17-வது சட்டப்பேரவையின் முதல் கூட்டம் இன்று காலை தொடங்கியது. இதில், தற்காலிக பேரவைத் தலைவர் கருப்பையா முன்னிலையில், முதல்வர் ஜோசப் விஜய் உட்பட பேரவையின் புதிய உறுப்பினர்கள் எம்எல்ஏவாக பதவியேற்றனர். முதல் நாளின் ஹைலைட்ஸ் இங்கே…
> காலை 9 மணி முதலே உறுப்பினர்கள் ஒவ்வொருவராக தலைமைச் செயலகம் வரத் தொடங்கினர்.
> தவெக உறுப்பினர்கள் பலரும் விஜய்யின் ட்ரேட்மார்க் உடையான வெள்ளை சட்டை, காக்கி பேன்ட் அணிந்து பேரவைக்கு வந்தனர்.
> தேமுதிக சார்பில் வெற்றிப் பெற்ற அக்கட்சியில் பொதுச் செயலாளர் பிரேமலதா கட்சிப் புடவையில் வருகை தந்தார்.

> சேலம் தெற்கு தொகுதி தவெக எம்எல்ஏ பார்த்திபன் பேரவைக்குள் செல்லும் முன்பு, நுழைவாயிலில் தரையில் மண்டியிட்டு வணங்கிச் சென்றார்.
> அதிமுகவில் உட்கட்சிக் குழப்பம் ஏற்பட்டுள்ளதாக சொல்லப்படும் நிலையில், எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக எம்எல்ஏக்கள் ஒரு குழுவாகவும், எஸ்.பி.வேலுமணி தலைமையில் ஒரு குழுவாகவும் தனித்தனியாக வந்தனர். இருவரும் ஒருவருக்கு ஒருவர் பேசிக் கொள்ளவில்லை.
> அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் எந்த அணியுடனும் சேராமல் தனியாக வந்தார். ஆனால் அவைக்கு வந்தும் பதவியேற்பில் பங்கேற்கவில்லை
> எதிர்கட்சித் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள உதயநிதி ஸ்டாலின் பேரவைச் செல்லும் முன் தனது தந்தையும் முன்னாள் முதல்வருமான மு.க.ஸ்டாலினிடம் வாழ்த்து பெற்று விட்டு வருகை தந்தார்.
> முதல்வர் விஜய் – எதிர்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் இருவரும் எதிரெதிரே அமைக்கப்பட்ட இருக்கைகளில் அமர்ந்திருந்தனர். முதல்வர் விஜய்க்கு அருகில் அமைச்சர்கள் ஆனந்த், ஆதவ் அர்ஜுனா ஆகியோர் அமர்ந்திருந்தனர். உதயநிதி அருகே முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு அமர்ந்திருந்தார்.
> சரியாக 9.30 மணிக்கு சட்டப்பேரவை கூட்டம் தொடங்கியது. தற்காலிக பேரவை தலைவர் கருப்பையா தொடக்க உரையாற்றினார்.
> நேற்று பதவியேற்புக்கு கோட் சூட்டில் வந்த விஜய், இன்றும் அதே போல கருப்பு கோட் அணிந்து பேரவைக்கு வந்தார். இதற்கு முன்னால் முதல்வராக இருந்தவர்கள் அனைவரும் வேட்டி, சட்டை அணிந்தபடி பேரவைக்கு வந்த நிலையில், தற்போது முதல் முறையாக விஜய் கோட் சூட் அணிந்து பேரவைக்கு வருவது பேசுபொருளாகியுள்ளது.
> முதல்வர் விஜய்யை பெரம்பூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினராக பதவியேற்குமாறு பேரவை தலைவர் அழைப்பு விடுத்தார்.
முதல்வர் விஜய் நேற்று பதவியேற்கும்போது தனது உறுதிமொழியில் ‘ஆண்டவன் அறிய’ என்று குறிப்பிட்டார். ஆனால் இன்று பதவியேற்கும்போது ‘உளமாற உறுதி ஏற்கிறேன்’ என்று குறிப்பிட்டார்.
> விஜய்யை தொடர்ந்து ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, அருண்ராஜ், ராஜ்மோகன் உள்ளிட்ட அமைச்சர்கள் பதவியேற்றனர்.
> அமைச்சர் கீர்த்தனா தனது வெற்றிச் சான்றிதழை வீட்டிலேயே மறந்துவைத்து விட்டதாக பேரவைத் தலைவரிடம் கூறியதால் அவர் இன்று பதவியேற்கவில்லை.
> உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட எதிர்கட்சி உறுப்பினர்களில் பெரும்பாலானோர் முதல்வர் விஜய்க்கு வணக்கம் வைக்கவில்லை. முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வணக்கம் வைத்துவிட்டுச் சென்றார்.



GIPHY App Key not set. Please check settings