எம்எல்ஏக்களாக எங்கள் கூட்டணி உருவாக்கி இருக்கின்றோம். அவர்களை வேண்டுமென்றே ராஜினாமா செய்துவிட்டு கட்சியில் இணைத்துக் கொண்டுள்ளீர்கள்.

மரகதம் குமரவேல் இனி மதுராந்தகம் தொகுதிக்குள் போக முடியாது. தாராபுரம், அம்பாசமுத்திரம், பெருந்துரையிலும் இதே நிலை தான். இதனை நிறுத்திக்கொள்ளுங்கள். இதுபோன்ற செயல்களில் ஈடுபடாதீர்கள்.

மக்கள் உங்களுக்கு 108 எம்எல்ஏக்களை அளித்து ஒரு தீர்ப்பை கொடுத்துள்ளனர். அந்த தீர்ப்பை மதியுங்கள். எதிர்கட்சினருக்கு பதவி, பணம் கொடுத்து ஆசைகாட்டி ராஜினாமா செய்ய வைப்பது என்ன செயல். இதனை நிறுத்திக்கொள்ளுங்கள்

மேகேதாட்டு தமிழகத்தின் உயிர்நாடி பிரச்சினை. அதில் கவனத்தை செலுத்துங்கள்.

5 ஏக்கருக்கு குறைவாக உள்ள விவசாயிகளுக்கு கூட்டுறவு கடன் முழுமையாக தள்ளுபடி செய்வோம் என்று சொன்னீர்கள். முதல்கட்டமாக ரூ. 50 ஆயிரம் தள்ளுபடி செய்திருக்கிறீர்கள். 69 விழுக்காடு இடஒதுக்கீட்டை பாதுகாக்க ஆய்வை நடத்தி இருக்கிறீர்கள். இதையெல்லாம் நாங்கள் வரவேற்கின்றோம்.

சமுக நீதி கணக்கெடுப்பை நடத்தி தமிழகத்தில் உள்ள 8 கோடி மக்களில் 2.5 கோடி மக்கள் எந்த நிலையில் இருக்கிறார்கள் என்பதை தெரிந்து கொள்ளுங்கள். அவர்களுக்கான திட்டங்களை செயல்படுத்துங்கள். அதனை விடுத்து ஜனநாயகத்துக்கு எதிரான செயலை செய்ய வேண்டாம்,” என்றார்.

தொடர்ந்து அவர்,  “தவெக அரசுக்கு ஓரிரு மாதங்கள் அவகாசம் கொடுக்க வேண்டும். அதன்பிறகு அவர்கள் கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்றால் நாங்கள் கேட்போம். திமுக 505 வாக்குறுதிகளை கொடுத்தார்கள் கடந்த 5 ஆண்டு காலத்தில் 66 வாக்குறுதிகளை மட்டுமே முழுமையாக நிறைவேற்றி உள்ளனர். ஆகவே தவெகவுக்கு சில காலம் கொடுக்க வேண்டும்.

அதிமுகவின் உட்கட்சி விவகாரத்தில் தலையிட விரும்பவில்லை. சட்டப்பேரவையில் வாக்கெடுப்பை பாமக எதிர்க்கவில்லை. ஆதரிக்கவும் இல்லை. சமூக நீதிக் கணக்கெடுப்பு நடத்துவோம், டாஸ்மாக்கில் படிப்படியாக மதுவிலக்கு கொண்டு வருவோம், தனியார் தொழிற்சாலைகளில் 75 விழுக்காடு உள்ளூர் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு, மணல் கொள்ளையை தடுப்போம் போன்ற வாக்குறுதிகளை முதல்வர் விஜய் கொடுத்துள்ளார்.

அத்தனை வாக்குறுதிகளும் பாமக கொடுத்த வாக்குறுதி. எங்களுக்கு தமிழக மக்கள் பயன்பெற வேண்டும். கண்மூடித்தனமாக நாங்கள் எதிர்க்க மாட்டோம். அதே நேரத்தில் கணமூடித்தனமாக நாங்கள் ஆதரவு தெரிவிக்க மாட்டோம. அதனால் தான் சட்டப்பேரவையில் வாக்கெடுப்பின் போது பாமக நடுநிலை வகித்தது.” என்று தெரிவித்தார்.

What do you think?

Written by Thirukumaran

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

அறிவிப்பை நாளை காலை வெளியிடப் போவதாக சபாநாயகர் தெரிவித்துள்ளார்…….

ஒற்றுமையாக அதிமுக வலுவாக செயல்படும்………